Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

கார்பன் (மலையாளம்)

கார்பன் (மலையாளம்),Carbon
20 ஜன, 2018 - 13:41 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » கார்பன் (மலையாளம்)

நடிகர்கள் : பஹத் பாசில், மம்தா மோகன்தாஸ், சௌபின் சாஹிர், மணிகண்ட ஆச்சாரி, நெடுமுடி வேணு, விஜயராகவன், திலீஷ் போத்தன், ஷராபுதீன் மற்றும் பலர்.

இசை : விஷால் பரத்வாஜ்

ஒளிப்பதிவு : கே.யு.மோகனன்

டைரக்சன் : வேணு

மம்முட்டியை வைத்து 'முன்னறியிப்பு' படத்தை கொடுத்து அதிரவைத்த இயக்குனர் வேணு இயக்கத்தில், நான்கு வருடங்களுக்குப்பின் வெளியாகி இருப்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கிய படம் தான் இந்த 'கார்பன்'. அந்த எதிர்பார்ப்பை படம் ஈடுகட்டி இருக்கிறதா..?

தன்னுடன் படித்த நண்பர்கள் எல்லாரும் நல்ல வேலை, குடும்பம் என செட்டிலாகிவிட, படித்த படிப்புக்கு சம்பந்தம் இல்லாமல் ஒரு கமிஷன் ஏஜெண்ட் போல வாழ்க்கையை நடத்துகிறார் பஹத் பாசில். மரகத மாணிக்க கல், யானை விற்பனை, சீனாவில் இருந்து சைக்கிள் இறக்குமதி செய்து பணம் சம்பாதிப்பது என ஏதோ ஒன்றின் மூலம் திடீர் அதிர்ஷ்டத்தால் கோடீஸ்வரன் ஆகிவிடலாம் என்கிற கனவுடன் நாட்களை கடத்துகிறார்.

இதில் எதுவும் பலன் தாராத நிலையில் தான் பஹத் பாசிலிடம் மலைப்பகுதியில் தான் வாங்கிப்போட்டுள்ள பாழடைந்த ரிசார்ட் ஒன்றை புதுப்பித்து, அதன்மூலம் சுற்றுலா பயணிகளை இழுக்கும் திட்டத்தை ஒப்படைகிறார் கோடீஸ்வரர் விஜயராகவன். அதற்காக அந்த இடத்திற்கு செல்லும் பஹத் பாசிலுக்கு, அருகில் உள்ள மலைப்பகுதியில் திப்பு சுல்தான் காலத்தில் பதுக்கி வைக்கப்பட்ட புதையல் இருப்பதாக தெரியவர, அதை தேடிச்செல்லும் ஆசை துளிர் விடுகிறது.

இதற்குமுன் அப்படி தேடிச்சென்றவர்கள் யாரும் உயிருடன் திரும்பியதில்லை என தெரியவந்தாலும், காட்டுப்பகுதியில் ஆராய்ச்சி செய்துவரும் மம்தா மோகன்தாஸ், அந்த பகுதி மலைவாசியான மணிகண்டன் ஆச்சாரி மற்றும் ஒரு சிறுவனையும் அழைத்துக்கொண்டு புதையல் வேட்டைக்கு கிளம்புகிறார் பஹத் பாசில்.

மலைப்பயணம் அவர்களுக்கு தந்த பலவிதமான அனுபவங்களால், மற்ற மூவரும் பயணத்தில் இருந்து பின்வாங்க, பஹத் பாசில் மட்டும் விடாப்பிடியாக முன்னோக்கி நகர்கிறார். இறுதியில் புதையலை அவர் வேட்டையாடினாரா..? இல்லை புதையல் அவரது வாழ்க்கையை வேட்டையாடியதா என்பது க்ளைமாக்ஸ்.

யாரையும் ஏமாற்றாமல், அதேசமயம் குறுக்கு வழியில் திடீர் பணக்காரனாக விரும்பும் ஒருவனின் அனைத்து லட்சணங்களையும் படம் முழுதும் எந்த ஒரு இடத்திலும் குறையாமல் பிரதிபலித்துள்ளார் பஹத் பாசில். குறிப்பாக புதையலை தேடும் பணியில் இருந்து மூவர் பின்வாங்கிய நிலையிலும் தான் ஒருத்தனாக தனியாக கிளம்பும் பஹத் பாசில் தனது நடவடிக்கைகளில், மிதமிஞ்சிய குருட்டு நம்பிக்கை கொண்ட ஒருவனின் செயல்பாடுகளை அட்சரம் பிசகாமல் வெளிப்படுத்தியுள்ளார்.

வாழ்க்கையை ஜஸ்ட் லைக் தட் ஈஸியாக எடுத்துக்கொள்ளும் கேரக்டரில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஜாலியான மம்தாவை பார்க்க முடிகிறது. காதல் என்கிற கோட்டிற்குள் வராமல் பஹத் பாசில்-மம்தாவின் நட்பு படமாக்கப்பட்டுள்ள விதம் படத்திற்கு ப்ளஸ் பாயிண்ட்.. புதையலை தேட வழிகாட்டியாக வரும் மணிகண்டன் ஆச்சாரி மலைவாசியாகவே மாறிப்போயிருக்கிறார். புதையல் ஆசையை கிளப்பிவிடும் ரிசார்ட் வாட்ச்மேன் கொச்சு பிரேமன், உதவிக்காக கூடவே வரும் மலைவாசி சிறுவன், கோடீஸ்வர முதலாளியாக விஜயராகவன், அவரது வலதுகையாக வரும் கமிஷன் பார்ட்டி நெடுமுடி வேணு, யானைப்பாகனாக வந்து அவ்வப்போது பயமுறுத்தும் சௌபின் சாஹிர் என படத்தில் குறைந்த கதாபாத்திரங்களே இருந்தாலும் கதையை அழகாக நகர்த்த உதவியுள்ளனர்.

காட்டிற்குள், மலைகளில் பயணம் செய்வது என்றாலே திரில் தான். அதிலும் புதையலை தேடிய பயணம் என்பதால் கூடவே திகிலும் சேர்ந்து கொள்கிறது. அந்தவிதத்தில் இந்தப்பயணத்தின் ஒவ்வொரு நொடியையும் திகில், சந்தோஷம், பயம் பரபரப்பு என மாற்றி மாற்றி நம்மை கலவையான உணர்வுகளுக்கு ஆட்படுத்தும் வேலையை கே.யு.மோகனனின் ஒளிப்பதிவும் விஷால் பரத்வாஜின் பின்னணி இசையும் இணைந்து செய்துள்ளன.

தனது படங்களின் கதையை எதை நோக்கி நகர்த்தி செல்கிறார் என ரசிகர்களால் யூகிக்க முடியாதபடி படத்தை கொடுப்பது இயக்குனர் வேணுவின் பாணி. இதிலும் ஆரம்பத்தில் சதுரங்க வேட்டை பாணியில் அரைமணி நேரம் இலக்கில்லாமல் நகர்ந்தாலும் கூட மீதிப்படம் எதை நோக்கி பயணிக்கிறது என்பதில் நமக்கு எந்த குழப்பமும் ஏற்படவில்லை. புதையலை தேடும் காட்சிகளை காட்சிப்படுத்திய விதம் அருமை. அதிலும் க்ளைமாக்ஸில் அந்த புதையலின் தற்போதைய நிலை குறித்து சர்ப்ரைஸ் கொடுத்து நம்மை அனுப்பி வைக்கிறார் இயக்குனர் வேணு..

ஒப்பீடு என வரும்போது, வெளியாகி நான்கு வருடங்கள் ஆனாலும் கூட இப்போதுவரை நம் மனதில் இயக்குனர் வேணுவின் முந்தைய 'முன்னறியிப்பு' படம் ஏற்படுத்திய தாக்கத்தை இந்த 'கார்பன்' ஏற்படுத்த தவறிவிட்டது என்பதை ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்.



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in