பிஸ்தா,Pistha

பிஸ்தா - சினி விழா ↓

Advertisement
2

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - ஒன் மேன் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - ரமேஷ் பாரதி
இசை - தரண்குமார்
நடிப்பு - சிரிஷ், மிருதுளா முரளி, அருந்ததி நாயர், சதீஷ், யோகி பாபு
வெளியான தேதி - 7 அக்டோபர் 2022
நேரம் - 2 மணி நேரம் 2 நிமிடம்
ரேட்டிங் - 2/5

ஒரு படம் என்றால் முதல் பாதி சிறப்பு, இரண்டாம் பாதி சிறப்பு, கிளைமாக்ஸ் சிறப்பு என்று ஏதாவது ஒன்றை மட்டும் சொல்வது போல் இருக்கக் கூடாது. ஒட்டு மொத்த படமும் சிறப்பு என்று சொல்லும்படியாக இருக்க வேண்டும். இந்தப் படத்தில் கிளைமாக்ஸை மட்டும் முற்போக்காக யோசித்து விட்டு, அதற்கு முன்பாக காட்சிகளை நம்மை சோதிக்கும் அளவிற்கு எடுத்துத் தள்ளி இருக்கிறார்கள்.

பெற்றோர் பார்த்து நடத்த உள்ள திருமணங்களில் விருப்பமில்லாமல் இருக்கும் மணப்பெண்களை அவர்களது வேண்டுகோளின்படி கடத்தி அவர்களது காதலர்களுடன் சேர்த்து வைப்பதை தொழிலாக செய்து வருபவர் படத்தின் நாயகன் சிரிஷ். வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தாலும், குடும்ப மானத்தைப் பற்றிக் கவலைப்படாமல் இப்படி ஒரு வேலையைச் செய்கிறார். அவருக்கு மிருதுளா முரளி மீது காதல் ஏற்படுகிறது. திருமணங்களைத் தடுக்கும் வேலையை விடச் சொல்கிறார் மிருதுளா. ஆனால், அதைவிட முடியாது என மறுக்கிறார் சிரிஷ். இந்நிலையில் சிரிஷுக்கு குறிப்பிட்ட நாட்களுக்குள் திருமணம் நடக்கவில்லை என்றால் அவர்களது குடும்பத்திற்குக் கேடு என்கிறார் ஜோசியர். மணப் பெண் இல்லாமலேயே திருமணத்திற்குக் தேதி குறித்து, மண்டபம் புக் செய்து அந்த நாள் வரை செல்கிறார். திருமணத்திற்கு முதல் நாள் வரை மணப் பெண்ணைத் தேடுகிறார்கள். மணப்பெண் கிடைத்தாரா இல்லையா என்பதுதான் கிளைமாக்ஸ்.

படத்தின் ஆரம்பம் முதல் கிளைமாக்ஸ் முன்பு வரை என்னென்னமோ எடுத்துத் தள்ளி இருக்கிறார்கள். சிவகார்த்திகேயன், சூரியை மனதில் வைத்து இயக்குனர் ரமேஷ் பாரதி கதை எழுதி இருப்பார் போலிருக்கிறது. அவர்கள் கிடைக்காமல் போய் கதாநாயகனாக சிரிஷ், கதாநாயகனின் கூடவே இருக்கும் அவரது மாமாவாக சதீஷ் ஆகியோர்தான் கிடைத்திருக்கிறார்கள். இருவருக்குமே நகைச்சுவை நடிப்பு சிறிதும் வரவில்லை. இருவரும் அடிக்கடி டபுள் மீனிங் ஜோக்குகளை அடித்தாலும் அவற்றிற்கும் சிரிப்பு வரவில்லை. கிளைமாக்ஸ் மட்டுமே கதாநாயகன் சிரிஷிக்கு பிடித்திருக்கிறதோ என்னமோ அங்கு மட்டும் பேசாமல் சிறப்பாக நடித்து அனுதாபப்பட வைக்கிறார்.

படத்தில் இரண்டு கதாநாயகிகள். கிளைமாக்ஸ் வரை மிருதுளா முரளி மட்டும்தான் கதாநாயகி என்று நினைத்திருப்போம். படம் முடியும் போது அவருடைய பக்கத்து வீட்டு அக்காவாக வரும் அருந்ததி நாயர் கதாநாயகியாக மாறிவிடுகிறார். அதுவரை தோழி கதாபாத்திரம் போலத்தான் இருக்கிறார் அருந்ததி. அந்த சஸ்பென்ஸை திரைக்கதையில் காப்பாற்றியிருக்கிறார் இயக்குனர்.

சிரிஷ் அப்பாவாக ஞானசம்பந்தன், அம்மாவாக தாட்சாயிணி, தாத்தாவாக லொள்ளு சபா சாமிநாதன். காமெடியான குடும்பம் என அபத்தமான ஒரு குடும்பத்தைக் காட்டியிருக்கிறார் இயக்குனர். யோகி பாபு படத்தில் இருக்கிறார். திடீர் என வருகிறார் திடீர் என காணாமல் போய்விடுகிறார். கவுண்டமணியுடன் பல படங்களில் காமெடியில் கலக்கிய செந்தில் சில காட்சிகளில் வந்து போகிறார்.

சினிமா எப்படியெப்படியோ மாறிப் போய்க் கொண்டிருக்கிறது. 'நகைச்சுவைப் படம்' என்று சொல்லிக் கொண்டு இன்னும் இந்த மாதிரியான படங்களை எப்படி யோசித்து செலவு செய்து எடுக்கிறார்களோ தெரியவில்லை. முன்கதைச் சுருக்கம் கேட்டுவிட்டு கிளைமாக்ஸ் பத்து நிமிடத்தை மட்டும் பார்க்கலாம்.

பிஸ்தா - கிளைமாக்சில் மட்டும்

 

பிஸ்தா தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

பிஸ்தா

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓