குடிமகன்,Kudimagan

குடிமகன் - பட காட்சிகள் ↓

Advertisement
2.5

விமர்சனம்

Advertisement

நடிப்பு - ஜெய்குமார், ஜெனிபர் மற்றும் பலர்
தயாரிப்பு - ஜீவமலர் சத்தீஷ்வரன் மூவீஸ்
இயக்கம் - சத்தீஷ்வரன்
இசை - எஸ்.எம்.பிரசாந்த்
வெளியான தேதி - 5 ஏப்ரல் 2019
நேரம் - 2 மணி நேரம் 5 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5

பெரிய பட்ஜெட்டில் பல கோடி ரூபாய் செலவில் படம் எடுப்பவர்கள் கூட சொல்லாத கதையை, இந்த சிறிய பட்ஜெட் குழுவினர் செய்திருப்பது பாராட்டுக்குரியது.

குடிப்பழக்கத்தால் ஒருவர் எப்படி பாதிக்கப்படுகிறார், அதனால் அவர் குடும்பம் எப்படி சீரழிகிறது, ஒரு ஊரே எப்படி மாறிப் போகிறது என்பதை இயக்குனர் சத்தீஷ்வரன் தெளிவாகக் காட்டியிருக்கிறார்.

ஒரு விவசாய கிராமம். அந்த ஊரிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில்தான் டாஸ்மாக் கடை இருக்கிறது. ஆனால், கவுன்சிலர் ஏற்பாட்டில் அந்த ஊருக்குள்ளேயே டாஸ்மாக் கடை ஒன்றைப் புதிதாகத் திறக்கிறார்கள். படத்தின் நாயகனான ஜெய்குமாரை ஒரு முறை அவரது நண்பர்கள் வற்புறுத்தி குடிக்க வைக்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக முழு குடிகாரனாகிவிடுகிறார் ஜெய்குமார். அன்பான மனைவி, பாசமான மகன் என இருக்கும் குடும்பத்தில் அவருடைய குடிப்பழக்கம் சூறாவளியை ஏற்படுத்துகிறது. பின்னர் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.

படத்தின் நாயகன் ஜெய்குமாருக்கு நடிப்பு சுத்தமாக வரவில்லை. ஆனால், குடிகாரனாக மாறியிதும் தட்டுத் தடுமாறி நடித்து விடுகிறார். அவருடைய மனைவியாக ஜெனிபர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்திருக்கிறார். இவர் சிறப்பாக, யதார்த்தமாக நடிப்பதால் அவருடைய நடிப்பு, ஜெய்குமாருக்கு வராத நடிப்பைச் சரி செய்துவிடுகிறது. இவர்களின் மகனாக நடிக்கும் ஆகாஷ் சிறப்பாக நடித்திருக்கிறார். குடிகாரனாக மாறிப் போன அப்பாவை அவர் உதாசீனப்படுத்தும் காட்சிகள் இயல்பாக உள்ளன.

மற்ற நடிகர்களில் ஊர் தலைவராக எழுத்தாளர் பவா செல்லதுரை, கதாநாயகியின் அப்பா கிருஷ்ணமூர்த்தி, நண்பர் வீரசமர், கவுன்சிலர் கிரண், குடிகாரராக இருந்து மாறிய பாலாசிங் நிறைவாக நடித்திருக்கிறார்கள்.

நல்ல கதையைத் தேர்வு செய்த இயக்குனர் காமெடி என்ற பெயரில் வைத்திருக்கும் டீக்கடை காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம். திரைக்கதையில் பெரிய விறுவிறுப்பு இல்லை. பட உருவாக்கம் டி.வி. சீரியலை விட மிகச் சாதாரணமாக இருக்கிறது. அது தெரியாத அளவிற்கு நடிப்பவர்கள் படத்தைக் கொஞ்சம் காப்பாற்றுகிறார்கள்.

குடிப்பழக்கத்தால் பல குடும்பமும், ஊரும் அழிந்து கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் தேவையான ஒரு படம். இந்தப் படத்தைப் பார்த்தாவது ஒரு சிலர் குடிப்பழக்கத்தை விட்டால் அதுவே இந்தப் படக்குழுவினருக்கு கிடைத்த வெற்றியாக இருக்கும்.

குடிமகன் - நல்லதை நாடு கேட்குமா.?

 

குடிமகன் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

குடிமகன்

  • நடிகர்
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓