சுட்டுபிடிக்க உத்தரவு
விமர்சனம்
சுட்டுப் பிடிக்க உத்தரவு - விமர்சனம்
தயாரிப்பு - கல்பதரு பிக்சர்ஸ்
இயக்கம் - ராம்பிரகாஷ் ராயப்பா
இசை - ஜேக்ஸ் பிஜாய்
நடிப்பு - மிஷ்கின், விக்ராந்த், சுசீந்திரன், அதுல்யா ரவி
வெளியான தேதி - 14 ஜுன் 2019
நேரம் - 1 மணி நேரம் 54 நிமிடம்
ரேட்டிங் - 2/5
படத்தின் தலைப்பே இது என்ன மாதிரியான கதையாக இருக்கும் என்பதை ஓரளவிற்கு யூகிக்க வைக்கும். ஏதோ ஒரு பெரும் குற்றம் செய்தவர்களை சுட்டுப் பிடிக்க உத்தரவு போடப்பட்டு அந்தக் குற்றவாளிகளை சுட்டுப் பிடித்தார்களா, சுடாமல் பிடித்தார்களா, உத்தரவை சரியாகச் செய்தார்களா என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், போக்கிரி ராஜா ஆகிய படங்களை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பாவின் மூன்றாவது படம் இது. முதல் படத்தை கொஞ்சம் வித்தியாசமாக யோசித்திருந்தார். இரண்டாவது படத்தில் அவர் யோசிக்கவேயில்லை. இந்த மூன்றாவது படத்தில் கிளைமாக்சில் மட்டும் கொஞ்சம் யோசித்திருக்கிறார்.
மிகப் பெரிய ஷாப்பிங் மாலில் இருக்கும் ஒரு வங்கியில் பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு நால்வர் தப்பிக்கிறார்கள். விஷயத்தைக் கேள்விப்பட்ட போலீஸ் கமிஷனர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்து கொள்ளையர்களை சுற்றி வளைக்க முயற்சிக்கிறார்கள். அவர்களில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட, மீதி மூவர் தப்பித்து அருகாமையில் உள்ள ஒரு ஹவுசிங் போர்டு குடியிருப்பில் பதுங்கிக் கொள்கிறார்கள். அவர்களை கமாண்டோ படை மூலமும், போலீஸ் படை மூலமும் தேடிக் கண்டுபிடிக்க தீவிர வேட்டையில் இறங்குகிறார் மிஷ்கின். அந்தக் கொள்ளையர்கள் பிடிபட்டார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
மேலே கதை என்று சொன்ன அனைத்துமே படத்தில் உள்ள வேறு கதை. ஆனால், நிஜமான கதையே வேறு. படத்தில் இருக்கும் ஒரே சுவாரசியம் அதுதான். அதையும் சொல்லிவிட்டால் இருக்கும் அந்த ஒரே சுவாரசியமும் போய்விடும். அதனால், இத்துடன் கதையை நிறுத்திக் கொள்வோம்.
கிளைமாக்சுக்கு முன்பாக திரைக்கதையில் அப்படி ஒரு டிவிஸ்ட் வைத்த இயக்குனர், கதையை ரீல் ரீலாக காதுல பூ கணக்காக சுற்றுவதுதான் படத்தின் அபத்தமாக இருக்கிறது. அதிலும் படத்தின் முதல் காட்சியே ஒரு கமிஷனரின் திட்டம் என்றால் அவ்வளவு மோசமாகக் கூட ஒரு கமிஷனர் திட்டம் போடுவாரா என்பது கேள்விதான்.
ஒரு பெரிய ஷாப்பிங் மாலில் உள்ள வங்கியில் இருந்து கொள்ளையடித்துவிட்டு எப்படி அவ்வளவு சுபலமாகத் தப்பிக்க முடியும். அதிலும் மக்கள் அதிக நடமாட்டமுள்ள அங்கு ஆளாளுக்கு துப்பாக்கி, எந்திரத் துப்பாக்கி மூலம் சுட்டுக் கொண்டே செல்கிறார்கள். குடியிருப்புப் பகுதிக்கு கொள்ளையர்கள் வந்த பின்னும் துப்பாக்கிகள் சரமாரியாக சுட்டுக் கொண்டேயிருக்கிறது. படத்தில் மொத்தம் எத்தனை குண்டுகள் சுடப்பட்டன என்று சரியாகக் கண்டுபிடித்துச் சொல்பவர்களுக்கு பரிசு வழங்கலாம். படம் முழுவதும் லாஜிக் மீறல்களுக்கும் அளவேயில்லை.
படத்தில் இவர்தான் நாயகன் என யாரையும் சொல்ல முடியாது. கமிஷனராக மிஷ்கின். அதே உருட்டு கண்களுடன் அதட்டி, உருட்டி, மிரட்டி மேலதிகாரியையும் மதிக்காமல் நேரடியாக மந்திரியிடம் பேசி கடமையாற்றும் காவல் அதிகாரி. அத்தனை குண்டான தோற்றத்துடன் சண்டை போட முடியாமல் ஆரம்பத்தில் சண்டையிடுகிறார்.
விக்ராந்த், இயக்குனர் சுசீந்திரன் கொள்ளையர்களாக நடித்திருக்கிறார்கள். விக்ராந்திற்காவது சில வசனங்கள், சில குளோசப்கள் உள்ளன. சுசீந்திரனுக்கு வா...வா...ஓடு...ஓடு...என ஓடவிட்டுக் கொண்டே பேச வைத்திருக்கிறார்கள். எங்கும் அவர் முகம் மனதில் பதியவேயில்லை.
கொள்ளையர்கள் வந்து புகுந்த அந்த ஏரியாவில் வசிக்கும் பெண்ணாக அதுல்யா ரவி. வேறு ஒரு வேலையாக வந்து டிவி குழுவினர் அதுல்யாவை திடீர் தொகுப்பாளராக ஆக்கி, மொபைல் மூலமாகவே நேரடி ஒளிபரப்பு எல்லாம் செய்கிறார்கள். அதுல்யாவும் ஆக்ஷன் ஹீரோயினாக களத்தில் இறங்கி குழந்தையை எல்லாம் காப்பாற்றுகிறார். கொள்ளையன் ஒருவனை அடித்து வீழ்த்துகிறார்.
படத்தில் ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங் தான் அதிகமாக வேலை பார்த்திருப்பார் போலிருக்கிறது. ஓடி ஓடி பல காட்சிகளை சுட்டிருக்கிறார். ஜேக்ஸ் பிஜாய் பின்னணி இசை பரவாயில்லை ரகம்.
கிளைமாக்சில் வரும் கொள்ளையர்கள், தீவிரவாதிகள் அட்டாக் மட்டுமே படத்தில் அசத்தல் விஷயம். அந்த ஒன்றில் மட்டும் அதிகம் யோசித்துவிட்டு மற்ற அனைத்திலும் கோட்டை விட்டிருக்கிறார்கள்.
பட குழுவினர்
சுட்டுபிடிக்க உத்தரவு
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்