அர்ஜூன் கபூர் இரண்டு வேடங்களில் நடித்து வெளியாகியிருக்கும் குடும்ப சென்ட்டிமென்ட் நிறைந்த காதல் திரைப்படம் தான் முபாராகன். இப்படம் ரசிகர்களை கவர்ந்ததா என்று இனி பார்ப்போம்...!
கதைப்படி, கரண் - சரண் எனும் இரட்டையர்களான அர்ஜூன் கபூர், சின்ன வயதிலேயே கார் விபத்தில் தங்களது பெற்றோர்களை பறி கொடுத்தவர்கள். பெற்றோரை இழந்த பிள்ளைகளை சித்தப்பா கர்தார் சிங் எனும் அர்ஜூன் கபூர், கரணை லண்டனில் வசிக்கும் தன் சகோதரியிடம் கொடுத்து வளர்க்கிறார். மற்றொரு குழந்தையான சரணை, மூத்த சகோதரர் பல்தேவ் சிங் எனும் பவண் மல்கோத்ராவிடம் கொடுத்து வளர்க்கிறார்.
கரண், சரண், திருமண வயதை எட்டியதும் திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கிறார்கள். அதன்படி, கரணுக்கு பிங்கிள் எனும் அதியா ஷெட்டியை திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கிறார்கள். ஆனால் கரணுக்கு ஏற்கனவே ஸ்வீட்டி எனும் இலியானா என்கிற காதலி இருக்கிறார். இதனால் சரணுக்கு பிங்கிளை திருமணம் செய்து வைக்க எண்ண, பெண்ணும் போய் பார்க்கிறார்கள். பார்த்த மாத்திரேத்திலேயே சரணுக்கு பிங்கிளை பிடித்து விடுகிறது. ஆனாலும் சரணுக்கும், நபீசா எனும் நேகா சர்மா காதலியாக இருக்கிறார்.
ஆனால் கதையின் திடீரென திருப்பமாக கரணை பிங்கிளுக்கும், சரணை ஸ்வீட்டிக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள். இறுதியில் யார், யாரை திருமணம் செய்தார்கள், ஆசைப்பட்ட காதலிகளுடன் அர்ஜூன் கபூர்(இரண்டு) இணைந்தார்களா...? என்பது படத்தின் மீதிக்கதை.
அர்ஜூன் கபூர், கரண் - சரண் என இரண்டு வேடங்களில் வித்தியாசம் காண்பித்து சிறப்பாக நடித்திருக்கிறார்.
அர்ஜூனை போலவே இலியானா, அதியா ஷெட்டி, ரத்தன் பதக், ராகுல் தேவ், நேகா சர்மா, கரண் குந்த்ரா உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களது பாத்திரமறிந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
ஒரு அருமையான காதல் கதையாக குடும்பம் சகிதமாக பார்க்கும்படி, குழப்பமின்றி அருமையாக இயக்கியிருக்கிறார் அனீஸ் பாஸ்மி. படத்திற்கு வசனம், திரைக்கதையும் வலுவாக அமைந்துள்ளன. முதல்பாகம் அருமை, இரண்டாம் பாகம் சற்று நீளமாக தெரிந்தாலும் ரசிகனுக்கு சலிப்பு தட்டவில்லை.
"ஹவா ஹவா..." பாடல் தவிர மற்ற பாடல்கள் ரசிகர்களை பெரிதாக ஈர்க்கவில்லை. ஒளிப்பதிவு ஓவிய பதிவாக இல்லாவிட்டாலும் ஓகே பதிவாக இருக்கிறது.
இரண்டு கதாபாத்திரம், இரண்டு காதல், பக்கா குடும்ப படம் என அழகாக வந்திருக்கிறது இந்த முபாராகன்.
மொத்தத்தில், "முபாராகன் - குடும்ப கொண்டாட்டம்"