நரி வேட்டை (மலையாளம்),Narivettai
Advertisement
2.75

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு : இந்தியன் சினிமா கம்பெனி
இயக்கம் : அனுராஜ் மனோகர்
நடிகர்கள் : டொவினோ தாமஸ், சுராஜ் வெஞ்சாரமூடு, சேரன், பிரியம்வதா கிருஷ்ணன், ஆர்யா சலீம், பிரசாந்த் மாதவன், நந்து
வெளியான தேதி : 23.05.2025
நேரம் : 2 மணி நேரம் 18 நிமிடம்
ரேட்டிங் : 2.75/5

கதைக்களம்
சிறுவயதில் அப்பாவை இழந்த டொவினோ தாமஸ் அம்மாவின் அரவணைப்பில் வளர்கிறார். கல்லூரி முடித்த அவர் தனக்கு பிடித்த வேலைக்காக காத்திருக்கிறார். அதோடு அதே ஊரை சேர்ந்த பிரியம்வதா கிருஷ்ணனை காதலித்து வருகிறார். வங்கியில் வேலை செய்யும் அவரை, டொவினோவுக்கு திருமணம் செய்து வைக்க அவரது தந்தை மறுக்கிறார். இதனைத் தொடர்ந்து காதலியின் வற்புறுத்தல் மற்றும் அம்மாவின் வேண்டுகோளை ஏற்று போலீஸ் கான்ஸ்டபிள் வேலைக்கு செல்கிறார். ரிசர்வ் போலீசில் பயிற்சி காவலராக சேருகிறார். அங்கு அவருடன் தலைமை காவலராக சுராஜ் வெஞ்சாரமூடு வேலை செய்கிறார்.

இந்த நிலையில் வயநாடு பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் தங்களுக்கு வாழ்வாதார இருப்பிட வசதி கோரி பல நாட்களாக அரசாங்க இடத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்தப் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக ரிசர்வ் போலீஸ் படையை அங்கு அனுப்புகிறது அரசாங்கம். அதில் டொவினோ மற்றும் சூரஜ் இருவரும் இடம் பெறுகின்றனர். அந்த ஆபரேஷனுக்கு தலைமை அதிகாரியாக சேரன் இருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் போராட்டக்காரர்களோடு நக்சலைட் தீவிரவாதிகள் கலந்திருப்பதாக வந்த தகவலையடுத்து அவர்களை தேடி காட்டுப் பகுதிக்குள் போலீஸ் படை செல்கிறது. இரு பிரிவுகளாக செல்லும் அவர்களின் டொவினோ ஒருபுறமும், சூரஜ் ஒருபுறமும் செல்கின்றனர். அன்று மாலை டொவினோ திரும்புகிறார். ஆனால் சூரஜ் திரும்பவில்லை. இதனை அடுத்து சேரன் உத்தரவின் பேரில் டொவினோ தாமஸ் உள்ளிட்ட போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபடுகின்றனர். அப்போது மலைப்பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் சூரஜ் கிடக்கிறார். இதனைத் தொடர்ந்து அங்கு கலவரம் ஏற்படுகிறது. அந்தக் கலவரத்திற்கு பிறகு டொவினோ தாமஸை போலீசார் தேடுகின்றனர். அதன் பின்னனி என்ன? சூரஜ்ஜை கொன்றது யார்? டொவினோவை ஏன் போலீசார் தேடுகின்றனர்? கலவரத்திற்கு உண்மையில் யார் காரணம்? என்பதே படத்தின் மீதி கதை.

மலைவாழ் மக்களின் வாழ்வாதார பிரச்னையில் எப்படி அரசாங்கமும், காவல்துறையும் நடந்து கொள்கிறது என்பதை அழகான திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் அனுராஜ் மோகன். கதைக்களத்தை வயநாடு பகுதியாக எடுத்துக் கொண்டு அதில் 2003ம் ஆண்டு கதை நடந்ததாக திரையில் காட்டி இருக்கிறார். அரசியல்வாதிகள் மற்றும் போலிசாரின் உள்ளடி வேலைகளை சரியாக திரையில் சொல்லி இருக்கிறார். மலையாளம் மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளில் இந்த படத்தை எடுத்துள்ளார். மலையாள இயக்குனர்களின் கதை சொல்லும் விதம் சமீபகாலமாக மாறி வருகிறது. அந்தப் பட்டியலில் இந்த இயக்குனருக்கும் நிச்சயம் இடம் கிடைக்கும்.

2008 படத்துக்கு பிறகு நல்ல கதை அம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வரும் டொவினோ தாமஸ், இந்த படத்தையும் சரியாக தேர்வு செய்திருக்கிறார். ரிசர்வ் படை காவலராக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஆக்ஷன் உடன் எமோஷன் கலந்து மனிதநேய மனிதராக மாறி இருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக சூரஜ் வெஞ்சாரமூடு அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்.

அதேபோல் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள சேரன் தேர்ந்த நடிப்பை கொடுத்தது மட்டுமின்றி, ஒருவித கிரேஸ் ஷேடு கேரக்டரில் நடித்து அசத்தியுள்ளார். ஹீரோயினாக நடித்துள்ள பிரியம்வதா கிருஷ்ணன் கச்சிதமாக அந்த கேரக்டரில் பொருந்துகிறார். இவர்களோடு படத்தில் நடித்துள்ள மற்ற அனைவருமே தங்களின் பங்களிப்பை சிறப்பாக தந்துள்ளனர்.

விஜய்யின் கேமரா, கேரள காடுகளை அழகாக காட்டி இருக்கிறது. அதோடு நடிகர்களும் திரையில் பளிச்சிடுகின்றனர். ஜேக்ஸ் பிஜாய் இசை படத்திற்கு மற்றொரு பரிமாணத்தை கொடுத்துள்ளது.

பிளஸ் & மைனஸ்

மலையாள சினிமாவில் அடிக்கடி இது போன்ற உண்மை சம்பவங்களை திரையில் பிரதிபலித்து காட்டுகின்றனர். ஆனால் தமிழில் எப்போதாவது ஒரு சில கதைகள் தான் வருகிறது. அப்படிப்பட்ட கதையாகத்தான் இந்த நரி வேட்டை படம் வெளியாகி இருக்கிறது. படத்தின் திரைக்கதை மற்றும் டொவினோ தாமஸ் நடிப்பு இரண்டும் பெரிய பலம். அதோடு கதாபாத்திரங்களை தேர்வு செய்துள்ள விதம் பாராட்டுக்குரியது. ஆனால் அப்பாவி மக்களை காக்கா, குருவியை போல் சுட்டுக் கொள்வது என்பதெல்லாம் கொஞ்சம் ஓவராக தெரிகிறது. போலீசுக்கு எதிராக போலீஸே நீதிமன்றம் செல்வது போன்ற காட்சிகள் எல்லாம் சினிமாவில் மட்டுமே நடக்கும்.

நரி வேட்டை - தொடருமா?

 

பட குழுவினர்

நரி வேட்டை (மலையாளம்)

  • நடிகர்
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓