3

விமர்சனம்

Advertisement

நடிப்பு - விஜய் ஆண்டனி, டயானா சம்பிகா, மஹிமா, ஜுவல் மேரி
இயக்கம் - ஜி. சீனிவாசன்
இசை - விஜய் ஆண்டனி
தயாரிப்பு - ஆர் ஸ்டுடியோஸ், விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்

தமிழ் சினிமாவில் தனக்கென தனித் தடத்தை உருவாக்கி வைத்திருப்பர் விஜய் ஆண்டனி. 'பிச்சைக்காரன்' படத்தின் வெற்றிக்குப் பிறகு அவர் மீதான கவனம் இன்னும் அதிகமாகிறது. அதன்பின் வந்த 'சைத்தான், எமன்' ஆகிய இரண்டு படங்கள் கொஞ்சம் ஏமாற்றினாலும், இந்த 'அண்ணாதுரை' விஜய் ஆண்டனியை மீண்டும் அண்ணாந்து பார்க்க வைக்கும்.

அறிமுக இயக்குனர் ஜி.சீனிவாசன், அவருடைய சொந்த ஊரான திருக்கோவிலூர் நகரத்தையே கதைக்களமாக வைத்துக் கொண்டிருக்கிறார். குடும்பம், காதல், அரசியல், ஆக்ஷ்ன் என அனைத்தும் கலந்த படமாக இந்த 'அண்ணாதுரை'யைக் கொடுத்திருக்கிறார். தமிழ் சினிமாவில் வழக்கமாகவே இருக்கும் சில காட்சிகள், சில கேள்விகள் ஆங்காங்கே இருந்தாலும் அவை கதை நகரும் விதத்தில் பெரிதாகத் தெரியவில்லை. கதையாகப் பார்த்தால் குடும்பக் கதையாகத் தெரியும் படத்தில் ஒரு கமர்ஷியல் சினிமாவுக்குரிய அத்தனை விஷயங்களும் இருக்கின்றன.

அண்ணாதுரை, தம்பிதுரை என இரட்டையராக அண்ணன், தம்பி என இரண்டு விஜய் ஆண்டனி. அண்ணாதுரை, காதல் தோல்வியால் எப்போதும் குடித்துக் கொண்டே பொறுப்பில்லாமல் சுற்றிக் கொண்டிருக்கிறார். தம்பிதுரை, பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக இருக்கிறார். தம்பிதுரைக்கு ஒரு பெண்ணைப் பார்த்து திருமண ஏற்பாடுகள் நடக்க இருக்கின்றன. அண்ணாதுரையும், ஒரு சந்தர்ப்பத்தில் காதல் தோல்வியை மறந்து, குடிப்பதை விட்டு விட முடிவெடுக்கும் நிலையில் ஒரு கொலை விவகாரத்தில் சிறைக்குச் செல்கிறார். அதன் பின் அந்தக் குடும்பத்தில் நடக்கும் பல திருப்பங்களும், எதிர்பாராத சம்பவங்களும்தான் படத்தின் மீதிக் கதை.

அண்ணாதுரை, தம்பிதுரை கதாபாத்திரங்களுக்கிடையில் தோற்றத்தில் பெரிய வித்தியாசம் இல்லை. தாடி வைத்திருந்தால் அண்ணாதுரை, தாடி இல்லாமல் இருந்தால் தம்பிதுரை. தோற்றத்தில் இல்லாத வித்தியாசம், நடிப்பில் மிக அழுத்தமாக இருக்கிறது.

தம்பிதுரையை விட அண்ணாதுரை கதாபாத்திரம் நம் மனதில் அப்படியே அழுத்தமாகப் பதிந்துவிடுகிறது. ஆரம்பத்திலிருந்து கடைசி வரை அண்ணாதுரையின் சென்டிமென்ட் நடிப்புதான் படத்திற்கு மிகப் பெரும் பலம். இடைவேளைக்குப் பின் தம்பிதுரை கதாபாத்திரத்தில் ஏற்படும் திருப்பம் எதிர்பாராத ஒன்று. அந்த தம்பிதுரையின் ஆக்ஷன் காட்சிகள் அதிரடியாக இருக்கின்றன. 'சலீம், நான், பிச்சைக்காரன்' வரிசையில் 'அண்ணாதுரை'யும் இடம் பெறும்.

படத்தில் மூன்று கதாநாயகிகள். டயானா சம்பிகா, தம்பி விஜய் ஆண்டனியின் ஜோடி. அறிமுக நடிகை என்று சொல்ல முடியாதபடி நடித்திருக்கிறார். அண்ணன் விஜய் ஆண்டனியை ஒரு தலையாகக் காதலிப்பவர்களாக மகிமா, ஜுவல் மேரி. மகிமா ஆரம்பத்திலும், கிளைமாக்சிலும் மட்டும்தான் 'என்ட்ரி, ரீ-என்ட்ரி' கொடுக்கிறார். ஜுவல் மேரி ஒரு சில காட்சிகளில் மட்டும் வந்து காணாமல் போய்விடுகிறார்.

மற்ற கதாபாத்திர நடிகர்களில் சென்டிமென்ட்டில் அழ வைக்கும் நடிப்பில் டயானாவின் அப்பாவாக நடித்திருக்கும் செந்தில்குமரன், விஜய்ஆண்டனியின் அப்பாவாக நடித்திருக்கும் நளினிகாந்த், அம்மா ரிந்து ரவி ஆகியோர் சென்டிமென்ட் மழையின் நனைய வைத்துவிடுகிறார்கள்.

வில்லன்களாக வட்டிக்கு பணம் கொடுக்கும் சேரன் ராஜ், சேர்மன் ஆக உதய்ராஜ்குமார், எம்எல்ஏ-வாக ராதாரவி வழக்கமான வில்லத்தனம் செய்கிறார்கள். பல படங்களில் பார்த்த கதாபாத்திரங்கள் தான்.

விஜய் ஆண்டனியின் இசையில் 'தங்கமா வைரமா...', 'ஓடாதே...' பாடல்கள் அர்த்தம் பொதிந்த பாடலாக இருக்கிறது. பின்னணி இசை பல காட்சிகளில் படத்தின் அழுத்தத்தை இன்னும் அதிகமாக்குகிறது.

இடைவேளை வரை அண்ணன், தம்பி, குடும்பக் கதையாக நகரும் படம், இடைவேளைக்குப் பின் அரசியல் களம், ஆக்ஷ்ன்-ஐ நோக்கிப் பயணிக்க ஆரம்பிக்கிறது. அதன் பின் பல திருப்பங்கள், பல சம்பவங்கள் என அடுக்கடுக்காக மாறி, மாறிப் போய்க் கொண்டேயிருப்பது கொஞ்சம் சோர்வை ஏற்படுத்துகிறது. ராதாரவி கதாபாத்திரம் இல்லாமலேயே கூட படத்தை முடித்திருக்கலாம்.

அண்ணாதுரை - அண்ணன், தம்பி பாசத்துடன் ஒரு அரசியல் விளையாட்டு

 

பட குழுவினர்

அண்ணாதுரை

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓