அருவா சண்ட,Aruva Sandai

அருவா சண்ட - சினி விழா ↓

Advertisement
2.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - ஒயிட் ஸ்க்ரீன் புரொடக்ஷன்
இயக்கம் - ஆதிராஜன்
இசை - தரண்
நடிப்பு - ராஜா, மாளவிகா மேனன், சரண்யா
வெளியான தேதி - 30 டிசம்பர் 2022
நேரம் - 2 மணி நேரம் 16 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5

ஆணவக் கொலைகள் பற்றி தமிழ் சினிமாவில் இதற்கு முன்பும் நிறைய படங்கள் வந்துள்ளன. அதனுடன் கபடி விளையாட்டையும் சேர்த்து இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஆதிராஜன். சாதி மீதான வெறியில் இருக்கும் சிலருக்கு கிளைமாக்சில் சரியான ஒரு பாடத்தையும் புகட்டுகிறார்.

மதுரை வட்டாரத்தில் இருக்கும் ஒரு கிராமத்தில் சாதி சங்கத் தலைவராக இருப்பவர் ஆடுகளம் நரேன். அவரது ஒரே மகள் மாளவிகா மேனன். அந்த ஊரில் உள்ள தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ராஜாவுடன் நட்பாகப் பழகுகிறார். சிறந்த கபடி வீரரான ராஜா மற்றும் அவரது நண்பர்களுக்கு நல்ல கோச் மூலம் பயிற்சி கொடுத்து ராஜாவை மாநில அளவில் தேர்வு செய்யும் அளவிற்கு வளர்க்கிறார். தனது மகளின் காதல் விவகாரம் தெரிந்த நரேன், தனது தங்கை மகனுக்கு மகளை திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கிறார். அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

கபடி, சாதி பாகுபாடு இவை கலந்த படங்கள் சமீப காலத்தில் தமிழ் சினிமாவில் அதிகமாகவே வந்துள்ளன. இப்படம் நான்கு வருடங்களுக்கு முன்பே வந்திருக்க வேண்டிய படம். அப்போது வந்திருந்தால் புதிய கதையாக ரசிகர்களுக்குத் தெரிந்திருக்கலாம்.

அறிமுக நடிகர் ராஜா கிராமத்து இளைஞன் கதாபாத்திரத்தில் புதுமுகம் என்று சொல்ல முடியாதபடி பொருத்தமாகவே நடித்திருக்கிறார். ராஜாவைக் காதலிக்கும் உயர்சாதிப் பெண்ணாக மாளவிகா மேனன். அப்பாவின் சாதிப் பாசத்தை மீறி வேறு சாதி இளைஞரைத் தைரியமாகக் காதலிக்கும் கதாபாத்திரம்.

படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் சரண்யா. அம்மா கதாபாத்திரமாக இருந்தாலும் அவருக்கு நிறைய முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் இயக்குனர். கிளைமாக்சில் சரண்யாவின் நடிப்பும், வசனமும் சாதி வெறி பிடித்தவர்களுக்கு சரியான பாடமாக அமையும். இப்படிப்பட்ட அருமையான கதாபாத்திரத்தில் நடித்துவிட்டு படத்தின் புரமோஷனுக்கு வராமல் சரண்யா தவிர்த்தது ஆச்சரியமாக உள்ளது. ஆடுகளம் நரேன், சௌந்திரராஜா சாதி வெறி பிடித்தவர்களாக நடித்திருக்கிறார்கள். கதாநாயகனின் நண்பர்களாக காதல் சுகுமார், சரத் உள்ளிட்டவர்கள் நடித்திருக்கிறார்கள். இன்னும் கூடுதல் நகைச்சுவையை படத்தில் சேர்த்திருக்கலாம்.

தரணின் இசையில் பாடல்களை விடவும் பின்னணி இசை ரசிக்க வைக்கிறது. கிராமத்துப் பின்னணி, கதைக்களத்தை இயல்பாய் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் பாண்டி.

கிளைமாக்சை நெகட்டிவ்வாக முடித்திருப்பதற்குப் பதிலாக கொஞ்சம் பாசிட்டிவ்வாக, சாதிப்பது போல காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

அருவா சண்ட - சாதி சண்ட

 

அருவா சண்ட தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

அருவா சண்ட

  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓