தினமலர் விமர்சனம்
நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்திருக்கும் இயக்குனர் சுந்தர் சி., சிறிது இடைவெளிக்குப் பிறகு கதை, திரைக்கதை எழுதி, இயக்கி, ஹீரோவாக நடித்திருகு்கும் படம் நகரம். அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில், இந்தப் படத்தை தயாரித்து வழங்கியிருப்பவர் நடிகை குஷ்பு.
பெரிய தாதாவின் அடியாளாக கேட் செல்வம் என்ற பாத்திரத்தில் சுந்தர் சி படம் முழுவதும் இயல்பாக நடித்திருக்கிறார். இனி கிரிமினல் வேலைகள் வேண்டாம் என்று திருந்தி வாழ நினைக்கும் சுந்தர் சி., தனது நண்பர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்கரை பாண்டிக்காக (போஸ் வெங்கட்), மீண்டும் சில ஆபத்தான வேலைகளை எதிர்பாராமல் செய்ய வேண்டி வருகிறது. அவை அவரது வாழ்க்கையை தொடர்ந்து பாதிக்கும் என்பதை அப்போது உணரவில்லை. சண்டைக் காட்சிகளில் சுந்தர் சி., தூள் கிளப்புகிறார். சினிமாவில் குரூப் டான்ஸரான பாரதியை (நடிகை அனுயா) காதலிக்கிறார். அவரை திருமணம் செய்து கொள்ள ஏற்பாடு செய்யும்போது மற்றுமொரு தடங்கள் ஏற்படுகிறது.
விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து, படம் முழுவதும் கொஞ்சமும் தொய்வில்லாமல் பல எதிர்பாராத திருப்பங்களுடன் படத்தை உருவாக்கியிருக்கும் சுந்தரை பாராட்ட வேண்டும். போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்கரை பாண்டியாக போஸ் வெங்கட் படம் முழுவதும் வருகிறார். தன் சொந்த லாபத்திற்காக அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதுடன், சுந்தர் சியை பல பிரச்னைகளில் சிக்க வைக்கிறார். உயர் அதிகாரிகளிடம் அகப்பட்டு கொள்ளக் கூடாது என்பதற்காக மிகவும் சாமர்த்தியமாக, ஓட்டலில் குளோஸ் சர்க்யூட் டி.வி.,யில் தான் படமாக்கப்பட்டதை அழித்து விடுகிறார். ஆனால் ஓட்டலில் நடக்கும் திருமண படப்பிடிப்பில் அவர்கள் இடம்பெறுவது அவரை காட்டிக் கொடுக்கிறது.
கடைசி 15 நிமிடங்கள் க்ளைமாக்ஸ் காட்சி மிகவும் விறுவிறுப்பாக, எதிர்பாராத திருப்பங்களுடன் செல்கிறது.
படத்தின் முக்கிய சிறப்பு வடிவேலுவின் காமெடி. சுந்தர் சி.யிடம் தான் பெரிய ரவுடி என்று சொல்லிவிட்டு, அவர் பின் தொடர்ந்து வரும்போது ஜகா வாங்குவது அவருக்கே உரிய நகைச்சுவை. உங்களுக்கு நல்ல பர்ஸ்னாலிட்டி. நான் காதலிக்க முடியாமல் போன அனுயாவை நீங்கள் காதலீக்க வேண்டும் என்று கடைசி விருப்பத்தை சொல்லிவிட்டு இறந்து போகிறார் முத்துக்காளை. பொன்னம்பலம், பெசன்ட் நகர் ரவி என்று தடித்தடியாக நான்கு சகோதரர்கள் முத்துக்காளைக்கு. அவர்கள் பயமுறுத்தலால் அனுயாவை காதலிக்க வடிவேலு செய்யும் முயற்சிகள் படு ரகளை. குழாயடியில் ஒரு சிறுவன் வடிவேலுவின் வேஷ்டியை உருவி விட, இரு குடங்களை வைத்துக் கொண்டு சமாளிப்பது, அவரது உதவியாளர்கள் ஆர்வக் கேளாறால் போஸ்டர் அடித்து பப்ளிசிட்டி பண்ணி, போலீசில் வடிவேலு அகப்பட்டுக் கொள்வது போன்ற காட்சிகளின் மூலம் தனது படங்களில் காமெடி ட்ராக் ரொம்ப ஸ்ட்ராங் என்பதை சுந்தர் சி மீண்டும் நிரூபித்துள்ளார். இனி காமெடி சேனல்களுக்கு நல்ல தீனி.
இன்னும் எத்தனை காலம்தான் வில்லனோ, வில்லனின் ஆட்களோ, டாக்டர் உடையில், ஆஸ்பத்திரிக்குள் நுழைந்து கொலை செய்துவிட்டு தப்பி விடுவார்களோ?!
என் பேரு கிருஷ்ணவேணி பாடலுக்கு கவர்ச்சி ஆடும் மரியம் ஜக்காரியா, இனி பல படங்களில் ஒரு ரவுண்டு வருவார். இந்தப் பாட்டு மற்றும் குத்துது, புடிச்சா பாடல்கள் ஹிட் ஆகலாம். இசை தமன். இந்தப் படத்தின் விறுவிறுப்பிற்கு உதவும் வசனம் எழுதிய செந்தில்குமார் மற்றும் ஒளிப்பதிவு இயக்குனர் செல்லத்துரை இருவரையும் பாராட்டலாம்.
குணசித்திர நடிகரான ஜி.ஸ்ரீனிவாசனை முதல் முறையாக கஞ்சா, போதைப்பொருள் விற்கும் தாதாவாக நடிக்க வைத்திருக்கிறார். சொன்னபடி தனக்கு கடத்தப்பட்ட கஞ்சா வந்து சேரவில்லை என்பதற்காக சாப்பாட்டு மேஜையில் ஏதோ உணவு பதார்த்தத்தை நகத்துவது போல துப்பாக்கியை நகர்த்தி கஸ்டம்ஸ் அதிகாரியை தற்கொலை செய்ய செய்து கொள்ளச் சொல்வது புதுமையான கொடுமை.
தன் தாய்க்கு உடல் நலம் சரியாக இல்லை என்பதால் தன்னையே நிரந்தரமாக கேட்கும் அண்ணாச்சியின் மிரட்டலுக்கு பொங்கி எழும்போதும், பின்னர் யதார்த்த நிலை உணர்ந்து அவருக்கு சம்மதிக்கும்போதும் அனுயாவின் நடிப்பை பாராட்டலாம். கடைசி தருணத்தில் சுந்தர் சி, வடிவேலு உதவியுடன் அவரை காப்பாற்றுவதும் நல்ல உத்தி.
ஹீரோவின் மற்றொரு நண்பராக வரும் தாமு (நடிகர் ஜார்ஜ்) கதையில் முக்கிய திருப்பம் ஏற்படுத்துகிறார். முன்னாள் நடிகை ஷீலாவின் மகன் இவர். படத்தின் இறுதி காட்சியில் சுந்தர்.சி., தாக்கப்படுவதை படத்தில் ஆரம்பத்திலேயே காட்டியிருப்பதும் வித்தியாசமான பாணி.
- எஸ்.ரஜத்.
------------------------------------
குமுதம் விமர்சனம்
திருந்தி வாழ நினைக்கும் ஹீரோ. இதற்கு அனுமதிக்காமல் தன் கடத்தல் தொழிலுக்கு அவனை பயன்படுத்தும் போலீஸ் அதிகாரி. அந்த ஹீரோவைக் காதலிக்கும் நாயகி. க்ளைமேக்ஸில் பிரச்னைகளில் இருந்து தப்ப நாயகனும் நாயகியும் நினைக்கும் போது....
இப்படி பலமுறை பார்த்துப் பழகிய கதையை காமெடி மசாலாவும் ஆக்ஷன் மசாலாவும் கலந்து அரைத்துக் கொடுத்திருக்கிறார்கள்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு இயக்குநராக மீண்டும் அவதாரம் எடுத்துள்ளார் சுந்தர்.சி. காமெடியாக படத்தை நகர்த்திச் செல்வதுதான் தனது பிளஸ் பாயிண்ட் என்பதை உணர்ந்து அதற்கேற்ப படத்தை எடுத்திருக்கிறார்.
படத்தின் மிகப்பெரிய பலம் வடிவேலு. திருடச் செல்லும் இடங்களில் கூட்டாளிகளிடம் மாட்டி தர்ம அடி வாங்குவது, நாய்க்கு பிராந்தி கொடுத்து வசப்படுத்த முயல்வது என்று பல இடங்களில் நம் வயிற்றை பதம் பார்க்கிறார். வடிவேலுவை இப்படி காமெடி வேலுவாகப் பார்த்து நீண்டநாள் ஆகிவிட்டது. நடிகை அனுசுயாவுக்கு நடிப்பதற்கு அதிக வாய்ப்பில்லை. அவ்வப்போது வந்து பாடல்களுக்கு நடனமாடுகிறார்.
வடிவேலுவையும், சுந்தர்.சி.யையும் மீறி படம் பார்ப்பவர்களைக் கவர்பவர் ஜி.சீனிவாசன். அமைதியான வில்லன் கேரக்டர்கள் இனி நிச்சயம் அவரைத் தேடி வரும்.
போஸ் வெங்கட், ஜாஜ், அண்ணாச்சியாக வரும் நடிகர் என்று பலரும் இயல்பாக நடித்துள்ளனர். இருந்தாலும் ஏற்கெனவே பார்த்த படங்களின் கோர்வையாகத் தெரிவதால் சில இடங்களில் அலுப்புத் தட்டுகிறது. அதுபோல் அடுத்த படத்தில் சுந்தர்.சி. முக்கியத்துவம் கொடுத்தால் நல்லது.
நகரம் : மப்சால் ஏரியா.