நடிப்பு - ஆண்டனி சகாயராஜ், சிவா நிஷாந்த், ஐரா ஜெயின், திவ்யா ஏழுமலை
தயாரிப்பு - மலர் மூவி மேக்கர்ஸ், ஐ கிரியேஷன்ஸ்
இயக்கம் - ஹரி உத்ரா
இசை - ஜெய் கிரிஷ் - அலிமிர்சாக்
வெளியான தேதி - 28 பிப்ரவரி 2020
நேரம் - 1 மணி நேரம் 50 நிமிடம்
ரேட்டிங் - 2/5
ஒவ்வொரு வாரமும் தமிழ் சினிமாவில் நான்கைந்து படங்கள் வெளிவருகின்றன. ஆனால், அவற்றில் நான்கு வாரங்களுக்கு ஒரு முறை கூட சமூக சிந்தனையுடன் கூடிய படங்கள் வருவதில்லை.
ஒரு சில இயக்குனர்கள் மட்டுமே தங்கள் படங்களை வியாபார ரீதியான படமாக எடுப்பதில் முனைப்பு கூட்டாமல், மக்களுக்குப் பயன்படும் விதத்திலும் ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் விதத்திலும் படங்களைக் கொடுக்கிறார்கள். இந்த 'கல்தா' படத்தை அப்படி ஒரு விழிப்புணர்வு படமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஹரி உத்ரா.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏதோவொரு பிரச்சினை காலம் காலமாக இருந்து கொண்டுதான் வருகிறது. அதிலும் மற்ற மாநிலங்களின் எல்லைகளில் அமைந்துள்ள சில மாவட்டங்களில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.
கேரள மாநிலத்தின் எல்லையோரத்தில் அமைந்துள்ள மாவட்டங்களில் சில முக்கிய பிரச்சினைகள், கடந்த சில வருடங்களாக விஸ்வரூபம் எடுத்துள்ளன. கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள், மாமிசக் கழிவுகள் ஆகியவற்றை தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் இரவோடு இரவாகக் கொட்டிவிட்டுச் செல்கிறார்கள். அதனால், சுற்றுப்புறச் சூழ்நிலை, சுகாதாரச் சீர்கேடு ஆகியவை நடக்கின்றன. இதனால் பலரும் பாதிக்கப்படுகிறார்கள். அப்படி பாதிக்கப்பட்ட ஒரு கிராம மக்களின் வாழ்க்கையைச் சொல்லியிருக்கும் படம்தான் இந்த 'கல்தா'.
ஆனால், படத்தில் எங்கெல்லாம் 'கேரளா' என்ற பெயர் இடம் பெறுகிறதோ அங்கெல்லாம் சென்சார் 'கட்' செய்துள்ளார்கள். டிவி செய்திகளில் இடம் பெற்றுள்ள 'கேரளா' என்ற வார்த்தையைக் கூட அவர்கள் அனுமதிக்காததன் காரணம் என்ன என்பது தெரியவில்லை. டிவி செய்திகளில் இடம் பெறுவது சினிமாவில் இடம் பெறக் கூடாதா ?.
தங்கள் கிராமத்தில் வந்து கொட்டப்படும் அப்படிப்பட்ட கழிவுகளால் ஏற்படும் சீர்கேட்டைத் தடுக்க ஆண்டனி, சிவா நிஷாந்த் ஆகியோர் போராடுகிறார்கள். ஆனால், அவர்கள் சாதி ரீதியாக அடக்க நினைக்கிறது ஒரு கூட்டம். கழிவுகள் கொட்டப்படுவதற்கு கவுன்சிலர், இன்ஸ்பெக்டர் ஆகியோரும் பக்க பலமாக இருக்கிறார்கள். கழிவுகளால் ஏற்படும் சீர்கேட்டால் சிலர் ரத்த வாந்தி எடுத்து இறக்கிறார்கள். ஆண்டனியின் மனைவியும் அப்படி இருக்கிறார். அதன்பின் அவர் குடிபோதைக்கு ஆளாகிறார். அவரைக் கொலை செய்கிறார் கவுன்சிலர். இதன் பின் சிவா நிஷாந்த் கவுன்சிலரை எதிர்த்து களம் இறங்குகிறார். அதில் அவர் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
ஆண்டனி, கொஞ்ச நேரமே படத்தில் வருகிறார். அதன்பின் அவருடைய மனைவியும், அவரும் அநியாயமாக இறந்து போகிறார்கள். சிவா நிஷாந்த் ஆறடி உயரத்தில் ஆக்ஷன் ஹீரோவுக்குப் பொருத்தமானவராக இருக்கிறார். தன் ஊருக்கு நடக்கும் அநியாயத்தைத் தட்டிக் கேட்கும் தைரியசாலியாக நடித்திருக்கிறார். படத்தில் நடித்துள்ள நாயகிகளான ஐரா, திவ்யா ஏழுமலை சாதாரணப் பெண்களைப் போல கதாபாத்திரத்திற்குப் பொருத்தமாக நடித்திருக்கிறார்கள். அப்பா கதாபாத்திரத்தில் கஜராஜ் நெகிழ வைக்கிறார். கவுன்சிலராக நடித்திருப்பவர் இயல்பான வில்லத்தனத்துடன் கொலை வெறி காட்டுகிறார்.
படத்திற்காகத் தேர்ந்தெடுத்த கிராமம் சினிமாத்தனமில்லாமல் இயல்பான கதைக்களமாக இருக்கிறது. ஜெய் கிரிஷ், அலிமிர்சாக் இருவரது பின்னணி இசையும் திரைக்கதையின் தொய்வைத் தடுத்து நிறுத்த முயற்சித்திருக்கிறது.
கருத்தையும், கதையையும் யோசித்த இயக்குனர் படத்தின் மேக்கிங்கிலும், திரைக்கதையிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். இந்தப் படத்திற்கான குறைகளை கவனத்தில் கொண்டால் அடுத்த படத்திலாவது அதைச் சரி செய்து கருத்துடன் கூடிய நல்ல படத்தை இயக்குனர் கொடுக்க வாய்ப்புள்ளது.
கல்தா - கருத்தா...