குயின் கங்கனா, சிம்ரன் கங்கனாவாக நடித்து வெளிவந்துள்ள படம் தான் சிம்ரன். இப்படம் ரசிகர்களை கவர்ந்ததா என்று பார்ப்போம்...
கதைப்படி, அமெரிக்காவில் பெற்றோர்களுடன் வசித்து வருபவர் விவகாரத்து பெற்ற பிரபுல் பட்டேல் எனும் கங்கனா ரணாவத். ஹோட்டல் ஒன்றில் பராமரிப்பாளராக வேலைபார்க்கிறார். கங்கனாவிற்கு எப்படியாவது இன்னொரு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பெற்றோர்கள் விரும்புகின்றனர். ஆனால் கங்கனா அதற்கு உடன்பட மறுக்கிறார். ஒருநாள், லாஸ்வேகாவில் இருக்கும் தனது தோழியை சந்திக்க கங்கனா செல்கிறார். அங்கு சூதாட்ட விளையாட்டில் நிறைய பணம் சம்பாதிப்பவர், ஒருக்கட்டத்தில் சம்பாதித்த பணத்தையும், மேற்கொண்ட கடன் வாங்கிய பணத்தையும் சூதாட்டத்தில் இழக்கிறார். இதனால் கடன் கொடுத்தவர்கள் கங்கனாவிடம் கேட்க, அவர்களின் பணத்தை ஈடுக்கட்ட வங்கி ஒன்றில் கொள்ளையடிக்க இறங்குகிறார். அதன்பின்னர் என்ன நடக்கிறது என்பது சிம்ரன் படத்தின் மீதிக்கதை.
படம் முழுக்க கங்கனாவை சுற்றியே நகருகிறது. மொத்த படத்தை ஒற்றை ஆளாக தன் தோளில் சுமத்தியிருக்கிறார். கங்கனாவின் நடிப்பில் குறையேதுமில்லை, கதைக்கு என்ன தேவையோ அதை பக்காவாக செய்திருக்கிறார்.
கங்கனா தவிர்த்து படத்தில் வேறு யாரும் சொல்லி கொள்ளும் அளவுக்கு இல்லை. நடிகர் சோமன் ஷா மட்டும் ஓரளவுக்கு ரசிகர்களை கவனிக்க வைக்கிறார்.
சச்சின் ஜிகாரின் இசையில் பாடல்கள் எதுவும் ரசிகர்களை ஈர்த்தமாதிரி தெரியவில்லை. பின்னணியும் இசையும் அப்படிதான்...
அனுஜ் ராகேஷ் தவானின் ஒளிப்பதிவு, அமெரிக்காவையும், படத்தில் நடித்தவர்களையும் அழகாக காட்டியிருக்கிறது.
சாகித், அலிகார் போன்ற ஏராளமான படங்களை இயக்கிய ஹன்சல் மேத்தா, சிம்ரன் படத்தை யதார்த்தமாக சிறப்பாக இயக்கியிருக்கிறார். கங்கனா என்ற ஒருவரை நம்பி படத்தை இயக்கியிருக்கிறார் ஹன்சல். அதில் பாதி வெற்றியும் பெற்றிருக்கிறார். இருப்பினும் உப்பு சப்பில்லாத வசனங்கள், பிற்பாதி மெதுவாக நகரும் திரைக்கதை ரசிகனை சற்று சலிப்படைய செய்கிறது. இருந்தாலும் கங்கனாவின் நடிப்புக்காக, சிம்ரன் படத்தை ஒருமுறை பார்க்கலாம், ரசிக்கலாம்.