அபியும் அனுவும்
விமர்சனம்
நடிப்பு - டொவினோ தாமஸ், பியா பாஜ்பாய், ரோகிணி, சுகாசினி, பிரபு மற்றும் பலர்
இயக்கம் - பி.ஆர்.விஜயலட்சுமி
இசை - தரண்
தயாரிப்பு - யூட்லி பிலிம்
தமிழ் சினிமாவில், ஏன், இந்தியா சினிமாவிலேயே இதுவரை சொல்லப்படாத கதை என இந்தப் படத்தைச் சொல்லலாம். வித்தியாசமான கதைகளை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதற்காக இப்படி ஒரு வித்தியாசமான கதையா?. இந்த மாதிரியான கதைகள் எல்லாம் நம் கலாச்சாரத்திற்கு சரி வருமா என்பதை யோசிக்காமல் பெண் இயக்குனர் விஜயலட்சுமி இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் என்பது ஆச்சரியம் தான்.
உறவுகளால், உறவினர்களால் ஏற்படும் சிக்கல்கள் தான் தமிழ் சினிமாவில் வரும் பெரும்பாலான கதைகளில் இருக்கும். ஆனால், உறவே சிக்கல் என்றால்....? இம்மாதிரியான கதைகளை நம் ரசிகர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்று கூட யோசிக்காமல் படமாக எடுத்திருக்கிறார்கள்.
ஐ.டி-யில் வேலை பார்க்கும் டொவினோ தாமஸ், பேஸ்புக்கில் பியா பாஜ்பாய் பதிவிடும் வீடியோக்களைப் பார்த்து அவரைக் காதலிக்க ஆரம்பிக்கிறார். அந்த காதலை டொவினோ, பியாவிடம் சொல்ல, பியா, டொவினோவை 'பிளாக்' செய்துவிடுகிறார். அதனால், பியாவைத் தேடிச் செல்கிறார் டொவினோ. நேரில் பார்த்ததும் தன் காதலைச் சொல்லும் பியா, டொவினோவிடம் உடனே திருமணம் செய்து கொள் என்கிறார். இருவரும் அவர்களது பெற்றோர்களுக்கும் தெரிவிக்காமல் உடனே திருமணம் செய்து கொள்கிறார்கள். சென்னையில் அவர்களது வாழ்க்கையை ஆரம்பிக்கிறார்கள். பியா தாய்மை அடைய, அந்த சமயத்தில் அவர்கள் இருவருக்கும் பேரதிர்ச்சியான தகவல் ஒன்று தெரிகிறது. டொவினோ, பியா இருவரும் அண்ணன், தங்கை என்ற அதிர்ச்சி தான் அது. கற்பனையிலும் எட்டாத அந்த உறவுச் சிக்கலால் அவர்கள் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதுதான் படத்தின் கதை.
முள் மீது சேலை விழுந்தால் அதை எடுப்பது கடினம் என்பார்கள். ஆனால், இந்தக் கதை முள் தோட்டத்தின் மீது விழுந்த சேலை. அதை கிழியாமல் எப்படி எடுப்பது, முடிந்தவரை எடுத்திருக்கிறார் இயக்குனர் விஜயலட்சுமி. எங்கும் கண்ணியக் குறைவான காட்சிகள் இல்லை என்பது பெரிய ஆறுதல். அதே சமயம், படத்தின் நாயகன், நாயகிக்கு இடையில் என்ன உறவு என்பது படம் பார்க்கும் ரசிகர்களுக்குத் தெரிந்த பின் அவர்களை கணவன், மனைவியாகப் பார்க்க மனம் மறுக்கிறதே...?. கடைசியில் என்னதான் நியாயம் சொன்னாலும், அது சம்பந்தப்பட்ட இருவருக்குதானே தெரிய வேண்டும்.
தமிழுக்கு ஒரு இனிய அறிமுகம் மலையாள நடிகர் டொவினோ தாமஸ். தமிழில் இந்த மாதிரியான ஒரு சவாலான கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் நடிகர் யாராவது இருக்கிறார்களா என்று அவர் யோசிக்க வைத்துவிடுகிறார். இடைவேளை வரை இனிமையான காதல் நடிப்பில் கவர்பவர், பின்னர் தடுமாற்றமான கணவராக அவ்வளவு இயல்பாக நடித்திருக்கிறார். தனுஷ் உடன் 'மாரி 2' படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் டொவினோ அந்தப் படத்திற்குப் பிறகும் தமிழில் நிலையான இடத்தைப் பிடிப்பார் என எதிர்பார்க்கலாம்.
தமிழில் சில படங்களில் விளையாட்டுத்தனமான கதாபாத்திரத்தில் இதுவரை நடித்தவர் பியா பாஜ்பாய். இந்தப் படத்தில் ஒரு சவாலான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதுவரை இவரை யாரும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அந்த 'மொட்டை' மேக்கப் மட்டும் நன்றாகத் தெரிகிறது.
பியாவின் அம்மாவாக ரோகிணி. மகளின் திடீர் கல்யாணத்தைக் கண்டு கொஞ்சம் கூட அதிர்ச்சி அடையாமல் ஆரத்தி எடுக்கிறார். டொவினோ பிளாட்டின் பக்கத்து பிளாட்டில் இருப்பவர்களாக சுகாசினி, பிரபு. ஒரே ஒரு காட்சியில் மட்டுமே வருகிறார் பிரபு. பணக்கார பெற்றோர்களாக உதயபானு மகேஷ்வரன், தீபா ராமானுஜம். மகன் டொவினோ திருமணம் முடிந்து அப்பா ஆனால், கூட மகனையும், மருமகளையும் வந்து பார்க்காமலேயே இருக்கிறார்கள்.
தரண் இசையில் பாடல்கள் ரசிக்கவில்லை, பின்னணி இசை பரவாயில்லை. அகிலன் ஒளிப்பதிவு அழகு.
உறவே சிக்கலாய் அமைந்த கதையை அதிக சிக்கல் இல்லாமல் தெளிவாகப் புரியும்படி கொடுக்க முயற்சித்திருக்கிறார்கள். கிளைமாக்சில் ரசிகர்களுக்குப் புரிய வைத்ததை நாயகன், நாயகிக்குத் தெரியப்படுத்தியிருந்தால் நிறைவாக இருந்திருக்கும்.
அபியும் அனுவும் - ஆட்டம்
பட குழுவினர்
அபியும் அனுவும்
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்