3

விமர்சனம்

Advertisement

நடிப்பு - பாரத் சீனி, வினோத், இசக்கி பரத், சமுத்திரக்கனி, சுபிக்சா, கிரிஷா குரூப், ரக்ஷிதா மற்றும் பலர்
இயக்கம் - விஜய் மில்டன்
இசை - அச்சு ராஜாமணி
தயாரிப்பு - ரப் நோட் புரொடக்ஷன்ஸ்
வெளியான தேதி - 14 ஜுன் 2018
நேரம் - 2 மணி நேரம் 10 நிமிடம்
ரேட்டிங் - 3/5

சினிமா என்பது நாயகர்களின் பிரபலத்தில் பின்னால் இருப்பதை விட, கதைகளின் பின்னால் இருப்பதுதான் சரி. கதை சரியாக இல்லை என்றால் நாயகர்களின் பிரபலம் கூட காணாமல் போய்விடும்.

கோலி சோடா படத்தில் வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் சிறுவர்கள், அதற்குத் தடையாக வந்த ரவுடியிசத்தை எதிர்த்துப் போராடி வெற்றி கண்ட கதையைப் பார்த்தோம். இந்த கோலி சோடா 2வில் வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் இளைஞர்கள், அதற்குத் தடையாக வந்த ரவுடியிசத்தை எதிர்த்துப் போராடி வெற்றி கண்ட கதையை வேறு கோணத்தில் காட்டியிருக்கிறார் இயக்குனர் விஜய் மில்டன்.

சிறிய ஹோட்டலில் வேலை செய்யும் இசக்கி பரத்திற்கும், கிரிஷா குரூப்புக்கும் காதல். ஆனால், இந்தக் காதலை கிரிஷா-வின் சாதி சங்கத் தலைவன் எதிர்த்து, காதலர்களை அதிரடியாகப் பிரிக்கிறார்.

பாரத் சீனி, துறைமுகத்தை ஆட்டுவிக்கும் தாதா செம்பன் வினோத் ஜோஸிடம் டிரைவராக இருந்து வேலையை விட்டு நிற்கிறார். ஒரு சந்தர்ப்பத்தில் மீண்டும் அவருக்காக சில மணி நேரம் காரை ஓட்ட வேண்டிய சூழ்நிலையில், கண் தெரியாத ஒரு சிறுமியை செம்பன் வினோத் கடத்தி கொலை செய்ததைக் கண்டு கோபமடைந்து நிற்கிறார்.

ஆட்டோ டிரைவராக இருக்கும் வினோத், கவுன்சிலர் சரவண சுப்பையாவிடம் ஒரு லட்ச ரூபாயைப் பறி கொடுத்து, அவருடைய ஆட்களால் தாக்கப்பட்டு ஆட்டோவையும் இழந்து நிற்கிறார்.

இப்படி மூன்று பேரால் வெவ்வேறு விதத்தில் பாதிக்கப்பட்ட இசக்கி பரத், பாரத் சீனி, வினோத் ஆகியோர் சமுத்திரக்கனியால் ஒன்றாக இணைக்கப்பட்டு அவர்களை எதிர்த்துப் போராடுவதுதான் இப்படத்தின் கதை.

படத்தில் நடித்துள்ள அனைவரிடமும் ஒரு யதார்த்தமான தோற்றம், நடிப்பு ஆகியவை இருக்கிறது. சண்டைக் காட்சிகளைப் பார்க்கும் போது மட்டும்தான் நாம் சினிமாவைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற நினைப்பு வருகிறது.

பாரத் சீனி, இசக்கி முத்து, வினோத் இவர்களில் பாரத் சீனி, இதற்கு முன் கடுகு படத்தின் மூலம் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர். இசக்கி முத்து, வினோத் இருவரும் புதியவர்கள். அவர்களது கதாபாத்திரங்களை அவ்வளவு ரசித்து செய்திருக்கிறார்கள். ஓடிக் கொண்டேயிருப்பவர்கள் ஒரு கட்டத்தில் திருப்பி அடித்தால் எவ்வளவு கோபம் இருக்கும் என்பதை மூவரும் ஆவேசமாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

படத்தின் மையக் கதாபாத்திரம் சமுத்திரக்கனி. பாரத் சீனி, இசக்கி முத்து, வினோத் ஆகிய மூவரும் அவருடன் தனித் தனியே நண்பர்களாகர் இருக்கிறார்கள். இவர்கள் மூவருக்கும் பொதுவான நண்பராக சமுத்திரக்கனி இருக்கிறார். ஒரே சமயத்தில் மூவரும் தனித் தனியே சமுத்திரக்கனியைச் சந்தித்துவிட்டு செல்லும் திரைக்கதை அமைப்பு அவ்வளவு இயல்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. காலா படத்தில் இழந்த தன் பெயரை இந்தப் படத்தில் சரிக்கட்டி இருக்கிறார் சமுத்திரக்கனி.

பாரத் சீனியின் காதலியாக சுபிக்ஷா, இசக்கி முத்துவின் காதலியாக கிரிஷா குருப், வினோத்தின் காதலியாக ரக்ஷிதா. இவர்களில் சுபிக்ஷாவுக்கும், கிரிஷாவுக்கும்தான் முக்கியத்துவம் அதிகம். ரக்ஷிதா ஒரே ஒரு முறைதான் வாயைத் திறந்து பேசுகிறார். சுபிக்ஷாவும், கிரிஷாவும் தமிழ் சினிமாவின் பக்கத்து வீட்டுப் பெண் போன்ற கதாநாயகிகள் எனப் பெயர் வாங்கிவிடுவார்கள்.

வில்லன்களாக மலையாள நடிகர் செம்பன் வினோத் ஜோஸ். துறைமுகத்தைக் கையில் வைத்திருக்கும் தாதா. தோற்றத்தில் பார்ப்பதற்கு மறைந்த கலாபவன் மணி போல் இருக்கிறார். தமிழ் சினிமாவிற்கு மலையாளத்திலிருந்து ஒரு புதிய வில்லன் கிடைத்திருக்கிறார்.

கவுன்சிலராக சரவண சுப்பையா, பார்ப்பதற்கு நல்லவர் போல தோற்றமளிக்கும் ஒரு அரசியல்வாதி. அந்த பத்தாயிரத்தைப் பிடுங்கிக் கொள்ளும் ஒரு காட்சியில் அவர் யார் என காட்டிவிடுகிறார். சாதி சங்கத் தலைவராக நடித்திருப்பவரும் போலீஸ் ஸ்டேஷன் காட்சியில் மிரட்டியிருக்கிறார்.

போலீஸ் அதிகாரியாக ஒரு சில காட்சிகளில் நடித்தாலும் கவுதம் வாசுதேவ் மேனன், அவருடைய குரலுக்காகவே ரசிக்க வைக்கிறார்.

அச்சு ராஜாமணி இசையில் என் பொண்டாட்டி... பாடல் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையிலும் படத்தின் உத்வேகத்தைக் கூட்டுகிறார்.

படத்தின் முதல் பாதியை அற்புதமான திரைக்கதை, விறுவிறுப்பான காட்சிகள் என புதிய கோணத்தில் நகர்த்தியிருக்கிறார் விஜய் மில்டன். நாயகர்கள் மூன்று பேருக்குமே அடுத்தடுத்து நடைபெறும் சம்பவங்களை எந்த குழப்பமும் இல்லாமல் தெளிவாகக் காட்டியிருக்கிறார். முதல் பாதியில் இருந்த அந்த வித்தியாசம் இரண்டாவது பாதியில் தள்ளாட ஆரம்பிக்கிறது. மூன்று விதமான ரவுடிகளையும் மூவரும் எதிர்ப்பதில் வழக்கமான சினிமாத்தனத்துடன் கொடுத்துவிட்டார் விஜய் மில்டன். அதிலும் ஏதாவது புதுமையைப் புகுத்தியிருந்தால் அடுத்த சில வருடங்களுக்கு கொண்டாடப்படும் படமாக இந்த கோலி சோடா 2 படம் இருந்திருக்கும்.

கோலி சோடா 2 - கோபமும், ஆவேசமும்...!

 

பட குழுவினர்

கோலி சோடா 2

  • நடிகர்
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓