2.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - 7 சிஸ் என்டர்டெயின்மென்ட், விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - எஸ்.பி.ஜனநாதன்
இசை - டி.இமான்
நடிப்பு - விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன், ஜெகபதிபாபு
வெளியான தேதி - 9 செப்டம்பர் 2021
நேரம் - 2 மணி நேரம் 24 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5

விவசாயத்தைப் பற்றிய படங்கள் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு படமும் ஒவ்வொரு கருத்தைப் பேசும் படமாகத்தான் உள்ளன. இந்தப் படம் விவசாயத்திற்குப் பின், அந்த விவசாயப் பொருட்களை வைத்து கார்ப்பரேட்டுகள் சம்பாதிக்கும் லாபத்தைப் பற்றியும் அந்த லாபம் விவசாயிகளுக்குக் கிடைக்காததைப் பற்றியும் பேசுகிறது.

மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் அவரது ஒவ்வொரு படத்திலும் ஏதோ ஒரு சமுதாயக் கருத்தைப் பதிவிடுவது வழக்கம். இந்தப் படத்திலும் அதை ஆழகமாகப் பதிய வைக்க முயற்சித்திருக்கிறார். முந்தைய படங்களில் அந்தக் கருத்து பொழுதுபோக்கு அம்சங்களுடன் நிறைந்திருக்கும். ஆனால், இந்தப் படத்தில் அது இல்லாமல் போனதால் கொஞ்சம் வறட்சியாக இருக்கிறது.

பெருவயல் கிராமத்தைச் சேர்ந்த விஜய் சேதுபதி ஆறேழு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கிராமத்திற்கு வருகிறார். கிராமத்து விவசாய சங்கத்தில் தலைவர் பதவிக்குத் தேர்வாகிறார். கிராமத்தில் உள்ள மக்களுக்கு அவர்களது பஞ்சமி நிலங்களை மீட்டுக் கொடுத்து, கூட்டுப் பண்ணைத் திட்டம் மூலம் கிராமத்து விவசாயிகள் அனைவரையும் ஒன்றிணைத்து விவசாயம் செய்ய நினைக்கிறார். ஆனால், அவரது திட்டங்களைத் தகர்க்க கிராமத்தின் பெரும் பணக்காரர், முன்னாள் விவசாய சங்கத் தலைவர் ஜெகபதிபாபு எதிர்க்கிறார். எதிர்ப்புகளை மீறி விஜய் சேதுபதி தான் நினைப்பது செய்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படத்தின் ஆரம்பம் முதல் கடைசி வரை ஒவ்வொரு காட்சியிலும் பல விஷயங்களை ரசிகர்களுக்கு உணர்த்த நினைக்கிறார் இயக்குனர். உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரை வசனங்களில் இடம் பிடித்துள்ளது. அதே சமயம் படம் முழுவதும் விஜய் சேதுபதி தொடர்ந்து பேசிக் கொண்டே இருப்பது போன்ற உணர்வே ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் அதுவே திகட்டவும் செய்துவிடுகிறது.

கிராமத்தில் விவசாய மறுமலர்ச்சியை ஏற்படுத்தத் திட்டம் தீட்டும் இளைஞர் கதாபாத்திரத்தில் விவசாய சங்கத் தலைவராக விஜய் சேதுபதி. இப்படியான கதாபாத்திரங்கள் அவருக்கு சர்க்கரைக் கட்டி மாதிரி. கரும்பிலிருந்து சர்க்கரையை எடுக்க என்னவெல்லாம் செய்வார்களோ அப்படி அவரைப் பிழிந்தெடுத்து நடிப்பை வாங்கியிருக்கிறார் இயக்குனர் ஜனநாதன். விஜய் சேதுபதிக்கான தோற்றத்தில் மட்டும் ஒரு யதார்த்தத் தன்மை இல்லாமல், அவரது ஹேர்ஸ்டைல், மீசை எல்லாம் சில பல காட்சிகளில் மாறி மாறி காட்சியளிக்கிறது. அவரை சாதாரண தோற்றத்திலேயே இருக்கவிட்டிருக்கலாமே எனத் தோன்றுகிறது.

படத்தின் கதாநாயகி என்று கூட ஸ்ருதிஹாசனை சொல்ல முடியாது. இடைவேளைக்கு சற்று முன்பாகத்தான் வருகிறார். ஒரு பாடலுக்கு நடனமாடி விட்டு, விஜய் சேதுபதியைக் காதலிப்பதாகச் சொல்லி, அவருடன் சில காட்சிகளில் சுற்றிவிட்டு, பிறகு காணாமல் போய்விடுகிறார். இந்தக் கதாபாத்திரத்திற்கு யார் வேண்டுமானாலும் நடித்திருக்கலாம்.

கிராமத்தில் வசிக்கும் ஒரு கார்ப்பரேட் வில்லனாக ஜெகபதிபாபு. ஒரு பெரிய கிராமத்து வீட்டிற்குள் வசிக்கிறார். ஆனால், அவர் வீட்டிற்குள் சென்ற பின் அந்த வீட்டை ஒரு 5 ஸ்டார் ஹோட்டல் போல காட்டுகிறார்கள். அதுவே கதாபாத்திரத்தின் தன்மையை மாற்றிக் காட்டுகிறது. அவர் கிராமத்து பெரிய மனிதர் போர்வையில் இருக்கும் வில்லனா அல்லது கார்ப்பரேட் வில்லனா என்ற குழப்பம் வந்துவிடுகிறது.

விஜய் சேதுபதியின் நண்பர்களாக சில தெரிந்த முகங்கள், யாருக்கும் பெரிய வேலையில்லை. ஜெகபதி பாபுக்கு ஜால்ரா அடிக்கும் ஊரின் முதலாளிகளாக சில தெரிந்த முகங்கள், லோக்கல் வில்லத்தனம் செய்கிறார்கள்.

இமானின் இசையில் ஒரு பாடல் கூட இனிமையாக இல்லை என்பது ஆச்சரியம் அல்ல அதிர்ச்சி. படத் தொகுப்பில் சில விட்ட குறை, தொட்ட குறை இருக்கிறது.

விவசாயி அவனது விலை பொருளுக்கு அவனே விலையை நிர்ணயம் செய்யும் ஒரு பெரிய கருத்தை முன் வைத்திருக்கிறார்கள். உலக அளவில் பருத்தி சந்தையில் இந்தியாவிற்கு இரண்டாவது இடம், இந்திய நாட்டின் விவசாயம் என்பது இந்த உலகத்திற்கு எவ்வளவு பெரிய முதுகெலும்பாக உள்ளது என பல கருத்துக்களை ஒரு சினிமா மூலம் சொல்ல ஆசைப்பட்டிருக்கிறார் இயக்குனர் ஜனநாதன், அதை சொல்லியும் இருக்கிறார். இன்னும் தெளிவாகவும், அழுத்தமாகவும், கொஞ்சம் இனிப்பாகவும் சொல்லியிருந்தால் லாபம் தமிழ் சினிமாவின் முக்கிய படமாக அமைந்திருக்கும்.

லாபம் - விதை ஓகே, விளைச்சல் சுமார்

 

லாபம் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

லாபம்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓