Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

காம்ரேட் இன் அமெரிக்கா (மலையாளம்)

காம்ரேட் இன் அமெரிக்கா (மலையாளம்),comrade in america
 • காம்ரேட் இன் அமெரிக்கா (மலையாளம்)
 • இயக்குனர்: அமல் நீரத்
06 மே, 2017 - 15:53 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » காம்ரேட் இன் அமெரிக்கா (மலையாளம்)

நடிகர்கள் : துல்கர் சல்மான், கார்த்திகா முரளிதரன், ஜான் விஜய், சித்திக், சாந்தினி (மிருத்திகா), சௌபின் சாஹிர், திலீஷ் போத்தன் மற்றும் பலர்

இசை : கோபிசுந்தர்

ஒளிப்பதிவு : ரணதீவ்

டைரக்சன் : அமல்நீரத்


மம்முட்டியை வைத்து 'பிக் பி', பிருத்விராஜின் 'அன்வர்' என மாஸ் படங்களை இயக்கிய அமல்நீரத் டைரக்சனில் துல்கர் சல்மான் நடித்துள்ளதால் எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள படம் தான் இந்த 'காம்ரேட் இன் அமெரிக்கா' சுருக்கமாக 'சி.ஐ.ஏ'..


கேரளாவின் சிறிய நகரம் ஒன்றில் கல்லூரி மாணவர் துல்கர் சல்மான். அடிப்படையில் கம்யூனிஸ்ட், படிக்கும்போதே தப்பை தட்டி கேட்கும் அவரது குணம் அந்த கல்லூரியில் அமெரிக்காவில் இருந்து வந்து படிக்கும் கார்த்திகாவுக்கு பிடித்துவிட இருவருக்கும் காதல் மலர்கிறது. கார்த்திகாவின் உள்ளூர் கார்டியன் மூலமாக இந்த விபரம் கார்த்திகாவின் தந்தைக்கு தெரியவர, துல்கருக்கே தெரியாமல் கார்த்திகாவை அமெரிக்காவுக்கு அழைத்து சென்றுவிடுகிறார்கள்.


கார்த்திகாவுக்கு அமெரிக்காவில் திருமணம் செய்யவும் ஏற்பாடு செய்கிறார் அவரது தந்தை. எப்படியாவது கிளம்பி வா என கார்த்திகா துல்கருக்கு தகவல் அனுப்புகிறார். திருமணத்திற்கு கிட்டத்தட்ட பதினைந்து நாட்கள் இருக்கும் நிலையில் பாஸ்போர்ட், விசா ஏதும் இல்லாத துல்கர் அமெரிக்கா போய் தன் காதலியின் திருமணத்தை தடுத்து அவளை கைபிடிக்க நினைக்கிறார். ஒருவழியாக பாஸ்போர்ட் உடனடியாக கிடைத்தாலும் விசா கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. அமெரிக்காவில் இருக்கும் துல்கரின் நண்பர் ஒருவர் மாற்றுவழி ஒன்று இருப்பதாகவும் ஆனால் அது உயிருக்கே ரிஸ்க்கானது என்றும் கூற, காதலிக்காக அந்த பயணத்தை மேற்கொள்கிறார். துல்கரால் அந்த ஆபத்தான பயணத்தை தாண்ட முடிந்ததா..? தனது காதலியை சந்தித்து அவளது திருமணத்தை நிறுத்தி அவளை கைபிடிக்க முடிந்ததா என்பதை க்ளைமாக்ஸில் ட்விஸ்ட்டுடன் சொல்லியிருக்கிறார் இயக்குனர் அமல் நீரத்.


துடிப்பான இளைஞனாக, கம்யூனிஸ்ட் வாலிபனாக துல்கர் சல்மான்.. எந்நேரமும் குறும்பு கொப்பளிக்கும் அவரது முகம் காட்சிகளை அவ்வளவு ப்ரெஸ்சாக வைத்திருக்கிறது. காதலியை தேடி மெக்சிகோ வழியாக ஆபத்தான பயணத்தை அவர் மேற்கொள்ளும்போது சில இடங்களில் நமது மனம் பதைபதைப்பது உண்மை. ஆனால் இறுதியில் அமெரிக்காவில் ஏற்படும் திருப்பமும் அதை தொடர்ந்து துல்கர் எடுக்கும் முடிவும் கேரள கம்யூனிஸ்ட் இளைஞன் தனது காலரை தூக்கிவிட்டுக்கொள்ளும்படி இருக்கிறது.


கதாநாயகியாக அறிமுகம் ஆகியிருக்கும் கார்த்திகா முரளிதரன், ஒரு சாயலில் ஆரம்பகால நடிகை ரோகிணியை ஞாபகமூட்டுகிறார். சில காட்சிகளே வந்தாலும் துல்கருடனான அவரது ஜோடிப்பொருத்தமும் காதல் காட்சிகளும் கச்சிதம். இடைவேளைக்கு பின் படத்தில், அமெரிக்க பயணத்தில் இணைந்து கொள்ளும் சாந்தினியும் (555 நாயகி) தனது பொறுப்பை சரிவர செய்திருக்கிறார்.


துல்கரின் மெக்ஸிகோ வழியான அமெரிக்க பயணத்தில் அவருக்கு துணையாக வரும் ஜான் விஜய்க்கு நிறைய முக்கியத்துவம் கொடுத்து அதிக காட்சிகளும் கொடுத்திருக்கிறார்கள்.. இலங்கை தமிழனாக அவரது கேரக்டரை வடிவமைத்து தமிழிலேயே அவரை பேச வைத்த இயக்குனரின் தாராள மனதை பாராட்டலாம்.. ஆனால் ஜான் விஜய்யின் பயணம் பாதியிலேயே தடைபடும்போது பரிதாபப்பட வைக்கிறார்.


துல்கர் படங்களில் தொடர்ந்து நண்பராக நடித்து வரும் சௌபின் சாஹிர், 'மகேஷிண்டே பிரதிகாரம்' இயக்குனர் திலீஷ் போத்தன் இருவரும் இடைவேளை வரையிலான காட்சிகளில் படம் கலகலப்பாக நகர துல்கருடன் கூட்டணி அமைத்து ஜமாய்த்திருக்கிறார்கள்.. துல்கரின் அப்பாவாக வரும் சித்திக்கின் அப்பா கேரக்டர் அனைத்து இளைஞர்களுக்கும் பிடிக்கும்..


ரணதீவின் ஒளிப்பதிவில் கேரளா சம்பந்தப்பட்ட காட்சிகளில் பரவலாக கம்யூனிஷத்தின் சாயல் தெரிவதும், இடைவேளைக்குப்பின் ஒரு சாகச பயணத்திற்கு உண்டான மூடை உருவாக்குவதும் என அசத்தியுள்ளார். கோபிசுந்தரின் பின்னணி இசை தேவலாம்..


காதலும் காதலுக்கான ஆபத்தான பயணமும் தான் படத்தின் கதை.. அதை ரொமான்ஸ், காமெடி ஆக்சன் என கலந்து படமாக்கியிருக்கிறார் அமல் நீரத். ஆனால் காதலை சொன்ன விதத்தில் அழுத்தம் இல்லாததால், துல்கர் காதலியை தேடி அமெரிக்கா கிளம்புவது பெரிய அளவில் நம்மை ஈர்க்கவில்லை.. தவிர அவ்வளவு ரிஸ்க்கான பயணம் என வர்ணிக்கப்படும் அந்த அமெரிக்க பயணத்தில் ஏராளமான லாஜிக் ஓட்டைகள் இருக்கின்றன..


அமெரிக்க எல்லையை தாண்டுவது ஒரு சாதாரண மனிதனுக்கு அவ்வளவு சாத்தியமா என்பதை விட, அமெரிக்காவின் பாதுகாப்பு அவ்வளவு மோசமாகவா இருக்கிறது என கேள்வியை எழுப்புகிறது இடைவேளைக்குப்பின் வரும் காட்சிகள். அதேசமயம் இந்தியாவிலிருந்து விசா இல்லாமல் மத்திய அமெரிக்காவில் உள்ள நிகரகுவா போன்ற ஒருசில நாடுகளுக்கு சென்று அங்கிருந்து அமெரிக்காவுக்கு செல்லமுடியும் என சில தகவல்கள் நம்மை ஆச்சர்யப்படுத்துகின்றன.


இதெல்லாம் தவிர ஏற்கனவே சிலவருடங்களுக்கு முன் வெளியான 'நீலாகாசம் பச்சக்கடல் சுவண்ண பூமி' என்கிற படத்திலும் இதேபோல தனது காதலியை தேடி நாகாலாந்து மாநிலம் வரை துல்கர் ஒரு பயணம் மேற்கொண்டதால் அதன் சாயலும் தவிர்க்க முடியாமல் இந்தப்படத்தின் மேல் ஒட்டிக்கொள்கிறது. அப்போது உள்நாடு, இப்போது வெளிநாடு அவ்வளவுதான் வித்தியாசம்.


இருந்தாலும் ஜாலியான ஒரு சாகச பயண அனுபவத்தை தருவதால் அதற்காகவேனும் இந்த 'காம்ரேட் இன் அமெரிக்கா'வை ரசித்து பார்க்கலாம்.வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

 • டாப் 5 படங்கள்

 • Advertisement
  dinamalar-advertisement-tariff

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in