டகால்டி,Dagalti

டகால்டி - பட காட்சிகள் ↓

Advertisement
2.25

விமர்சனம்

Advertisement

நடிப்பு - சந்தானம், ரித்திகா சென், யோகி பாபு
தயாரிப்பு - 18 ரீல்ஸ், ஹேன்ட்மேட் பிலிம்ஸ்
இயக்கம் - விஜய் ஆனந்த்
இசை - விஜய் நரேன்
வெளியான தேதி - 31 ஜனவரி 2020
நேரம் - 2 மணி நேரம் 1 நிமிடம்
ரேட்டிங் - 2.25/5

2019ம் ஆண்டில் சந்தானம் நடித்து வெளிவந்த இரண்டு படங்களான 'தில்லுக்கு துட்டு 2, ஏ 1' ஆகிய இரண்டு படங்களும் ஓரளவிற்கு வெற்றிகரமாக ஓடின. கடந்த ஆண்டில் சில முன்னணி நாயகர்கள் நடித்த படங்கள் கூட தடுமாறிக் கொண்டிருக்க, சந்தானம் நடித்த இரண்டு படங்களும் வெற்றிகரமாக ஒடியது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.

இந்த ஆண்டில் சந்தானம் நாயகனாக நடித்து வெளிவந்துள்ள படம் 'டகால்டி'. இந்தப் படத்துடன் 'சர்வர் சுந்தரம்' படமும் வெளிவர வேண்டியதாக இருந்தது. ஆனால், 'டகால்டி' குழுவினர் அளித்த அழுத்தத்தில் 'சர்வர் சுந்தரம்' படத்தின் வெளியீட்டை பஞ்சாயத்து பண்ணி தள்ளி வைத்தார்கள். படத்தை ஏன் தள்ளி வைத்தார்கள் என்பதன் காரணம் இப்போதுதான் புரிகிறது. அப்படியென்றால் 'சர்வர் சுந்தரம்' படம் 'டகால்டி'யை விட நன்றாக இருக்குமோ என்னவோ ?.

சந்தானம் நாயகனாக நடிக்கும் படங்களில் நாம் கதைகளை எதிர்பார்ப்பதைவிட காமெடியைத்தான் எதிர்பார்ப்போம். ஆனால், அவரே இந்தப் படத்தில் காமெடிக்காக யோகி பாபுவுடன் கை கோர்த்திருப்பது ஆச்சரியம்தான். இப்படி இரண்டு காமெடி நடிகர்களை வைத்துக் கொண்டு காமெடியே இல்லாத ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் விஜய் ஆனந்த்.

மும்பையில் தன் நண்பன் யோகிபாபுவுடன் இருப்பவர் சந்தானம். கடத்தல் தொழில் செய்யும் ராதாரவி கொடுக்கும் வேலைகளைச் செய்பவர். ஒரு கடத்தல் நிகழ்வில் சந்தானம் செய்த தவறுக்காக அவரைக் கொலை செய்ய நினைக்கிறார் ராதாரவி. அதே சமயம் ஒரு பெண்ணின் புகைப்படத்தை வைத்து அவரைத் தேடும் வேலையை ராதாரவி ஏற்றிருக்கிறார். கொலையாவதிலிருந்து தப்பிக்க அந்தப் பெண்ணை தனக்குத் தெரியும் என பொய் சொல்லி, அந்தப் பெண்ணை அழைத்து வருவதாகச் சொல்லி தப்பிக்கிறார்.. பின்னர் அந்தப் பெண்ணை தேடிக் கண்டுபிடித்து மும்பை அழைத்து வருகிறார். வந்த பின்தான் அந்தப் பெண்ணை எதற்காகத் தேடினார்கள் என்ற உண்மை சந்தானத்திற்குத் தெரிய வருகிறது. அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.

மிகப் பெரும் கோடீஸ்வரராம். அவர் கற்பனையில் ஒரு பெண்ணை ஓவியமாக வரைவாராம். பின்னர் அந்தப் பெண்ணைத் தேடிக் கண்டுபிடித்து அவருடன் உல்லாசமாக இருக்க நினைப்பாராம். அந்தப் பெண்ணிற்காக 5 கோடி, இல்லை இல்லை 10 கோடி வரை கொடுப்பாராம். அந்தப் பெண்ணைத் தேடிக் கண்டுபிடிக்க இந்தியா முழுவதும் உள்ள ரவுடிகள் வேலை செய்வார்களாம். ஏன் உலகம் முழுக்க தேடுவாங்கன்னு சொல்ல வேண்டியதுதானே. அடேங்கப்பா, உங்க கற்பனைக்கும் ஒரு அளவு இல்லையாப்பா ?.

சந்தானம் முந்தைய படங்களில் பார்த்ததை விட சற்றே மெலிந்து காணப்படுகிறார். அது போலவே அவருடைய நகைச்சுவைத் தோரணங்களும் மெலிந்துவிட்டது. அங்கொன்றுமாய், இங்கொன்றுமாய் தான் சிரிக்க வைக்கிறார். அவரிடம் ரசிகர்கள் ரசிப்பதே அந்த நகைச்சுவையைத்தான். அதை விடுத்து விஜய் போலவும், ரஜினி போலவும் சண்டையிட்டு பேர் வாங்குவதற்கு அவர்கள் இருக்கிறார்கள். தன்னை ரசிகர்கள் நாயகனாக ஏற்றுக் கொண்டதற்கான காரணத்தைப் புரிந்து கொண்டு அதற்கேற்ற கதாபாத்திரங்களில் நடிப்பதே சந்தானத்திற்குப் பொருத்தமானது.

சந்தானம் படத்தில் யோகிபாபுவா என ஆச்சரியம் இருந்தது. ஆனால், அதற்கேற்றபடி இருவருமே தொடர்ந்து சிரிக்க வைக்கவில்லை. யோகிபாபுவைப் பார்த்து 'நீ இந்த அளவுக்கு வளருவன்னு எதிர்பார்க்கலடா' என பழைய ஞாபகத்தை கிண்டலாகச் சொல்கிறார். சந்தானம் நடித்து புகழ் பெற்ற டிவி நிகழ்ச்சியான 'லொள்ளு சபா' நிகழ்ச்சியில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தவர் தான் யோகிபாபு. பதிலுக்கு பின்னர் வேறொரு காட்சியில் 'நீ இப்படி பேசற மாதிரி எனக்கும் பேசத் தெரியும்,' என பதிலடி கொடுத்து சமன் செய்கிறார் யோகி பாபு.

படத்தின் நாயகியாக ரித்திகா சென். நல்ல உயரம், நல்ல உடல்வாகு என தமிழ்ப் பட கதாநாயகியாக ஜொலிப்பதற்குத் தேவையான அத்தனை அம்சங்களுடன் இருக்கிறார். அதோடு நடிக்கவும் செய்கிறார். படம் முழுவதும் ஒரே பாவாடை, தாவணியில் இருப்பதால் அவரை விதவிதமாக ரசிக்க விடாமல் தடுத்துவிட்டார் இயக்குனர்.

வில்லனாக தருண் அரோரா, ஒரு சில காட்சிகளில் மட்டும் வந்து கொஞ்சமாக மிரட்டுகிறார். மும்பை தாதாவாக ராதாரவி. அவருடைய வழக்கமான பழைய டைப் மேனரிசத்தையும் கிண்டலடிக்கிறார் சந்தானம். கிளைமாக்ஸில் வந்து கொஞ்சம் சிரிக்க வைக்கிறார் பிரம்மானந்தம். கிளைமாக்ஸ் காட்சிகள் சுந்தர் .சி படத்தை ஞாபகமூட்டுகின்றன.

விஜய் நரேன் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம் என்று கூட சொல்ல முடியாது. பின்னணி இசையிலும் தடுமாறியிருக்கிறார். சந்தானம் படத்தில் காமெடியை விட ஸ்டன்ட் நன்றாக இருக்கிறது என்று சொல்ல வைத்திருக்கிறார் ஸ்டன்ட் சில்வா.

'டகால்டி' எனத் தலைப்பு வைத்து எவ்வளவோ டகால்டி வேலைகளைச் செய்து ரசிக்கவும், சிரிக்கவும் வைத்திருக்கலாம். சந்தானம், யோகி பாபு இருந்தும் அது இல்லாமல் போனது ஏமாற்றம்தான்.

டகால்டி - உட்டாலக்கடி!

 

பட குழுவினர்

டகால்டி

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓