குருப்,Kurup
Advertisement
3

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு : வேபாரர் பிலிம்ஸ் & எம் ஸ்டார் என்டர்டெயின்மென்ட்

இயக்கம் : ஸ்ரீநாத் ராஜேந்திரன்

இசை : சுசின் சியாம்

நடிப்பு : துல்கர் சல்மான், இந்திரஜித் சுகுமாரன், சோபிதா துலிபாலா, சன்னி வெய்ன், ஷைன் டாம் சாக்கோ மற்றும் பலர்

வெளியான தேதி : 12.11.21 (தியேட்டர் வெளியீடு)

நேரம் : 2 மணி 36 நிமிடங்கள்

ரேட்டிங் : 3/5


கேரளாவில் எண்பதுகளில் பரபரப்பாக பேசப்பட்ட சுகுமார குரூப் என்கிற குற்றவாளியை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் இது. துல்கர் சல்மானை பத்து வருடங்களுக்கு முன்பு முதன்முதலில் ஹீரோவாக அறிமுகப்படுத்திய ஸ்ரீநாத் ராஜேந்திரன் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார்.


கேரளாவை சேர்ந்த கோபி கிருஷ்ணனுக்கு சென்னை ஏர்போர்ஸில் போலீஸாக வேலை கிடைக்கிறது. ஆனால் அதில் நாட்டமில்லாத கோபிகிருஷ்ணன், அங்கே கோட்டாவில் போலீசாருக்கு கிடைக்கும் பொருட்களை எல்லாம் வெளியே பிளாக்கில் விற்று சம்பாதிக்க ஆரம்பிக்கிறார். இதன் காரணமாக மும்பையில் உள்ள ஒரு கடுமையான அதிகாரியின் கீழ் பணிமாற்றம் செய்யப்படுகிறார். ஆனால் அங்கேயும் தன் கைவரிசையை காட்டும் சுதாகர குருப்அங்கிருந்து வெளியேறி சுதாகர குருப் என பெயரை மாற்றிக்கொண்டு தனது காதலியை திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டுக்கு செல்கிறார்.


அங்கே ஓரளவு வசதியாக சம்பாதிக்கும் சுதாகர குருப் ஒருமுறை தான் மட்டும் கேரளாவுக்கு திரும்புகிறார். அப்போது அங்கே இருக்கும் தனது மூன்று நண்பர்களிடம் வெளிநாட்டில் தன் பெயரில் பல லட்சம் மதிப்புள்ள இன்ஷூரன்ஸ் பாலிசி இருப்பதாகவும், தான் இறந்துவிட்டால் அந்த பணம் முழுவதும் உடனே மொத்தமாக கிடைத்துவிடும் என்றும் கூறி நான் இறந்து விட்டதாக சித்தரிக்க நண்பர்களின் உதவியை நாடுகிறார். அந்த விதமாக சுதாகர குரூப் கார் விபத்தில் இறந்ததாக நண்பர்கள் மூலம் நாடகம் அரங்கேறுகிறது.


இதை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி கிருஷ்ணதாஸ், இறந்தது சுதாகர குரூப் அல்ல என்றும் ஹோட்டலில் வேலை பார்க்கும் சார்லி என்கிற நபர் தான் என்றும் கண்டுபிடிக்கிறார். ஆனால் வெறும் இன்சூரன்ஸ் தொகையை பெறுவதற்காக மட்டுமே இந்த நாடகம் நடத்தப்படவில்லை என்பதும் அதற்கு பின்னால் ஏதோ வலுவான காரணம் இருக்கிறது என்றும் சந்தேகப்படும் கிருஷ்ணதாஸ், சுதாகர குருப்பை வேட்டையாட துவங்குகிறார். இன்சூரன்ஸ் பணத்திற்காக இந்த இறப்பு நாடகம் நடக்கவில்லை என்றால் சுதாகர குருப் வேறு எதற்காக இப்படி ஒரு காரியத்தில் இறங்கினார், இறுதியில் சுதாகர குரூப் போலீஸின் பிடியில் சிக்கினாரா என்பது மீதிக்கதை.


இன்சூரன்ஸ் பணத்திற்காக சக மனிதர் ஒருவரை கொலை செய்த, தேடப்படும் குற்றவாளியான ஒருவரை ஹீரோவாக காட்டி இருப்பார்களா அல்லது படம் முழுவதும் வில்லனாகவே காட்டி இருப்பார்களா என்ற சந்தேகத்துடன் படம் பார்க்க ஆரம்பித்தால், நம் எண்ணத்தை மாற்றும் விதமாக அந்த கதாபாத்திரத்தை இயல்பான ஒரு ஆன்டி ஹீரோவாக கையாண்டு இருக்கிறார்கள்.


பல வருடங்களுக்கு முந்தைய அந்தகுருப் கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் கச்சிதமாக பொருத்தியுள்ளார். சாதாரண கோபிகிருஷ்ணனாக இருந்து குருப்பாக அவர் மாறும் விதம் வெகு இயல்பாகவே சித்தரிக்கப்பட்டுள்ளது. இடைவேளைக்குப்பின் போலீஸ் அதிகாரியுடன் அவர் ஆடும் பூனை எலி ஆட்டம் படத்தின் விறுவிறுப்பை கூட்டுகிறது.


காவல்துறை விசாரணை அதிகாரி கிருஷ்ணதாஸ் ஆக இந்திரஜித் சுகுமாரன் படம் முழுவதும் வருகிறார். குறிப்பாக இடைவேளைக்கு பிறகு அவரது விசாரணை படத்திற்கு விறுவிறுப்பு கூட்டுகிறது. நாயகனுக்கு சிறுவயதிலிருந்தே பழக்கமான தோழிதான் அவரது காதலியாக, மனைவியாக மாறுகிறார் என்பதால் அந்த கதாபாத்திரத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இருந்தாலும் அந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ள சோபிதா துலிபாலா தன்னால் இயன்றவரை சிறப்பாக செய்துள்ளார்.


துல்கர் சல்மான், இந்திரஜித் ஆகியோரை தவிர மூன்றாவதாக முக்கியத்துவம் பெறும் கதாபாத்திரத்தில் ஷைன் டாம் சாக்கோ நடித்துள்ளார். சுதாகர குரூப்புக்கு உதவி செய்து லட்சங்களை சம்பாதிப்பதற்காக, அவர் அதிரடி நடவடிக்கையில் இறங்குவது பகீர் என்கிறது. தற்போது முன்னணி ஹீரோவாக நடித்து வரும் டொவினோ தாமஸ் ஒரே ஒரு காட்சியில் வந்து பரிதாபமாக இறந்து போகும் சார்லி கதாபாத்திரத்தில் நடித்திருப்பது ஆச்சரியமான விஷயம்தான். அதேபோல துல்கரின் நண்பராக பல படங்களில் நடித்துள்ள சன்னி வெய்ன் இந்த படத்தில் ஏதாவது திருப்பம் நிகழ்த்துவார் என எதிர்பார்த்தால் ஆரம்பக் காட்சிகளிலேயே காணாமல் போய்விடுகிறார்.


இதுவரை நிஜத்தில் நடந்த நிகழ்வுப்படி இன்சூரன்ஸ் பணத்திற்காக மட்டுமே இந்த ஆள்மாறாட்டமும் கொலையும் நடந்து இருப்பதாக பலரும் அறிந்து இருக்கும் வேளையில், அதற்கு பின்னணியில் இன்னொரு காரணமும் இருக்கிறது என புதிதாக திரைக்கதை எழுதி அதை எந்த இடத்திலும் தொய்வில்லாமல் நகர்த்தி சென்றிருக்கிறார் இயக்குனர் ஸ்ரீநாத் ராஜேந்திரன். குறிப்பாக இடைவேளைக்கு பிறகு , தான் தப்பித்துப் போகும் இடமெல்லாம் போலீஸ் துரத்தி வர, அதற்கு பதிலாக அவர்களை தான் பின்தொடர துல்கர் முடிவு எடுப்பதும் அதனாலேயே அவருக்கு தப்பிக்க வாய்ப்பு கிடைப்பதும் நிச்சயம் நாம் எதிர்பாராத திருப்பங்கள்.


அந்த வகையில் ஒரு குற்றவாளியை எந்தவிதத்திலும் நியாயப்படுத்தாமல் அதேசமயம் இப்படித்தான் நடந்திருக்கக் கூடும் என புதிய கண்ணோட்டத்தில் அழகாக இந்த படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ஸ்ரீநாத் ராஜேந்திரன். குறிப்பாக எந்த ஒரு சண்டைக்காட்சியும் இல்லாமல் ஒரு விறுவிறுப்பான இன்வெஸ்டிகேஷன் திரில்லராக படத்தை இயக்கியிருப்பதற்காக அவரை தாராளமாக பாராட்டலாம்.


குருப் ; விறுவிறுப்பான கண்ணாமூச்சி ஆட்டம்

 

குருப் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

குருப்

  • நடிகர்
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓