Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

கோலி சோடா

கோலி சோடா,Goli Soda
  • கோலி சோடா
  • நடிகர்: கிஷோர், பாண்டி, ஸ்ரீராம், முருகேஷ்
  • ..
  • இயக்குனர்: விஜய் மில்டன்
15 பிப், 2014 - 14:06 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » கோலி சோடா

தினமலர் விமர்சனம்


தங்களுக்கென தனியாக அடையாளம் வேண்டுமென போராடும், வாலிபத்தை எட்டிப் பிடிக்கத் துடிக்கும் நான்கு சிறுவர்களுக்கும், அவர்களுக்கான அடையாளத்தையும் சிதைத்து அவர்களை அடக்கி ஆளவும் நினைக்கும் பணபலமும், படை பலமும் நிரம்பிய ஒரு பெரிய மனிதரது ஆட்களுக்குமிடையே நடக்கும் மோதலும், கிடைக்கும் நல்ல தீர்வும் தான் கோலி சோடா படத்தின் மொத்த கதையும்!

அதாகப்பட்டது ஆசியாவிலேயே பெரிய காய்கறி மார்க்கெட்டான கோயம்பேடு வணிகவளாகத்தில் மூட்டை தூக்கி பிழைப்பு நடத்துகின்றனர் புள்ளி - கிஷோர், சித்தப்பா - பாண்டி, குட்டிமணி - முருகேஷ், சேட்டு - ஸ்ரீராம் ஆகிய நான்கு அநாதை சிறுவர்கள். காலம் முழுவதும் இப்படியே மூட்டை தூக்கி அடுத்த வேளை சோற்றுக்கு பிறர் கையை எதிர்பார்த்தே வாழப் போகிறீர்களா? அல்லது உங்களுக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் ஏதாவது தொழில் செய்து பெரிய மனுஷர்களாக மாறப்போகிறீர்களா? என அவர்களை உசுப்பேற்றி விடுகின்றது சுற்றமும், சூழ்நிலையும். குறிப்பாக இந்த 4 சிறுவர்களின் முதலாளியம்மாவும், காய்கறி மொத்த விற்பனையாளருமான ஆச்சி - சுஜாதா. இவர்களை உசுப்பேற்றுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் 4 பேரையும் கோயம்பேடு மார்க்கெட்டின் பெரிய மனிதர் நாயுடு அண்ணாச்சி முன் கொண்டு நிறுத்தி, அவர்களுக்கென ஒரு கடையையும் பிடித்து, அதில் ஒரு உணவு விடுதியையும் ஆரம்பித்து கொடுக்கிறார். ஆரம்பத்தில் பிஸினஸூம் ஆஹா, ஓஹோ என அமர்க்களப்படுகிறது.

ஆச்சிமெஸ் பசங்க எனும் அடையாளத்தோடு வளைய வர ஆரம்பிக்கும் நால்வரும் மகிழ்வு நிலையில் இருக்கும்போது, அவர்களது கடையை நாயுடுவின் ஆட்கள் தங்களது செகண்ட் பிஸினஸூக்கும், குடி, குட்டி உள்ளிட்ட சின்ன புத்தி செயல்களுக்கும் யூஸ் பண்ணுவது கண்டு வெகுண்டெழும் நால்வரும், நாயுடுவின் ஆட்களுடன் மோதலில் இறங்குகின்றனர். இதனால் அவர்கள் படும்பாடும், கொடுக்கும் பதிலடியும்தான் கோலி சோடா. இந்த கதையினூடே புள்ளி-கிஷோர், யாமெனி-சாந்தினி மற்றும் சித்தப்பா-பாண்டி, ஏடிஎம்-ஸ்ரீநிதியின் இன்பாட்சுவேஷன் காதலையும் கலந்துகட்டி கலர்புலாக கதை சொல்லி இருக்கிறார் இப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான எஸ்.டி.விஜய் மில்டன்.

கிஷோர், பாண்டி, முருகேஷ், ஸ்ரீராம் உள்ளிட்ட நான்கு சிறுவர்களும் நச் என்று நடித்திருக்கின்றனர். மீசை முளைக்க ஆரம்பிக்காத வயதில் அவர்களுக்கு கிளம்பும் அடையாள ஆசையையும், ஆண்-பெண் ஆசையையும் அழகாக வெளிப்படுத்தியிருக்கின்றனர் நால்வரும் பேஷ், பேஷ்!

சாந்தினி - யாமெனி, ஏடிஎம் - ஸ்ரீநிதி, ஆச்சி - சுஜாதா, நாயுடுவின் மனைவிகள் மீனாள் சகோதரிகள் உள்ளிட்ட அனைவரும் பாத்திரத்திற்கேற்ற பளிச் தேர்வு!

சிறுவர்களுக்கு உதவும் மந்திராவாதி(சும்மா பெயரில் மட்டும் தான்...) - இமான் அண்ணாச்சி, கோயம்போடு மார்க்கெட்டையே தன் கட்டுக்குள் வைத்திருக்கும் நாயுடு - மது, அவரது மைத்துனர் மயிலாக வரும் ஆர்.கே., விஜய் முருகன் (இவர் இப்படத்தின் கலை இயக்குநராகவும் பட்டையை கிளப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது...) உள்ளிட்ட ஒவ்வொரு பாத்திரமும் கோயம்பேடு வாசிகளாகவே கோலோச்சி இருப்பது கோலி சோடாவின் பெரும் பலம்!

அதிலும் ரவுண்டு ரவுண்டாக புகைவிட்டு போதையில் போலீஸ் ஸ்டேஷனில் ஆவின்பால் நஷ்டத்தில் ஓடுது, அதை வீடு வீடாக சப்ளை பண்றீங்க, டாஸ்மாக் லாபத்துல ஓடுது, அங்க குடிச்சுட்டு டூ-வீலர்ல வந்தா அவனை அரெஸ்ட் பண்றீங்க... என சகட்டு மேனிக்கு தத்துவமாக பொரிந்து தள்ளும் மந்திரவாதி - இமான் அண்ணாச்சி, தான் வரும் காட்சிகளில் தியேட்டரை அதிர வைக்கிறார். இமான் அண்ணாச்சி பேசும் இந்த வசனங்களில் தொடங்கி, திருப்பி அடிக்க நாங்க பெரிய பசங்களும் இல்லை... பயந்து ஓடுவதற்கு நாங்க சின்ன பசங்களும் இல்லை... என அந்த சிறுவர்கள் பேசும் ஒவ்வொரு டயலாக்கும் தியேட்டரில் கைதட்டலையும், விசில் சப்தங்களையும் அள்ளுகிறது. காரணம் வசனகர்த்தா இயக்குநர் பாண்டிராஜ்! வாவ்!!

4 சிறுவர்களும் பசங்க படத்தை ஞாபகப்படுத்துவது மாதிரி நடித்திருப்பது, யதார்த்தமான கதையை யதார்த்தமாக முடிக்காமல், டிராமாவாக, சினிமாவாக... முடித்திருப்பது உள்ளிட்ட ஒருசில குறைகள் இருந்தாலும் எஸ்.என்.அருணகிரியின் இசைபலம், பாண்டிராஜின் வசனபலம், ஆண்டனியின் படத்தொகுப்பு பலம் உள்ளிட்ட சிறப்புகளோடு விஜய் மில்டனின் சிறந்த ஒளிப்பதிவு மற்றும் இயக்கத்தில், கோலி சோடா - பன்னீர் சோடாவாக இனிக்கிறது!!


----------------------------------------------------------------------



நமது தினமலர் இணையதளத்தின் சினிமா பகுதியில், பல படங்களின் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. சில வாசகர்கள் தங்களது பிளாக்குகளில் திரைப்படங்களின் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, வாசகர்களின் விமர்சனங்களும் தினமலர் இணையதள சினிமா பகுதியில் இடம்பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்...

வாசகர் சி.பி.செந்தில் குமாரின் விமர்சனம்

அவரது பிளாக் முகவரி : www.adrasaka.com


விக்ரமன் திரைக்கதையில், பாண்டிய நாடு சுசீந்தரன் இயக்கத்தில் 4 விஷால் நடிச்சா படம் எப்படி இருக்கும், அப்படி இருக்கு. உஷ்ஷப்பா முடியலடா சாமி. கோயம்பேடு மார்க்கெட் தான் கதைக்களம், அங்கே பிஞ்சிலே பழுத்த பசங்க 4 பேர் வழக்கம் போல் பொண்ணுங்களை ரூட் விடுறாங்க . மனம் கவர்ந்த பொண்ணு உங்களுக்குன்னு தனி அடையாளமா என்ன இருக்கு ? என கேட்க உடனே 4 பேரும் சேர்ந்து விக்ரமன் பாணில ஆச்சி மெஸ் ஆரம்பிச்சு ஒரே பாட்டிலே நல்ல வேளை கோடீஸ்வரன் எல்லாம் ஆகலை.. கொஞ்சம் வசதியா ஆகிடறாங்க .

அந்த மெஸ்க்கு ஒரு ரவுடி கும்பல் வருது . அவங்களுக்கும் இந்த பொடிப்பசங்களுக்கும் ஒரு மோதல் . அதுல எப்படி பசங்க ஜெயிக்கறாங்க என்பதை மிக மிக செயற்கையாக, நம்ப முடியாத அளவில் வலிந்து வன்முறையைப்புகுத்தி செயற்கையான அனுதாபத்தை வர வைத்து அதகளம் பண்ணுவதாக நினைத்து சொதப்பி இருக்கிறார்கள்.

அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது என்ற கவித்துவமான டைட்டிலுடன் நல்ல கதையைத்தந்த இயக்குநர் விஜய் மில்டன் பல விஜய் , விஷால் படங்கள் எல்லாம் பார்த்துக்கெட்டுப்போய் இப்படி ஒரு லோ கிளாஸ் மசாலாப்படம் கொடுத்திருக்கிறார். படத்தில் பாராட்டுப்பெறும் விஷயம் இதை 2 மணி நேரத்தில் சுருக்கமா முடிச்சதே .அப்பாடா, விட்டாப்போதும்னு ஓடி வந்துட்டேன்.

பசங்க படத்தில் வந்த அதே 4 பசங்க இதில் கொஞ்சம் வளர்ந்து இருக்காங்க .அவங்க அளவில் சொன்ன வேலையைச்செஞ்சு இருக்காங்க. 20 ரவுடிகளுடன் 4 பசங்க மோதுவது, ஜெயிப்பது , க்ளைமாக்சில் பயங்கர வில்லனுடன் பொடியன்கள் மோதி ஜெயிப்பது , பஞ்ச் டயலாக் பேசுவது என விஜயையே கிலி அடிக்க வைக்கும் கில்லிக்காட்சிகள் உண்டு.

சி.பி.கமெண்ட் : கோலிசோடா - பிஞ்சில் பழுத்த பசங்களின் செயற்கையான வன்முறை சினிமா.


--------------------------------------------------------

கல்கி திரை விமர்சனம்


ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான விஜய் மில்டனுக்கு அடையாளம் சொல்லும் படமாக வந்திருக்கிறது "கோலி சோடா. கோயம்பேடு மார்க்கெட்டில் துள்ளி திரியும் இளங்கன்றுகளாக புள்ளி (கிஷோர்), சேட்டு (ஸ்ரீராம்), சித்தப்பா (பாண்டி), குட்டிமணி (முருகேஷ்) ஆகிய நால்வரும் யாரும் இல்லாத அனாதைகள். அவர்களின் ஒரே ஆதரவு ஆச்சியாக வரும் சுஜாதான். அவர்களின் அன்றாடப் பிழைப்பு மூட்டைத் தூக்கி, அதில் வரும் வருமானத்தில் வாழ்வது. ஆச்சியின் வழிகாட்டுதல் பேரில் நான்கு பேரும் மார்க்கெட்டில் நியாயமான தொழில் செய்யும் நல்ல மனம் கொண்ட அண்ணாச்சியிடம் ஓட்டல் நடத்த இடம் கேட்க, அண்ணாச்சி பெருந்தன்மையோடு வாடகையே வேண்டாம் என இடம் தருகிறார். இவர்களுக்கிடையில் வில்லனாக ஆர்ட் இயக்குநர் விஜய் முருகன் (மயிலு) வர, கதை ஜிவ் என சூடு கிளம்புகிறது.
ஓட்டல் நடத்தும் இடத்தில் மயிலுவின் மது, விபச்சாரம் விஷயங்களைத் தட்டிக் கேட்க நால்வரும் மயிலு ஆட்களால் துவம்சம் செய்ய, மயிலுவை நால்வரும் தாக்க, நல்லவரான அண்ணாச்சி தன் மச்சினன் மயிலு அடி வாங்கினால் மார்க்கெட்டில் தமது கௌரவம் பாதிக்கப்படும் என களத்தில் இறங்குகிறார். முடிவில் ஜெயித்தது 4 சிறுவர்களா? அண்ணாச்சியா என்பதே கதை.

"பசங்க படத்தில் நடித்த நான்கு பேரும் என்னமா நடிப்பில் கலக்கியுள்ளனர்? பாண்டியராஜின் வசனம் படத்துக்குப் பலம், வித்தியாசமான கதை களம் ஒளிப்பதிவு, இயக்கம் என விஜய்மில்டன் அற்புதமாக ஸ்கோர் பண்ணியுள்ளார். "கோலி சோடா தமிழ் சினிமாவின் நம்பிக்கை அடையாளம்.



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in