சின்னஞ்சிறு கிளியே,ChinnanjiruKiliye

சின்னஞ்சிறு கிளியே - பட காட்சிகள் ↓

Advertisement
2.75

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - செண்பா கிரியேஷன்ஸ்
இயக்கம் - சபரிநாதன் முத்துப்பாண்டியன்
இசை - மஸ்தான் காதர்
நடிப்பு - செந்தில்நாதன், சான்ட்ரா நாயர்
வெளியான தேதி - 24 செப்டம்பர் 2021
நேரம் - 2 மணி நேரம் 8 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5

அஜித் நடித்து வெளிவந்த என்னை அறிந்தால், சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த காக்கி சட்டை படங்களில் மனித உறுப்புகளைக் கடத்துவது பற்றிய விவகாரத்தைத்தான் கதையாக வைத்திருந்தார்கள். அவை கமர்ஷியல் மசாலாப் படங்கள்.

இந்தப் படமும் அந்த வகைப் படம்தான், ஆனால், யதார்த்தனமான ஒரு திரைப்படம். ஒரு அப்பாவுக்கும், மகளுக்கும் இடையேயான பாசப்பிணைப்புடன், ஒரு குடும்பத்தைச் சுற்றி நிகழும் கதையாக, ஒரு சராசரி மனிதனால் அவனது வாழ்க்கையில் என்ன செய்ய முடியும் என்பதை மட்டும் சரியாகச் சொல்லியிருக்கும் படம். இயக்குனர் சபரிநாதன் முத்துப்பாண்டியன் கதையின் மீதும், கதாபாத்திரங்களின் மீதும் மட்டும் நம்பிக்கை வைத்து இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார்.

ஒரு சிறிய ஊரில் இயற்கை உணவகம் நடத்தி வருபவர் கதையின் நாயகன் செந்தில்நாதன். அவரது தாத்தா, பாட்டி என குடும்பமே இயற்கை மருத்துவத்தில் சிறந்தவர்கள். தனது மனைவியை பிரசவத்தில் பறிகொடுத்த செந்தில்நாதன் தனது ஐந்து வயது மகளை மிகவும் பாசத்துடன் வளர்க்கிறார். ஒரு திருவிழாவில் மகள் காணாமல் போக, சில மணி நேரம் கழித்து மகளைக் கண்டுபிடிக்கிறார். ஆனால், அவரது மகளின் முதுகெலும்பிலிருந்து எலும்பு மஜ்ஜையை யாரோ ஒரு கும்பல் திருடியதைக் கண்டுபிடிக்கிறார். அவர்கள் யார் எனக் கண்டுபிடிக்க களத்தில் இறங்குகிறார். அதில் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இயற்கை மருத்துவம், இயற்கை வணவு, தமிழ்ப் பற்று, குடும்ப உறவுகள் என பாரம்பரியத்தின் மீது அதிகப் பற்று வைத்துள்ளர் இயக்குனர் என்பது காட்சிக்குக் காட்சி புரிகிறது. தாத்தா, பாட்டி, பேரன், கொள்ளுப் பேத்தி, தாய்மாமன், என குடும்பப் பாசத்தை நெகிழ்வான உணர்வுடன் காட்சிப்படுத்தி இருக்கிறார்.

இயற்கை மருத்துவமும், பாரம்பரியமும் தான் நமக்கு ஏற்றவை, ஆங்கில மருத்துவம், இன்றைய உணவு முறைப் பழக்கம் ஆகியவை நமக்கு எதிரானவை என உறுதியாக வாழும் கதையின் நாயகன் கதாபாத்திரத்தில் செந்தில்நாதன். உணர்வுபூர்வமான காட்சிகளில் நம் பக்கத்து வீட்டு மனிதராய் காட்சியளிக்கிறார். எந்த ஹீரோயிசமும் செய்யாத ஒரு சராசரி அப்பா என்ன செய்ய முடியுமா அதை இவரது கதாபாத்திரம் மூலம் காட்டியிருக்கிறார் இயக்குனர். அதை உணர்ந்து நடித்திருக்கிறார் செந்தில்நாதன்.

செந்தில்நாதனை காதலிக்க ஆரம்பித்து பின் அவரது மனைவியாகி ஒரு பெண் குழந்தையைப் பெற்றுக் கொடுத்துவிட்டு இறந்து போகிறார் சான்ட்ரா நாயர். தெத்துப் பல் தெரிய அழகாக சிரித்துக் கொண்டே இருக்கிறார். கொஞ்ச நேரமே வந்தாலும் மனதில் இடம் பிடிக்கிறார்.

செந்தில்நாதன் பாட்டியாக குலப்புள்ளி லீலா. ஊருக்கெல்லாம் பலருக்கு பிரசவம் பார்த்தவர், தனது மனைவியை மருத்துவனையில் சேர்க்க ஒரு காரணமாக இருந்துவிட்டார் என பாட்டியிடம் பேசாமல் இருக்கிறார் செந்தில்நாதன். ஆனாலும், தனது பேரன் மீதும், கொள்ளுப் பேத்தி மீதும் அவ்வளவு பாசமாய் இருக்கிறார் லீலா. ஒரு பாட்டி கதாபாத்திரத்திற்கும் தமிழ் சினிமாவில் இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியம் தான். தாத்தாவாக விக்ரமாதித்யன், மச்சானா நடித்திருப்பவர் ஆகியோரும் இயல்பாய் நடித்திருக்கிறார்கள்.

மஸ்தான் - காதர் இசையில் பாடல்கள் ஓரளவிற்கே ரசிக்க வைத்துள்ளன. எமோஷனல் காட்சிகளில் பின்னணி இசையில் மெனக்கெட்டிருக்கிறார்கள். கதையை மீறாத இயல்பான படங்களுக்கு என்ன மாதிரியான ஒளிப்பதிவு வேண்டுமோ அதைச் சரியாகக் கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பாண்டியன்.

செந்தில்நாதன், தன் மகளிடம் இருந்து எலும்பு மஜ்ஜையைத் திருடிய கூட்டத்தை சீக்கிரத்திலேயே கண்டுபிடித்து விடுகிறார் என்பது மட்டும் வழக்கமான சினிமாத்தனமாக உள்ளது. மற்றபடி பாரம்பரியம், கலாச்சாரம், உறவு என இம்மண்ணின் பெருமையை தூக்கி நிறுத்திப் பேசும் படம்.

சின்னஞ்சிறு கிளியே - பிள்ளைச் செல்வம்

 

சின்னஞ்சிறு கிளியே தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

சின்னஞ்சிறு கிளியே

  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓