மின்னல் முரளி,Minnal Murali
Advertisement
3.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு ; வீக் என்ட் பிளாக்பஸ்டர்ஸ்
இயக்கம் ; பஷில் ஜோசப்
இசை ; சுஷின் ஷ்யாம் - ஷான் ரோல்டன்
நடிப்பு ; டொவினோ தாமஸ், குரு சோமசுந்தரம், பெமினா ஜார்ஜ், பைஜு, ஹரிஸ்ரீ அசோகன், மம்முக்கோயா, அஜு வர்கீஸ் மற்றும் பலர்
வெளியான தேதி ; 24 டிசம்பர் 2021
நேரம் ; 2 மணி 38 நிமிடங்கள்
ரேட்டிங் ; 3.5 / 5

இந்திய சினிமாவில், குறிப்பாக தென்னிந்திய சினிமாவில் சூப்பர்மேன் கதையம்சம் கொண்ட படங்கள் மிகவும் அரிதாகவே வெளியாகி உள்ளன. அவையும் பெரிய அளவில் வெற்றி பெற்றதில்லை. இந்த நிலையில் டொவினோ தாமஸ்-பஷில் ஜோசப் கூட்டணி மின்னல் முரளிக்காக இந்த சூப்பர்மேன் கான்செப்ட்டை கையில் எடுத்துள்ளார்கள். ஆனால் அதை திறம்பட கையாண்டுள்ளார்களா? பார்க்கலாம்...

கிராமத்தில் தந்தையின் தையல் கடையை நிர்வகித்து வரும் ஜெய்சனுக்கு வெளிநாடு போய் வேலை பார்க்க வேண்டும் என்பது ஆசை. அதேபோல அந்த ஊரில் டீக்கடையில் வேலை பார்க்கும் ஷிபுவுக்கு தான் சிறுவயது முதல் விரும்பிய உஷாவை திருமணம் செய்ய ஆசைப்பட்டு அது கானல் நீர் ஆகிறது. இந்த நிலையில் திடீரென ஒருநாள் ஒரே சமயத்தில் ஜெய்சன் மீதும் ஷிபு மீதும் மின்னல் தாக்குகிறது. ஆச்சரியமாக இரண்டு பேரும் உயிர் பிழைத்ததுடன் இருவருக்குமே சூப்பர்மேன் சக்தியும் கிடைக்கிறது. இதை இருவருமே தாமதமாக தான் உணர்கிறார்கள்.

தான் வெளிநாடு செல்லக்கூடாது என்பதற்காக தனக்கு பாஸ்போர்ட் கிடைக்க கூடாது என நெகடிவ் ரிப்போர்ட் அனுப்பிய சப்-இன்ஸ்பெக்டரையும், தனது அக்காவின் கணவரான ஏட்டையும் சூப்பர்மேனாக மாறி முகம் மறைத்துக்கொண்டு தாக்குகிறான் ஜெய்சன். தாக்கியது மின்னல் முரளி என்றும் எழுதி வைத்து செல்கிறான் இன்னொரு பக்கம் தனது காதலி அவளது கணவனைப் பிரிந்து மீண்டும் ஊருக்கே வந்ததை அறிந்து சந்தோசப்படும் ஷிபு, தன்னிடம் உள்ள சக்தியை பயன்படுத்தி அவளது குழந்தையின் மருத்துவ செலவுக்காக வங்கியில் பணம் கொள்ளையடிக்கிறான். ஆனால் இந்த இரண்டு காரியங்களையுமே செய்தது மின்னல் முரளி தான் என அறிவித்து போலீசார் தேடுகின்றனர்.

இதை சாதகமாக்கி உஷாவை திருமணம் செய்துகொள்ள தடையாக இருக்கும் அவளது அண்ணனின் நண்பனையும் பின்னர் அவளது அண்ணனையுமே கொல்கிறான் ஷிபு. அதேசமயம் தான் செய்யும் மோசமான காரியங்களுக்கு மின்னல் முரளியை காரணம் ஆக்குகிறான் ஷிபு. தான் நல்லவன் என ஜெய்சன் அவ்வபோது நிரூபித்தாலும் தன்மீது யார் இப்படி பழி சுமத்துவது என தேடுகிறான். ஒரு கட்டத்தில் தன்னைப்போல் அதே ஊரில் இருக்கும் ஷிபுவுக்கும் சூப்பர்மேன் பவர் இருக்கிறது என்பது ஜெய்சனுக்கு தெரிய வருகிறது.


சூழ்நிலையால் கெட்டவன் ஆன ஷிபு, மிகப்பெரிய இழப்பு ஒன்றை சந்தித்தபின், அதற்கு பழிவாங்கும் விதமாக அந்த ஊருக்கே மொத்தமாக கெடுதல் செய்ய நினைக்கிறான். அவனிடமிருந்து மக்களைக் காப்பாற்ற தன் பவரை பயன்படுத்துகிறான் ஜெய்சன். சம பலம் உள்ள இருவரில் யாருக்கு வெற்றி கிடைத்தது..? நல்லவனாக இருந்த ஷிபு அந்த ஊருக்கே கெடுதல் செய்ய துணிந்தது ஏன் என்பது மீதிக்கதை.

சூப்பர் மேன் கதை என்றதுமே ஹாலிவுட்டில் பல விதங்களில் பார்த்து பழகிய ஒரு விஷயத்தை நம்ம ஊர் பின்னணியில் எப்படி கொடுத்திருப்பார்கள் என்கிற ஆர்வமும் சூப்பர்மேன் கதையை லாஜிக்குடன் கையாண்டிருப்பார்களா என்கிற சந்தேகமும் படம் துவங்கியதுமே நம்மிடம் இயல்பாக ஒட்டிக்கொள்கிறது. ஆனால் இயக்குனர் பஷில் ஜோசப் தெளிவான திரைக்கதையுடன், சரியான லாஜிக்குடன் படத்தை அழகாக நகர்த்திச் சென்றுள்ளார்..


மின்னல் முரளியாக நடித்துள்ள டொவினோ தாமஸ். ஒரு காதல் தோல்விக்கு சாதாரணமாக அலட்டிக்கொள்ளும் வாலிபனாக, சூப்பர் பவர் கிடைத்தும் கூட, அதை ஒரு பெரிய விஷயமாக கருதாத ஒரு மனிதனாக தனது கதாபாத்திரத்தில் சரியாக பொருந்தி போகிறார். தனக்கு சூப்பர் பவர் கிடைத்திருப்பதை அவர் படிப்படியாக உணர்ந்து கொள்ளும் காட்சிகள் எல்லாம் காமெடி மற்றும் கலக்கல் ரகம்.

அவருக்கு அப்படியே நேரெதிராக ஷிபு கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம்.. மலையாளத்தில் அவருக்கு இது முதல் என்ட்ரி. ஹீரோவை மிஞ்சும் அளவுக்கு வாய்ப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. மின்னல் தாக்கியதன் மூலம் கிடைத்த பவர் என்பதாலோ என்னவோ, சூப்பர்மேன் பவர் கொண்ட நபர் போல அவர் தோற்றம் அளிக்காமல் இயல்பாகவே அவர் வலம் வருவதுதான் அவரது கேரக்டருக்கு பிளஸ் பாயிண்ட்டாக அமைந்துவிட்டது. குறிப்பாக இயல்பிலேயே நல்லவரான அவர், வில்லன் அவதாரம் எடுப்பதற்கான காரணமும் அழுத்தமாகவே சொல்லப்பட்டுள்ளது.

படத்தின் பெரும்பாலான ..காட்சிகளை இவர்கள் இருவருமே ஆக்கிரமித்துக்கொண்டாலும், டொவினோவின் அக்கா மகனாக வரும் சிறுவன், டாக்டராக வரும் மம்முக்கோயா, எஸ்.ஐயாக வரும் பைஜூ, டெய்லராக நீண்டநாளைக்கு பிறகு தலைகாட்டி இருக்கும் ஹரிஸ்ரீ அசோகன் ஆகியோரும் தனித்து தெரிகிறார்கள். பஷில் ஜோசப் படங்களில் தொடர்ந்து காமெடி தூணாக நின்று தாங்கிப்பிடிக்கும் அஜு வர்கீஸூக்கு இதில் வில்லத்தனம் கலந்த கேரக்டர் என்பதில் நமக்கு ஏமாற்றமே. கான்ஸ்டபிளாக வரும் நபர் சூப்பர்மேன் யாரென கண்டுபிடிப்பதற்காக எஸ்.ஐக்கு கொடுக்கும் ஐடியாக்கள் எல்லாம் தரமான காமெடி சம்பவம்.

கதாநாயகிக்கு பெரிய வேலை இல்லை என்றாலும் கராத்தே மாஸ்டராக வரும் பெமினா ஜார்ஜ் ஓரளவு ரசிக்க வைக்கிறார். சமீர் தாஹிரின் ஒளிப்பதிவில் கிளைமாக்ஸ் காட்சியும் பேருந்து விபத்து காட்சியும் பதைபதைக்க வைக்கின்றன. ஹீரோவும் வில்லனும் தங்களது பலத்தை உணர்வதும் அதை பிரயோகிப்பதுமான காட்சிகளில் பின்னணி இசையில் வீரியம் கூட்டியுள்ளார் இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம். ஷான் ரோல்டன் இசையில் உயிரே பாடல் உருக்கம்.

கிராமத்தில் உள்ள இருவருக்கு சூப்பர்மேன் பவர் கிடைத்தாலும் உடனே நாட்டை காப்பாற்றுகிறேன் என்கிற பெயரில் கட்டடங்களுக்கு கட்டடம் தாவுவது, ஆகாயத்தில் பறப்பது போன்ற தனது கற்பனை எல்லைகளை ஹாலிவுட் ரேஞ்சுக்கு பறக்கவிடாமல், உள்ளூருக்குள் என்ன பண்ண முடியும் என இயக்குனர் பஷில் ஜோசப் யோசித்திருப்பதுதான் இதுவரை பார்த்த சூப்பர்மேன் படங்களில் இருந்து இந்தப்படத்தை தனித்து காட்டுகிறது..


குறிப்பாக ஹீரோவும் வில்லனும் தங்களது சொந்த பிரச்னை மற்றும் ஊர் பிரச்சனை என ஒரு வரையறைக்குள்ளேயே தங்களது சூப்பர்மேன் பவரை பயன்படுத்தியிருப்பது ஆச்சரியம் தருகிறது. அதேசமயம் ரசிகர்கள் விரும்பும் வகையிலான ஆக்சன் காட்சிகளுக்கும் இயக்குனர் பஷில் ஜோசப் குறை வைக்கவில்லை.

மின்னல் முரளி என்பதற்கான பெயர்க்காரணமும் ஒகே... பொதுமக்கள் முன்னால் டொவினோ தாமஸும் குரு சோமசுந்தரமும் மாட்டிக்கொண்ட நிலையில் நீ போ என டொவினோவை குரு அவ்வளவு அசால்ட்டாக போக சொல்வதை ஏற்க முடியவில்லை. தனது காதலியை காப்பாற்ற குரு தன் பவரை ஏன் பயன்படுத்தவில்லை என்கிற கேள்வியும் எழுகிறது.. ஆரம்ப காட்சிகள் கொஞ்சம் ஆமை வேகத்தில் நகர்வது போல தோன்றினாலும் இடைவேளைக்குப்பின் படம் வேகமெடுப்பதை படம் பார்க்கும் ஒவ்வொருவரும் உணர்வர்.

மின்னல் முரளி ; நம்ம ஊரு சாகசக்காரன்

 

மின்னல் முரளி தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

மின்னல் முரளி

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

மேலும் விமர்சனம் ↓