தாதா 87,DhaDha 87

தாதா 87 - பட காட்சிகள் ↓

தாதா 87 - சினி விழா ↓

Advertisement
2

விமர்சனம்

Advertisement

நடிப்பு - சாருஹாசன், சரோஜா, ஆனந்த் பாண்டி, ஸ்ரீபல்லவி
தயாரிப்பு - கலை சினிமாஸ்
இயக்கம் - விஜய்ஸ்ரீ ஜி
இசை - லியாண்டர் லீ மார்ட்டி, அல் ருபான், தீபன் சக்கரவர்த்தி
வெளியான தேதி - மார்ச் 1, 2019
நேரம் - 2 மணி நேரம் 22 நிமிடம்
ரேட்டிங் - 2/5

இந்தியத் திரையுலகத்தில் நிஜமாகவே 87 வயது ஆன ஒருவர் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிப்பது இதுவே முதல் முறை என்று இந்தப் படத்தைப் பற்றி சொன்னார்கள்.

87 வயது சாருஹாசன் நடித்திருக்கிறார் என்பது ஓகே, ஆனால், அவர் படத்தின் நாயகன் இல்லை. அவரை மையப்படுத்தி படத்திற்கு தலைப்பும் வைத்துவிட்டு, அவரை மட்டுமே பட வெளியீட்டிற்கு முன் போஸ்டர்களில் விளம்பரப்படுத்திவிட்டு, படத்தின் கதையை அவரை மையப்படுத்தி எழுதவில்லை.

மாறாக, வடசென்னையின் அசால்ட்டான ஒரு இளைஞனுக்கும், ஒரு பெண்ணிற்கும் இடையே நடக்கும் காதல்தான் படத்தின் கதை.

இதற்கு முன் தமிழ் சினிமாவிலும் எத்தனையோ வடசென்னை மைய ரவுடி கதைகளைப் பார்த்துவிட்டோம். இந்தப் படத்தையும் அவற்றோடு ஒன்றாக கதையின் பின்னணிக்காக மட்டுமே சேர்க்க முடியும். அதே சமயம் தமிழ் சினிமாவில் இப்படி ஒரு காதல் கதை வந்தே இருக்காது என்று தாரளமாகச் சொல்லலாம்.

ஏரியாவில் ஜாலியாக சுற்றிக் கொண்டு, அடிக்கடி ஏதாவது கலாட்டா செய்து கொண்டிருப்பவர் ஆனந்த் பாண்டி. பெண்கள் பின்னால் சுற்றித் திரிவதுதான் அவருடைய முழுநேர வேலை. அவர்களது ஏரியாவில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு மீண்டும் குடி வருகிறார் நாயகி ஸ்ரீபல்லவி. இவரைப் பார்த்ததும் ஆனந்த் பாண்டிக்கு காதல். ஆனந்த் பாண்டியின் காதலை ஏற்க மறுக்கும் ஸ்ரீபல்லவி, ஒரு கட்டத்தில் அவரைக் காதலிப்பதாகச் சொல்கிறார். ஆனால், ஆனந்த் பாண்டி அந்தக் காதலே வேண்டாம் என தெறித்து ஓடுகிறார். அதற்குக் காரணம் என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இளம் காதலர்களுக்கு இடையிலான ஒரு கதைக்கு தாதா 87 என எதற்கு பெயர் வைத்தார்கள் என்றும் தெரியவில்லை, அந்த தாதாவும் படத்தில் பெரிதாக எதுவும் செய்யவில்லை. ஏதோ சில காட்சிகளில் வந்து உருட்டி மிரட்டுகிறார். மற்றவர்கள் வசனம் பேசியே அவருக்கு பில்ட்அப் கொடுக்கிறார்கள். கிளைமாக்சில் கூட அந்த தாதா காதலுக்கு மட்டும் ஒரு உதாரணமாக மட்டுமே சொல்லப்படுகிறார். 2 மணி நேர படத்தில் தாதாவாக சாருஹாசன் 20 நிமிடம் வந்திருப்பார், அவ்வளவுதான். கீர்த்தி சுரேஷின் பாட்டி சரோஜா, சாருஹாசனை பல வருடங்கள் கழித்துத் தேடி வருபவராக நடித்திருக்கிறார்.

ஆனந்த் பாண்டி தான் படத்தின் இளம் நாயகன். சிம்பு படம் நிறைய பார்ப்பார் போலிருக்கிறது, அல்லது இயக்குனர் விஜய்ஸ்ரீ பார்ப்பாரோ என்னமோ தெரியவில்லை. எப்போது பார்த்தாலும் பேசிக் கொண்டே, அலப்பறை செய்து கொண்டே இருக்கிறார். காட்சிக்குக் காட்சி நடித்துத் தள்ளுகிறார்.

நாயகியாக ஸ்ரீபல்லவி. யாரும் ஏற்று நடிக்கத் தயங்கும் ஒரு கதாபாத்திரம். இருந்தாலும் அதை ஏற்று இயல்பாகவும் நடித்திருக்கிறார். இவர் கதாபாத்திரத்திற்கு இடைவேளைக்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் முக்கிய சஸ்பென்ஸ்.

சப்-இன்ஸ்பெக்டராக படத்தின் இயக்குனர் விஜயஸ்ரீ. அரசியல்வாதிகளாக பாலாசிங், மணிமாறன். எம்எல்ஏவாக மனோஜ் குமார். இந்த அரசியல்வாதிகளுக்கு இடையிலான சண்டை படத்திற்குத் தேவையே இல்லை. ஜனகராஜ் நாயகியின் அப்பாவாக நடித்திருக்கிறார்.

படத்தின் தலைப்பு ஒன்று, மையக் கதை வேறொன்று, திரைக்கதை எதற்குமே சம்பந்தமில்லாம மற்றொன்று. எப்படியெப்படியோ நகர்ந்து எங்கெங்கோ பயணித்து எப்படியோ முடிகிறது. சரியான திரைக்கதை அமைத்து தேவையில்லாத காட்சிகளை, கதாபாத்திரங்களை நீக்கியிருந்தால் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான படமாக இந்தப் படம் இடம் பிடித்திருக்கும்.

திருநங்கைகளையும் மனிதர்களாகப் பார்க்க வேண்டும், அவர்களின் ஆசைகளை மதிக்க வேண்டும் என்று சொன்னதற்காக மட்டும் இயக்குனருக்கு ஒரு பாராட்டு.

தாதா 87 - சாதா

 

தாதா 87 தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

தாதா 87

  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓