2.5

விமர்சனம்

Advertisement

நடிப்பு - ஸ்ரீராம் கார்த்திக், சாயாதேவி, விஷ்ணு ராமசாமி
தயாரிப்பு - ரூபி பிலிம்ஸ்
இயக்கம் - போஸ் வெங்கட்
இசை - ஹரி சாய்
வெளியான தேதி - 21 பிப்ரவரி 2020
நேரம் - 2 மணி நேரம் 12 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5

தமிழ் சினிமாவில் 90களில்தான் ஒரு குறிப்பிட்ட பகுதியை, ஒரு குறிப்பிட்ட சாதியை மையமாக வைத்து நிறைய படங்கள் வெளிவந்தன. அப்படிப்பட்ட படங்கள் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றதால் அம்மாதிரியான படங்கள் இடைவெளி இல்லாமல் வந்து கொண்டிருந்தன.

2000த்திற்குப் பிறகுதான் அம்மாதிரியான படங்கள் வெளிவருவது முற்றிலுமாகக் குறைந்து போனது. ஆனால், கடந்த சில வருடங்களாக ஒரு சில இயக்குனர்கள் மீண்டும் அந்த சாதியப் பின்னணியை கையில் எடுத்துக் கொண்டு தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறார்கள்.

இந்த கன்னி மாடம் படம் ஆணவக் கொலையை பின்னணியாகக் கொண்ட ஒரு படம். குணச்சித்திர நடிகராக பல படங்களில் நடித்த போஸ் வெங்கட் இயக்குனராக அறிமுகமாகி உள்ள படம். முதல் படத்திலேயே துணிச்சலான ஒரு கதையை எடுத்துள்ளார்.

சாதி தான் பெரிது என நினைக்கும் அப்பாவிற்கு அவரது பாணியிலேயே நாயகன் தண்டனை கொடுத்து படத்தை முடிப்பது எதிர்பாராத அதிர்ச்சி. சினிமாத்தனமான முடிவாக இருந்தாலும், இப்படி ஒரு துணிச்சலான முடிவுக்காகவே இயக்குனரைப் பாராட்டலாம்.

சென்னையில் ஆட்டோ ஓட்டி வருபவர் ஸ்ரீராம் கார்த்திக். வெளியூரிலிருந்து இளம் கலப்புத் திருமண காதல் ஜோடி விஷ்ணு ராமசாமி, சாயாதேவி திருமணம் செய்து கொண்டுவிட்டு ஸ்ரீராம் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் குடி வருகிறார்கள். இந்தத் திருமணம் பிடிக்காத விஷ்ணு உறவினர், சென்னையில் சாயாதேவியைக் கொலை செய்துவிட்டு விஷ்ணுவை அழைத்துச் செல்லத் துடிக்கிறார்கள். ஆனால், ஒரு விபத்தில் விஷ்ணு மரணமடைகிறார். தனிமைப்படுத்தப்படும் சாயாதேவிக்கு ஆதரவாக இருந்து அவருக்கு ஒரு வீடு பார்த்துக் கொடுத்து தங்க வைக்கிறார் ஸ்ரீராம். தானும், சாயாவும் கணவன் மனைவி என பொய் சொல்லிய பின்தான் அவர்களுக்கு வீடு கிடைக்கிறது. இந்நிலையில் சாயாதேவி கர்ப்பமடைகிறார். ஸ்ரீராமுக்கு பாரமாக இருக்கக் கூடாதென வீட்டை விட்டு வெளியேற முடிவெடுக்கிறார். விஷ்ணுவின் தாய்மாமா சாயாவைக் கொலை செய்ய மீண்டும் சென்னை வருகிறார். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இந்தப் படம் வெளியாவதற்கு முன்பே இயக்குனர் போஸ் வெங்கட், படத்தின் கிளைமாக்சை யாராலும் யூகிக்க முடியாது என்று சொன்னார். அது போலவே நிச்சயம் படம் இப்படித்தான் முடியும் என்று யாராலும் கணிக்க முடியாது. யாருக்காவது இப்படித்தான் படம் முடியும் என்று லேசாகத் தோன்றினால் அவர்கள் சினிமாவைக் கரைத்துக் குடித்தவர்கள். ஹிஹி.... நமக்கு படம் இப்படித்தான் முடியும் என்று தோன்றியது என்பதை தன்னடக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். சாட்சிக்கு நம் பக்கத்து சீட்டில் படம் பார்த்தவரிடம் கேட்டு நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

படத்தின் கதாபாத்திரங்கள் அதற்கான தேர்வு ஆகியவற்றை மிகச் சரியாகச் செய்திருக்கிறார் இயக்குனர் போஸ் வெங்கட். நாயகன் ஸ்ரீராம் கார்த்திக், இரண்டாவது நாயகன் விஷ்ணு ராமசாமி, கதாநாயகி சாயாதேவி, ஆடுகளம் முருகதாஸ், கஜராஜ், சூப்பர் குட் சுப்பிரமணி, பிரியங்கா சங்கர், வலினா பிரின்சஸ் என ஒவ்வொருவரும் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவாக நடித்திருக்கிறார்கள்.

ஹரி சாய் இசையமைப்பில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசையில் கவனம் செலுத்தியிருக்கிறார். ஆனாலும், இன்று நீ நாளை நான் படத்தின் இளையராஜா இசையில் இடம் பெற்ற சூப்பர் ஹிட் பாடலான பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம் பாடலை அழகாக காப்பியடித்து, ஓயாத மேகம் எனக் கொடுத்திருக்கிறார்.

கதையிலும், கதாபாத்திரங்களிலும் கவனம் செலுத்திய அளவிற்கு திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். படம் மெதுவாக நகர்வது போன்ற உணர்வு படத்திற்கு மைனஸ். முதல் படம் என்பதால் சில குறைகள் இருக்கிறது. அடுத்த படங்களில் சரி செய்து கொள்வார் என நம்புவோம்.

கன்னி மாடம் - கன்னி முயற்சி

 

பட குழுவினர்

கன்னி மாடம்

  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓