காளி
விமர்சனம்
நடிப்பு - விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா மற்றும் பலர்
இயக்கம் - கிருத்திகா உதயநிதி
இசை - விஜய் ஆண்டனி
தயாரிப்பு - விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்
இசையமைப்பாளராக இருந்து ஹீரோவாக மாறியவர் விஜய் ஆண்டனி. அவர் நாயகனாக மாறிய காலங்களில் வந்த நான், சலீம், பிச்சைக்காரன் ஆகிய படங்கள் அழுத்தமான கதைகளுடன் வெளிவந்து அவருக்கும் ரசிகர்கள் மத்தியில் ஒரு இடத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
அதன்பின் அவர் நடித்து வெளிவந்த படங்கள் எதிலும் அழுத்தமான கதைகள் இல்லாத காரணத்தால் தொடர்ந்து அவர் சுமாருக்கும் கீழான வெற்றியைத்தான் பெற்றுக் கொண்டிருக்கிறார். இன்னும் ஒரே மாதிரியான நடிப்பு, வசன உச்சரிப்பு என அடுத்தடுத்த படங்களிலும் தொடர்ந்தால் கஷ்டப்பட்டு பெற்ற நாயகன் என்ற அந்தஸ்து ஆட்டம் காண ஆரம்பிக்கலாம். விஜய் ஆண்டனி உஷாராக இருப்பது நலம்.
இயக்குனர் கிருத்திகா உதயநிதி ஒரு பழைய ஸ்டைல் கதையை எடுத்துக் கொண்டு அதை இந்தக் காலத்திற்கும் பொருத்திப் பார்க்க முயற்சித்திருக்கிறார். அப்பா யார் என்று தெரியாத அனாதை, கையில் பச்சை குத்திக் கொண்டு திரியும் ஒருவர், ஓர் இரவில் சங்கமமாகும் காதல் ஜோடி, ஊரைவிட்டு ஓடும் காதலி என 80களின் விஷயங்கள் படத்தில் நிறையவே உண்டு.
அமெரிக்காவில் பிரபலமான டாக்டராக இருக்கும் விஜய் ஆண்டனிக்கு தான் தத்து எடுத்து வளர்க்கப்பட்டவர் என்ற உண்மை தெரிய வருகிறது. தன்னுடைய அம்மா, அப்பா யார் என்பதைத் தெரிந்து கொள்ள அவர் இந்தியாவிற்கு வருகிறார். அம்மாவின் ஊரை மட்டும் கண்டுபிடித்து விடுகிறார். ஆனால், அப்பா யார் என்பதை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதற்காக சில மருத்துவ வேலைகளைச் செய்து கண்டுபிடிக்க முயல்கிறார். அதில் அவர் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
படத்தில் டாக்டராக வரும் ஒரு விஜய் ஆண்டனியைத் தவிர, சிலரின் பிளாஷ்பேக்கிலும் கூட வேறு யாரோ சிலர் வருவதற்குப் பதில் விஜய் ஆண்டனி அவர்களது இளமைக் கதாபாத்திரங்களில் வருவது உறுத்தல், அது கதைக்கும் ஒட்டவில்லை. மதுசூதனராவ், நாசர், ஜெயப்பிரகாஷ் ஆகியோரின் இளமைக் கால கதாபாத்திரங்களில் விஜய் ஆண்டனி தான் நடித்திருக்கிறார். இது படத்தில் எந்த விதத்தில் கூடுதல் பலத்தைத் தரும் என இயக்குனர் கிருத்திகா தான் விளக்க வேண்டும்.
ஆனாலும், அந்த இளமைக் கதாபாத்திரங்களில் வெவ்வேறு தோற்றங்களில் விஜய் ஆண்டனி நன்றாகவே நடித்திருக்கிறார். குறிப்பாக பாதர் கதாபாத்திரம் அவருக்குப் பொருத்தமாக அமைந்திருக்கிறது. காளி கதாபாத்திரத்திலும் கொஞ்ச நேரமே வந்தாலும் முரட்டுத்தனமாக நடித்திருக்கிறார். இந்த மாதிரி கிராமத்துக் கதாபாத்திரங்களும் அவருக்குப் பொருத்தமாகத்தான் இருக்கிறது. அடுத்த படங்களில் இப்படிப்பட்ட கதாபாத்திரத்தை முயற்சித்துப் பார்க்கலாம்.
படத்தில் நான்கு கதாநாயகிகள். படத்தின் நிஜத்தில் வரும் ஒரே ஜோடி அஞ்சலி மட்டுமே. நாட்டு வைத்தியராக நடித்திருக்கிறார். அவருடைய குறும்புத்தனமான நடிப்பைப் பற்றி சொல்லவே வேண்டாம். படத்தின் கற்பனை விஜய் ஆண்டனி கதாபாத்திரங்களுக்கு ஷில்பா மஞ்சுநாத், சுனைனா, அம்ரிதா ஆகியோர் ஜோடி. அவர்களில் சுனைனாவும், ஷில்பாவும் நன்றாக நடித்திருக்கிறார்கள். அம்ரிதாவுக்கு அதிக வேலையில்லை.
படத்தை இடைவேளை வரை கலகலப்பாக நகர்த்திக் கொண்டு போவதில் யோகி பாபுவுக்கு மட்டுமே அதிக பங்குண்டு. சின்னச் சின்ன இடைவெளிகளில் கூட கமெண்ட் அடித்து கலகலக்க வைக்கிறார்.
மதுசூதன ராவ், நாசர், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் நல்லவர்களாகவும், வேலராமமூர்த்தி, ஆர்.கே. சுரேஷ் சாதி வெறி பிடித்த கெட்டவர்களாகவும் நடித்திருக்கிறார்கள்.
விஜய் ஆண்டனி இசையில் அரும்பே, யுகம் நூறாய், அடிவயிற்றில், மனுஷா... ஆகிய நான்கு பாடல்களுமே ஹிட் வரிசையில் சேரும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் ஆண்டனி இசையில் ஒரு படத்தின் அனைத்துப் பாடல்களும் ரசிக்கும் விதத்தில் மெட்டமைக்கப்பட்டிருக்கின்றன.
ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவு கிராமத்தைச் சுற்றிச் சுற்றி வருகிறது. காளி சம்பந்தப்பட்ட சண்டைக் காட்சிகளில் சண்டை இயக்குனர் சக்தி சரவணன் கடுமையாக உழைத்திருக்கிறார்.
சாதி வெறி, காதல், அனாதைக் குழந்தை, தாய்ப் பாசம், தந்தைப் பாசம் என பல விஷயங்களை வைத்து கவர முயற்சித்திருக்கிறார்கள்.
காளி - காதல் காயம்