Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

மெட்ரோ

மெட்ரோ,metro(tamil)
06 ஜூலை, 2016 - 17:32 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » மெட்ரோ

தினமலர் விமர்சனம்


வேலை வெட்டி இல்லா விபரீத புத்தியுடைய ஆண்களுக்கு தங்கம் மீதான வெறியை கூட்டும் விதத்திலும், வேலைக்கு போகும் பெண்களின் ஆபரண நகைகள் மீதான மோகத்தை குறைக்கும் வகையிலும் நெஞ்சை பதற வைக்கும் சங்கிலி பறிப்பு சம்பவங்களையே கதைக்களமாக கொண்டு, பெருவாரியான புதுமுகங்களுடன் பாபி சிம்ஹா வில்லானிக் ஹீரோவாக நடிக்க, அனந்தகிருஷ்ணனின் எழுத்து, இயக்கத்தில் வெளிவந்திருக்கும் பரபரப்பு கதையம்சமுடைய பக்கா டெக்னிக்கல் ஸ்பெஷாலிட்டிப்படமே மெட்ரோ.


வேலையிலிருந்து ஒய்வு பெற்றஅப்பா, பாசக்கார அம்மா, செல்லதம்பி, தோள் கொடுக்கும் தோழன், தான் நிருபராக வேலை பார்க்கும் பத்திரிகை அலுவலகத்திலேயே வேலை பார்க்கும் அழகிய காதலி என மகிழ்ச்சிகரமாக வாழ்க்கை பயணம் செய்து கொண்டிருக்கும் பரிவு பத்திரிகை நிருபர் அறிவழகன் எனும் ஹீரோ சிரீஷின் வாழ்க்கையில் சங்கிலி பறிப்பு திருடர்களால் திடுக்கிடும் திடீர் திருப்பம் ஏற்படுகிறது.


சென்னை மெட்ரோ சிட்டியையே உலுக்கும் செயின் திருடர்களின் பணத்தாசைக்கு தன் பாசத்தாயையே பரிதாபமாய் பறிகொடுக்கும் நாயகர் அறிவு - ஷிரீஷ், கொதித்தெழுந்து, பேனா பிடித்த கையில் ஆயுதம் ஏந்துகிறார். அதிரடி ஆக்ஷனில் குதிக்கிறார். தோழன் சென்ராயனுடன் சேர்ந்து கொண்டு செயின் பறிப்பு திருடர்களையும் அவர்களது செயின் லிங்க்கையும் தேடிப் பிடித்து தீர்த்து கட்டும் ஹீரோ சிரீஷுக்கு அடுத்தடுத்து பேரதிர்ச்சிகள் காத்திருக்கின்றன. அவை என்ன? தடை பல கடந்து சிரீஷ், மெட்ரோ சிட்டியை மிரட்டும் செயின் பறிப்பு திருடர்கள் அனைவரையும் ஒழித்துக்கட்டினாரா? அல்லது, அவர்களால் சிரீஷ் ஓழித்துக் கட்டப்பட்டாரா..? என்பது தான் மெட்ரோ படத்தின் மொத்த கதையும்!


பரிவு பத்திரிகையின் நிருபர் அறிவழகனாக, கதையின் அறிமுகநாயகர் சிரீஷ் சிறப்பாக நடித்திருக்கிறார். போதை அப்பாவிடம் பாதி சிகரெட் வாங்கி வைப்பதில் தொடங்கி, கல்லூரியில் படிக்கும் தம்பி கேட்ட காஸ்ட் லீ பைக்கை வாங்கித் தர முடியாது தவிப்பது வரை... அறிமுகம் என்பது தெரியாத அளவுக்கு அழகாக நடித்திருக்கிறார். ஆக்ஷன், லவ், காமெடி, சென்டிமென்ட் என எல்லாவற்றிலும் இவரது நடிப்பு இதம், பதம் .


தானும் இருக்கிறேன் இந்த ஆக்ஷன் படத்தில் என கிடைத்த வாய்ப்பில், கிடைத்த கேப்பில் வந்து போய் நன்றாகவே நான் கைந்து சீன்களில் நடித்துப் போகிறார் ரம்யாவாக வரும் கதாநாயகி மாயா.


சங்கிலி பறிப்புகூட்டத் தலைவன் குணா வாக கம்பீரமான பேச்சும், ஆப்ரிக்கபச்சை தவ்ளை போதை வீச்சுமாக செயின் பறிப்பு ஸ்கெட்ச் கில்லாடியாக வழக்கம் போலவே பாபி சிம்ஹா சம்பந்தப்பட்ட பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். வாவ்! அதிலும், ஸ்கெட்ச் குணாவாக அவர், ஹீல்ஸ் போட்டிருக்கிற லூஸ் கேர் விட்டிருக்கிற பெண்ணாக இல்லாது பார்த்து தான் சங்கிலி அறுக்கணும்... என்று சிஷ்யர்களுக்கு கிளாஸ் எடுக்கும் விதமும், ‛ஒரு ஏரியாவில் சங்கிலி அறுக்க போறதுக்கு முந்தி அந்த இடத்து சந்து பொந்து எல்லாம் பக்காவாக தெரிந்து வைத்திருக்கணும்... அப்போதான் ஈஸியாக தப்ப முடியும்... என ஸ்கெட்ச் போட்டுத் தரும் லாவகமும், மாஜி கிரிமினல் கீறல் மணிக்கு அடைக்கலம் தந்திருக்கும் மனிதாபிமானமும், நெயில் கட் பண்ணு... பொம்பளைங்க கொடுக்கிற தெய்வம் அவங்க கழுத்துலகிடக்கிற செயின் அறுக்கிறப்போ., அவங்களுக்கு காயம் ஏதும் படும்... அது கூடாது ...என பதறும் இடமும் பாபி சிம்ஹா மிகச் சிறந்த வில்லானிக் ஹீரோவாக உயர்த்தி பிடிக்கின்றன என்றால் மிகையல்ல்!


நீங்கள்ளாம் நாய்ங்க தான்டா, நான் இல்லன்னா நீங்கள்லாம் சொரி வந்து ரோட்டில் அடிபட்டு கிடப்பிங்க... என தனக்கு எதிராக திரும்பும் சிஷ்யர்களைப் பார்த்துக் கர்ஜிக்கும் இடத்திலாகட்டும், "பணம் இருக்கிறவன் கிட்ட தான் இந்த உலகம் அடிமையா இருக்கும், நீ அடிமையா இருக்கப் போறீயா? இல்ல, உலகத்த அடிமையா ஆக்கப் போறீயா..? என சிஷ்யர்களை உசுப்பிவிடுவதிலாகட்டும் அனைத்திலும் பாபி செம மிரட்டல் நடிப்பை வழங்கியிருக்கிறார்.


நாயகரின் எந்த வகையிலும் சேராத சப்ப மூஞ்சி நண்பன் குமாராக சென்ட்ராயன், திருட்டு மூஞ்சி தம்பி கணேஷாக யமுனா சத்யா, "இப்பல்லாம் பொண்ணுங்க ரொம்ப ஆசை படுறாங்க... லவ் ரொம்ப காஸ்ட்லி ஆயிடுச்சு மச்சான்..." என நிஷாந்த புலம்பும் இடமும் தன் தவறு தெரிந்து விடக் கூடாது.. தாயையே அவர் தீர்த்து கட்டும் இடமும் அவரை திரும்பி பார்க்க வைக்கின்றன.


யார் இந்த எறா மூஞ்சி, நரி மூஞ்சி எனக் கேட்கும் வவ்வால், சதா சர்வ நேரமும் நரம்பெல்லாம் நஞ்சிபோன நிலையிலும் பாபியின் அறையில் படுத்தபடுக்கையாக கஞ்சா புகைத்தபடி, குடித்தபடி காமெடி பண்ணும் கீறல் மணி மற்றும் மதியழகனாக சத்யா, கதாநாயகரின் பாசக்கார அம்மா துளசி, பத்திரிகை ஆசிரியர் - ஈ. ராமதாஸ் அடப்பாவி லுக்கில் அப்பாவி காதலாராக கெஸ்ட் ரோலில் வந்து போகும் யோகி பாபு, உள்ளிட்ட அனைவரும் பக்காவாக பாத்திரமறிந்து பளிச்சிட்டுள்ளனர்.


பூமி யாருக்கும் சொந்தம் இல்லடா.., மெட்ரோ ரைஸ்.., நான் யார் முகமா..? உள்ளிட்ட பாடல்களும் பின்னணி இசையும் ஜோகனின் இசையில் மிரட்டல். ரமேஷ் பாரதியின் படத்தொகுப்பு குறையொன்றுமில்லா பலே தொகுப்பு, என்.எஸ். உதயகுமாரின் ஒளிப்பதிவு ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு விதமான மிரட்டல் பதிவு.


அனந்த கிருஷ்ணனின் எழுத்து, இயக்கத்தில், "பெத்தவங்க பிள்ளைங்களோட ஆசையை நிறைவேத்தலாம் பேராசையை எல்லாம் நிறைவேத்த முடியது" என்பது உள்ளிட்ட அர்த்தம் பொதிந்த வசனங்கள், காந்தி புடிக்குமா? ஹிட்லர் புடிக்குமா... எனும் கேள்வியும் அதற்கான பதிலுமான காட்சிகள்... ஆகிய சிறப்புகளுடன்.,

"வேலை வெட்டி இல்லா விபரீத புத்தியுடைய இளைஞர்களுக்கு, ஆண்களுக்கு தங்கம் மீதான வெறியை கூட்டும் விதத்திலும், வேலைக்கு போகும் பெண்களின் ஆபரண நகைகள் மீதான மோகத்தை குறைக்கும் வகையிலும் நெஞ்சை பதற வைக்கும் சங்கிலி பறிப்பு சம்பவங்களையே கதைக்களமாக கொண்டு, இக்காலத்து, கயவாளிப் பயபுள்ளைகளுக்கு கண்டதையும் கத்துக் கொடுக்கும் வகையில் இருப்பது சற்றே ஆபத்து!


மற்றபடி, அனந்த கிருஷ்ணனின் எழுத்து, இயக்கத்தில் கதை, திரைக்கதையைக் காட்டிலும், காட்சிப்படுத்தலிலும், தொழில்நுட்பத்தில் சிறந்த விளங்கும், "மெட்ரோ - செம மிரட்டல் மெர்சல் ப்ரோ!"

--------------------------------------------------------

கல்கி விமர்சனம்

கல்லூரி மாணவர்கள் சங்கிலி பறிப்புக் குற்றங்களில் ஈடுபடுவதை அடிக்கடி நாளிதழ்களில் பார்க்கிறோம் அல்லவா? அந்த ஒற்றைவரிதான் கதை.

படத்தைப் பார்க்கும்போது பல கேள்விகள் எழுகின்றன. வரி விலக்குக் கிடைக்காது என்பதை முன்கூட்டியே தெரிந்துதான் 'மெட்ரோ' என்ற பெயர் வைத்தார்களா? சங்கிலி பறிப்பவர்கள் மெட்ரோ நகரங்களில் மட்டும்தான் செயல்படுகிறார்களா?

குறிப்பிட்ட படங்களைக் குழந்தைகள் பார்க்கக்கூடாது எனத் தடை செய்வார்கள் அல்லவா? இந்தப் படத்தைக் கல்லூரி மாணவர்கள் பார்க்கக்கூடாது என்று தடைவிதிக்கலாம் போல இருக்கிறதே? பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார்களா? அல்லது அவர்களிடம் இருந்து எப்படி சங்கிலி பறிப்பது என்பதை விஸ்தாரமாகச் சொல்லிக் கொடுக்கிறார்களா?

அற்புதமான சிறுகதை போலத் தொய்வில்லாமல் விறுவிறுப்பாக நகரும் படத்தில், யோகிபாபு வரும் சொதப்பல் காட்சகிளை ஏன் வைத்தார்கள்? சங்கிலியைப் பறித்த திருடன் ஓடத் தான் பார்ப்பானே தவிர, தன்னைப் பிடிக்க முடியாமல் தூரத்தில் நின்று திட்டுபவனை நிதானமாக இறங்கித் தாக்க வருவானா? திருடிவிட்டுத் தப்பும்போது தொடர்ந்து வந்து விபத்துக்குள்ளாகும் காவல் அதிகாரியிடமே போய் அவரது செயினையும் திருடுவானா?

அபத்தமான நகைச்சுவையும், டூயட்டுகளும் இல்லாமல் ஆறுதல் அளிக்கும் இந்தப் படத்தில் அசரீரி பாட்டுகள் எதற்கு?

கீறல் என்ற கதாபாத்திரம் துருத்திக் கொண்டு இருக்கிறதே? அது எதற்கு?

பிள்ளைகள் கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுக்கும் மிடில் கிளாஸ் அப்பா, அம்மாவை அப்படியே சித்தரித்திருக்கும் நடிகர் மற்றும் நடிகையை வருங்காலத்தில் சிறப்பாகப் பயன்படுத்துவார்களா?

'அடிமையாக இருக்கப்போகிறாயா அல்லது அடிமையாக்கப் போகிறாயா?' மாதிரியான கூர்மையான வசனங்களை எழுதியவரைப் பாராட்டியே தீரவேண்டும்தானே?

பைக்கில் அழைத்துவரும் குழந்தையைக் குரூரமாகச் சாலையில் விழவைக்கும் காட்சி தேவைதானா? தணிக்கையில் இந்தக் காட்சி எப்படித் தப்பித்தது? அப்பா மகன் நெருக்கத்தை காண்பிக்க அப்பாவிடமே சிகரெட் மற்றும் மதுவை மகன் கேட்கும் காட்சி உசிதம்தானா?

காதலியின் தூண்டுதலால் சக்திக்கு மீறி செல்போன், பைக் வாங்கியே ஆக வேண்டும் எனச் சில மாணவர்கள் பித்தாக மாறிப் பாதை தவறுவதை இந்தப் படம் பார்த்தாவது திருத்திக் கொள்வார்களா?

பிள்ளைகளின் ஆசையைப் பூர்த்தி செய்யலாம் ஆனால் பேராசைகளைப் பூர்த்தி செய்ய கூடாது என்று இந்தப் படத்தில் வலியுறுத்தப்படும் கருத்தை மிடில் கிளாஸ் பெற்றோர்கள் மனத்தில் இருத்துவார்களா?

மெட்ரோ படமா? பாடமா?

திரையரங்கில் சிங்கநல்லூர் ராம்பிரசாத் கருத்து: பிள்ளைகளுக்கு வர் செல்லம் கூடாது. பெண்கள் கவனத்தோடு இருக்க வேண்டும் மாதிரியான நல்ல கருத்துக்கள் இருக்கு. பலரும் புதுமுகங்களா இருந்தாலும் நல்லா நடிச்சிருக்காங்க. ஆனா எப்படித் திருடணும்னு கத்துக் கொடுக்கிற மாதிரி இருக்கு!வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in