நடிகர்கள்: மோகன்லால், ஹனிரோஸ், ராதிகா, கேபிஏசி லலிதா, அஜு வர்கீஸ், ஹரிஷ் கணரன், தர்மஜன், சலீம்குமார், சித்திக் மற்றும் பலர்
இசை: 4 மியூசிக், கைலாஷ் மேனன், தீபக் தேவ்
ஒளிப்பதிவு: ஷாஜி குமார்
டைரக்சன்: ஜிபி ஜோஜூ
சீனாவில் பிறந்தவரான மோகன்லால், தந்தையின் மறைவுக்கு பிறகு கேரளாவுக்கு வந்து தனது தாயுடன் வசிக்கிறார்... சீனாவின் டூப்ளிகேட் பொருட்கள் எப்படி பிரபலமோ அதேபோல கேரளாவிலும் ஒரு கம்பெனி ஆரம்பித்து அதன்மூலம் டூப்ளிகேட் பொருட்களை சப்ளை செய்கிறார்.. இன்னொரு பக்கம் தனது தாயின் சிகிச்சைக்காக மருத்துவமனையில் கட்டும் பணத்திற்கு கூட கமிஷன் வாங்கும் அளவுக்கு எந்த ஒரு விஷயம் என்றாலும் கமிஷன் வாங்கிக் கொண்டே செய்கிறார்.. தனது வீட்டின் அருகில் வசிக்கும் தனது பள்ளித்தோழனின் அம்மாவான ராதிகாவை தனது சொந்த அம்மா போல நேசிக்கிறார் மோகன்லால்..
ஆனால் கோடீஸ்வரியான ராதிகாவை விட்டு வெகுதூரத்தில் இருக்கும் அவரது வாரிசுகள் மூவரும் அவரை பார்க்க வருவதை தவிர்க்கிறார்கள்.. தனது கணவரின் 25ஆம் வருட நினைவஞ்சலிக்கு கூட அவர்கள் வரவில்லை என்கிற நிலையில் ராதிகாவிற்கு ஹார்ட் அட்டாக் ஏற்படுகிறது.. அப்போது அவரை காப்பாற்றும் மோகன்லாலிடம் இனி ஒரு அட்டாக் வந்தால் அவர் பிழைக்க முடியாது என்கிறார் டாக்டர்.
இதனால் யாருமே செய்யத் துணியாத ஒரு முடிவை எடுக்கிறார் மோகன்லால். ஆம்.. தனது தாய்க்கு சமமான ராதிகாவை திருமணம் செய்யும் முடிவை எடுக்கிறார் மோகன்லால்.. இதற்கு ராதிகாவும் மனப்பூர்வமாக ஒத்துக்கொள்ள, இதையடுத்து நடக்கும் களேபரங்கள் தான் மீதி கதை.. மோகன்லால் எதற்காக இந்த முடிவை எடுத்தார்..? ராதிகா ஏன் அதற்கு ஒப்புக்கொண்டார், மோகன்லால் நினைத்தபடி எல்லாம் நடந்ததா என்பது க்ளைமாக்ஸ்..
காமெடி படம் என்றாலும் கிட்டத்தட்ட கத்திமேல் நடக்கும் கதைதான்.. இப்படி ஒரு கதையில் நடிக்க மோகன்லால் எப்படி சம்மதித்தார் என்பது ஒரு ஆச்சரியம் என்றால் அதை தனது நிறுவனத்திலேயே சொந்தமாக தயாரிக்கும் அளவிற்கு அவர் இறங்கி இருப்பது இன்னொரு ஆச்சரியம்.
ஆரம்பத்தில் சீனாக்காரராக வரும் மோகன்லால் போதிதர்மர் போல ஏதோ பெரிதாக செய்யப்போகிறார் என பார்த்தால் 'சப்பென முடிந்துவிடுகிறது அவரது எபிசோட்.. அந்த சீன பின்னணியை வைத்துக்கொண்டு இங்கே கேரளவில் அவரது மகன் மோகன்லால் எதோ ஆட்டம் காட்ட போகிறார் என்று நினைத்தால் அதுவும் புஸ்வாணம் ஆகி விடுகிறது. ஆக இந்தப்படத்தில் மோகன்லாலின் நடிப்பு விழலுக்கு இறைத்த நீர் தான்...
இரண்டு மோகன்லாலுக்கும் ஜோடியாக ஹனிரோஸ் உள்ளிட்ட இருவர் இருந்தாலும் படத்தின் கதாநாயகி என பார்த்தால் அது ராதிகா தான்.. தனது மகனாக நினைத்து பழகி வரும் மோகன்லாலையே தனது கணவனாக ஏற்கவேண்டிய சூழலில் புதிய ராதிகாவை பார்க்க முடிகிறது.. இவை எல்லாமே ராதிகாவின் மகன்களை திருத்துவதற்கான ட்ராமா தான் என்றாலும் அந்த காட்சிகளுடன் நம்மால் மனதளவில் ஒன்ற முடியவில்லை.
மோகன்லாலின் அம்மாவாக கேபிஏசி லலிதா, சர்ச் பாதராக சித்திக், ராதிகாவின் வாரிசுகளாக வரும் நபர்கள் என அனைவரும் தங்கள் கதாபாத்திரங்களாக மாறியிருகிறார்கள். அஜூ வர்கீஸ் மற்றும் ஹரீஷ் கணரனின் காமெடி பல இடங்களில் ரசிக்க வைக்கிறது. நாயகி என்கிற பெயரில் பெயரளவுக்கு மூன்றே இடங்களில் மட்டும் தலைகாட்டிவிட்டு செல்கிறார் ஹனிரோஸ்.
அறிமுக இரட்டை இயக்குனர்களான ஜிபி ஜோஜூ இருவரும் மிகப்பெரிய சூப்பர்ஸ்டாரான மோகன்லாலை வைத்து எதற்காக இந்த விஷப்பரீட்சையில் இறங்கினார்கள்.. அதற்கு மோகன்லாலும் எப்படி அதற்கு இசைவு தெரிவித்தார் என்கிற எண்ணம் படம் முடிந்து வீட்டிற்கு வந்தபின்னும் ஆச்சர்யமான கேள்வியாக நம் மனதில் தங்கி விடுகிறது.