வந்தா ராஜாவாதான் வருவேன்,Vantha Rajavathaan Varuven

வந்தா ராஜாவாதான் வருவேன் - பட காட்சிகள் ↓

Advertisement
2.25

விமர்சனம்

Advertisement

நடிப்பு - சிம்பு, மேகா ஆகாஷ், கேத்தரின் தெரேசா, ரம்யா கிருஷ்ணன், பிரபு மற்றும் பலர்
இயக்கம் - சுந்தர் .சி
இசை - ஹிப்ஹாப் தமிழா
தயாரிப்பு - லைகா புரொடக்ஷன்ஸ்
வெளியான தேதி - 1 பிப்ரவரி 2019
நேரம் - 2 மணி நேரம் 35 நிமிடம்
ரேட்டிங் - 2.25/5

தமிழ் சினிமாவிலேயே இதற்கு முன் இது போன்ற சில கதைகள் வந்து போயிருக்கின்றன. அந்தக் கதைகளை அப்படி, இப்படி மாற்றி அதை தெலுங்குக்கு கொண்டு போய் வெற்றி பெற்றார்கள். அதன் ரீமேக் உரிமையை சிலபல கோடி கொடுத்து வாங்கி மீண்டும் தமிழுக்கே கொண்டு வந்திருக்கிறார்கள்.

இது போன்ற டெம்ப்ளேட் கதையைக் கொண்ட ஆம்பள உட்பட பல படங்களை இயக்கியவர் சுந்தர் சி. தான். ஒரு வேளை அப்போதே அவர் அத்தாரின்டிக்கி தாரேதி படத்திலிருந்து கூட ஆம்பள படத்தின் கதையை கொஞ்சம் சுட்டு எடுத்திருக்கலாம். ஒரே விதமான கதைகளை எப்படி, இப்படி மாற்றி மாற்றி சுற்றியும், சுட்டும் எடுப்பார்கள் எனத் தெரியவில்லை. இம்மாதிரியான படங்கள் இயக்குனர் சுந்தர்.சிக்கு கை வந்த கலை. அதனால்தான், சிம்புவை நாயகனாக வைத்து இவ்வளவு விரைவில் இந்தப் படத்தை எடுத்து முடித்திருக்கிறார்.

லட்சம் கோடி சொத்து கொண்ட வெளிநாட்டு இந்திய கோடீஸ்வரர் நாசர். அவருடைய மகள் ரம்யா கிருஷ்ணன், ஒரு ஏழை வக்கீலை திருமணம் செய்து கொண்டதால் மகளை வீட்டை விட்டு விரட்டியபின், வெளிநாட்டில் வந்து செட்டிலாகிறார். 20 வருடங்கள் ஆன பின்னும் மகளைப் பிரிந்த பாசம் அவரை வாட்டி எடுக்கிறது. பேரன் சிம்புவிடம் எப்படியாவது தன் மகளைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையை வைக்கிறார். தாத்தாவின் ஆசையை நிறைவேற்ற பேரன் சிம்பு, இந்தியாவிற்கு பறந்து வந்து அத்தை ரம்யா கிருஷ்ணன் வீட்டில் தான், யார் என்பதை மறைத்து டிரைவராக வேலைக்குச் சேர்கிறார். தாத்தாவின் ஆசையை சிம்பு நிறைவேற்றினாரா, ரம்யா மனம் மாறினாரா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் சிம்பு நடிக்கவில்லை என்றால்தான் ஆச்சரியமே. அவருக்காகவே உருவாக்கப்பட்ட கதாபாத்திரம் போல கிடைத்தால் விடுவாரா என்ன ?. அலட்ட வேண்டிய இடத்தில் அலட்டல், அடக்க வேண்டிய இடத்தில் அடக்கம், ஆக்ஷன் வேண்டிய இடத்தில் ஆக்ஷன் என தன்னை ராஜாவாகாவே நினைத்து நடிப்பில் ஆட்சி செய்கிறார். கிளைமாக்சில் பாச மழையில் கண் கலங்க வைக்கிறார். முந்தைய படங்களைக் காட்டிலும் இந்தப் படத்தில் சிம்புவின் தோற்றம் கூடுதலாக குண்டாகவே தெரிகிறது. தொப்பையையும் கஷ்டப்பட்டு மறைக்கிறார். கொஞ்சம் ஸ்லிம்மானால் அவருக்கு நல்லது.

படத்தில் இரண்டு நாயகிகள். கேத்தரின் தெரேசா, மேகா ஆகாஷ். படத்தில் அக்கா, தங்கையான இருவருமே போட்டி போட்டு கிளாமரில் அசத்துகிறார்கள். சிம்புவின் ஜோடியாக மாறும் மேகா தான் நாயகி. ஆனால், கேத்தரினுக்கு சில காட்சிகளில் அதிக முக்கியத்துவம். இருவருக்கும் தலா ஒரு பாட்டு என இருவரையுமே கதாநாயகிகளாகவே காட்டியிருக்கிறார்கள். ஆனால், தெலுங்கில் தங்கை கதாபாத்திரத்திற்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்திருந்தார்கள். இன்னும் இரண்டு படங்கள் வந்தால் மேகா ஆகாஷ் முன்னணி நாயகிகளில் ஒருவராக மாறிவிடுவார்.

தெலுங்கில் நதியா நடித்த கதாபாத்திரம் தனி கெத்துடன் இருக்கும். இளமைக்கும், ஆன்ட்டிக்கும் நடுவில் இருப்பார். ஆனால், இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணனிடம் இளமை முற்றிலும் மிஸ்ஸிங். சில காட்சிகளில் முதுமை எட்டிப் பார்க்கிறது. மேக்கப் சரியில்லையா, அல்லது அவருக்குக் கொடுத்த சேலை வடிவமைப்பு சரியில்லையா எனத் தெரியவில்லை. ஒரு மல்டி மில்லியனர் தோற்றம், அந்த படையப்பா நீலாம்பரிக்கே உரிய கெத்து டோட்டலி மிஸ்ஸிங்.

அப்பா கதாபாத்திரங்களில் பிரபு எப்படி நடிப்பார் என்பதை படத்திற்குப் படம் சொல்ல வேண்டியதில்லை. ரோபோ சங்கர், விடிவி கணேஷ் இந்தப் படத்தில் நிறையவே பேசுகிறார்கள். இடைவேளைக்குப் பின் வந்தாலும் யோகி பாபு தொய்வடையும் படத்தைக் கொஞ்சம் தாங்கிப் பிடிக்கிறார்.

ஹோட்டல் அதிபர், கோடீஸ்வரர் ரம்யா கிருஷ்ணன், அவரது பிரபல வக்கீல் கணவர் பிரபு இருக்கும் குடும்பத்தில் நிறைய உறவினர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் யாரிடமும் அந்தப் பணக்காரக் களை கொஞ்சமும் இல்லை. இரண்டு மூன்று இளம் பெண்கள் மட்டும் மாடர்ன் டிரஸ் அணிந்து கொண்டு தங்களை அந்தஸ்து மிக்கவர்களாக காட்ட முயற்சித்துள்ளார்கள்.

இந்த மாதிரியான படங்களுக்கு அருமையான சில பாடல்கள் இருந்தால் அது படத்திற்குப் பெரிதும் கை கொடுக்கும். எல்லா பாடல்களையும் ஒரே சாயலில் போடுவதை ஹிப்ஹாப் தமிழா எப்போது நிறுத்துவார் எனத் தெரியவில்லை. எல்லா படத்தையும் விளையாட்டாக நினைக்கிறார் போலிருக்கிறது. பாடல் வரிகள் அதற்கு மேல், இட்லி...ரசம் என என்னென்னவோ எழுதியிருக்கிறார்கள். சிம்பு கூட பாடல்களில் தலையிடாதது ஆச்சரியமே.

இடைவேளை வரை குடும்பம், கொஞ்சம் காதல், மோதல் என படம் கலகலப்பாக நகர்கிறது. அதன் பின் கேத்தரின் காதலன் மகத்தைக் கடத்தி வர சிம்பு ஒரு கிராமத்திற்குச் செல்லும் காட்சிகள் படத்திற்கு சம்பந்தமில்லாதது. பின்னர் யோகி பாபுவை வைத்துக் கொண்டு அகலிகை நாடகத்தை நடத்துவதாக ஒரு பெரிய இழுவையைப் போட்டிருக்கிறார்கள். இவற்றை கண்ணை மூடிக் கொண்டு கட் செய்து தூக்கி எறியலாம்.

மேகாவுக்கு ஜீப்பில் விழுந்ததும் பழைய நினைவுகள் மறந்து போவதும், மீண்டும் விழுந்ததும் நினைவு திரும்புவதும்... சுந்தர்.சி சார் 2019க்கு வந்துட்டோம். நினைவு மறந்த நிலையிலும், தாத்த நாசரிடம் தான் மாயா என்று பேசுகிறார். பெயர் மட்டும் மறக்கவில்லையோ?. ரயில் நிலையித்தில் முடியும் 2999வது கிளைமாக்ஸ் காட்சி இந்தப் படத்திலும் உண்டு. இடைவேளைக்குப் பின் நமக்கும் கொஞ்சம் நினைவு போய்விட்டு கிளைமாக்சுக்கு முன்பாக வந்தால் கூட தப்பில்லை.

சிம்பு வித்தியாசமான கதைகளைத் தேட வேண்டிய காலம் வந்துவிட்டது. இயக்குனர் சுந்தரும் அவருடைய டெம்ப்ளேட் படங்களை விட்டு வேறு கதைகளைத் தேடினால் இன்னும் அவருடைய பயணத்தைத் தொடரலாம்.

வந்தா ராஜாவாதான் வருவேன் - வரலாம்... ஆனால், ராஜா இல்லை.

 

பட குழுவினர்

வந்தா ராஜாவாதான் வருவேன்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓