காணேக்காணே (மலையாளம்),Kaane Kaane (Malayalam)
Advertisement
3.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு ; ட்ரீம் கேட்சர்

இயக்கம் ; மனு அசோகன்


இசை ; ரஞ்சின் ராஜ்


ஒளிப்பதிவு ; ஆல்பி


நடிகர்கள் ; டொவினோ தாமஸ், சுராஜ் வெஞ்சாரமூடு, ஐஸ்வர்ய லட்சுமி, ஸ்ருதி ராமச்சந்திரன் மற்றும் பலர்


வெளியான தேதி ; 17.09.2021 (ஒடிடி)


நேரம் ; 120 நிமிடங்கள்


ரேட்டிங் ; 3.5/5


ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் டொவினோ தாமஸ் தனது மனைவி ஸ்ருதி ராமச்சந்திரன் சாலை விபத்தில் இறந்த பின்னர், தனது மகனுக்காக ஐஸ்வர்ய லட்சுமியை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்கிறார். ஸ்ருதியின் தந்தை சுராஜ் வெஞ்சாரமூடு, தனது மகள் விபத்து வழக்கு சம்பந்தமாக அவ்வப்போது டவுனுக்கு வரும்போதெல்லாம், மருமகன் டொவினோ தாமஸ், பேரன் ஆகியோரை பார்த்து செல்வது வழக்கம் ஒருமுறை அப்படி வந்தபோது, தனது மகளின் மரணத்திற்கு முன்பே ஐஸ்வர்ய லட்சுமியுடன் டொவினோ தாமஸுசுக்கு பழக்கம் இருந்திருப்பது தெரியவருகிறது.இதனால் அதிர்ச்சி அடையும் சுராஜ், இதுகுறித்து விசாரிக்கிறார். ஸ்ருதி சாலை விபத்தில் அடிபட்டு கிடந்த சமயத்தில், அந்த இடத்தை தாண்டிச்சென்ற டொவினோ தாமஸ், ஸ்ருதி சாலையில் அடிபட்டு கிடப்பதை பார்த்தும் கூட, கண்டும் காணாமல் சென்றுவிட்டு, சற்று காலம் தாழ்த்தியே தனது நண்பர்களையும் அழைத்துக்கொண்டு அந்த இடத்திற்கு வந்துள்ளார் அவர் ஸ்ருதியை பார்த்த சமயத்திலேயே, மருத்துவமனைக்கு கொண்டு சென்று இருந்தால் அவரை காப்பாற்றியிருக்க முடியும். ஆனால் காதலி ஐஸ்வர்ய லட்சுமி தன்னை திருமணம் செய்யச்சொல்லி தற்கொலை மிரட்டலுடன் வற்புறுத்தி வந்ததால், அந்த பிரச்சனைக்கு எப்படியாவது ஒரு தீர்வு கிடைக்கட்டும் என மனிதாபிமானம் இல்லாமல் மனைவியின் சாவுக்கு ஒருவகையில் டொவினோ தாமஸ் காரணமாக அமைந்து விட்டார் என்பதும் சுராஜுக்கு தெரியவருகிறது.இதனால் கோபமான சுராஜ் வெஞ்சாரமூடு தனது மருமகனுக்கு எதிராக திரும்புகிறார். பேரனை தன்னுடன் அழைத்துச்சென்று வளர்க்க முடிவெடுக்கிறார். கர்ப்பமாக இருக்கும் ஐஸ்வர்ய லட்சுமி, வீட்டில் உதவிக்கு ஆள் இல்லாமல் பிரசவ வலியால் துடித்துக்கொண்டு இருக்கும் நிலையில், அங்கே வரும் சுராஜூக்கு அந்த சமயத்தில் திடீரென தனது மகளின் ஞாபகம் வந்து, பழிவாங்கும் எண்ணம் தலை தூக்குகிறது. அதை தொடர்ந்து அவர் என்ன முடிவு எடுத்தார் என்பதுபடத்தின் ஹீரோ டொவினோ தாமஸ் தான் என்றாலும் அவரை விட அதிக அளவு காட்சிகளில் அவரது மாமனாராக வரும் சுராஜ் வெஞ்சாரமூடு தான் படத்தின் நாயகனாக தெரிகிறார். மருமகனை மகனாக பாவிக்கும்போது சாந்த சொரூபியாகவும், அவனே தன் மகள் உயிருக்கு சத்ருவாக மாறிவிட்டது தெரிந்ததும் உக்கிரமூர்த்தியாக மாறி அதிரடியில் இறங்குவதும் என படத்தில் முக்கால்வாசி நேரம் ஒருவித திரில் மூடிலேயே நம்மை உட்கார வைத்துவிடுகிறார். நாளுக்கு நாள் ஒரு பண்பட்ட குணச்சித்திர நடிகராக சுராஜ் வெஞ்சாரமூடு மாறிவருவது சந்தோஷமான விஷயம்தான் என்றாலும், சில வருடங்களுக்கு முன்பு காமெடியில் தெறிக்கவிட்ட சுராஜை நாம் மீண்டும் பார்க்க முடியாதோ என்கிற ஏக்கமும் எழாமல் இல்லை.ஏனோ இந்த படத்தில் சற்றே நெகட்டிவ் சாயல் கலந்த கதாபாத்திரத்தில், நடிப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து, படம் முழுதும் அண்டர்ப்ளே செய்து அடக்கி வாசித்திருக்கிறார் டொவினோ தாமஸ். கதை மட்டுமே இதற்கு காரணமாக இருக்க முடியும். படம் முழுவதும் குற்ற உணர்ச்சியால் தவிப்பதை காட்சிக்கு காட்சி அழகாக வெளிப்படுத்தியுள்ளார்காதலனுக்கு மனைவி, குழந்தை இருப்பது தெரிந்தும் அவனை விடாப்பிடியாக திருமணம் செய்ய துடிக்கும் கதாபாத்திரத்தில் ஐஸ்வர்ய லட்சுமி மிகச்சரியாக பொருந்தி இருக்கிறார். அதேசமயம் அவரது கதாபாத்திரம் மீது எதிர்மறை பிம்பம் விழுந்து விடாதபடி வடிவமைத்துள்ளார் இயக்குனர் மனு அசோகன். கொஞ்ச நேரமே வந்து போனாலும் எந்நேரமும் புன்னகை ததும்ப வெட்கம் கலந்த முகத்துடன் காட்சியளிக்கும் ஸ்ருதி ராமச்சந்திரன் நம் மனதை அள்ளுகிறார்.படத்தின் மற்ற கதாபாத்திரங்கள் தேவைக்கேற்ற அளவிற்கே வந்து செல்கிறார்கள் என்பதால் நம் கவனத்தை பெரிய அளவில் கவரவில்லை. குடும்ப படமாக ஆரம்பித்தாலும் போகப்போக தனது பின்னணி இசையால் காட்சிகளுக்கு த்ரில் மூடு ஏற்றி, ஒரு வித படபடப்புடன் நம்மை நகம் கடிக்க வைக்கிறார் இசையமைப்பாளர் ரஞ்சின் ராஜ்.மனிதர்களின் உணர்வுகளை மட்டுமே பிரதானமாக வைத்து இந்த படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் மனு அசோகன். மனைவி, குழந்தை என இருக்கும்போதே இன்னொரு பெண்ணை விரும்புவது, திருமணமாகி விட்ட நபர் என்று தெரிந்தும் அவன் மேல் மையல் கொள்வது என தற்காலத்தில் புதிதாக பரவிவரும் கலாச்சாரத்தால், என்னென்ன அனர்த்தங்கள் ஏற்படுகின்றன என்பதை, உணர்வுபூர்வமாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர் மனு அசோகன்.தனது மனைவியை காணோம் என்று காரில் டென்சனுடன் தேடிக்கொண்டு வரும் கணவன், அவள் சாலையோரத்தில் அடிபட்டு விழுந்து கிடப்பதை பார்த்துவிட்டு எப்படி சுயநலமாக கண்டும் காணாதது போல செல்ல முடிகிறது. இத்தனைக்கும் மனைவிக்கும் கணவனுக்கும் சிறு கருத்து வேறுபாடு கூட இல்லாதபோது.?.. இயக்குனருக்கே வெளிச்சம்.. அதுமட்டுமல்ல, ஐஸ்வர்ய லட்சுமியின் வீட்டில் எந்நேரமும் இருக்கும் வேலைக்கார பெண், அவர் பிரசவ வலியால் துடிக்கும் சமயத்தில் எங்கே போனார் எங்கே கேள்வியும் எழுகிறது. இப்படி சில சந்தேகங்கள் எழுந்தாலும் நமது கோபத்திற்கு வடிகாலாக, பழிவாங்குவது என்பது எப்போதும் நல்ல தீர்வாகாது என்பதையும் மன்னிப்பதே எதிரிக்கு நாம் தரும் மிகப்பெரிய தண்டனை என்பதையும் முத்தாய்ப்பாக சொல்லி இருக்கும் இயக்குனர் மனு அசோகனை தாராளமாக பாராட்டலாம்.


காணேக்காணே ; மன்னிப்பு சிறந்த தண்டனை

 

பட குழுவினர்

காணேக்காணே (மலையாளம்)

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓