நடிகர்கள் ; நிவின்பாலி, ஐஸ்வர்யா ராஜேஷ், அபர்ணா கோபிநாத், காயத்ரி சுரேஷ் மற்றும் பலர் இசை ; பிரசாந்த் பிள்ளை டைரக்சன் ; சித்தார்த் சிவா
தொழிலாளிகளின் நலனுக்காகவே தனது வாழ்கையை அர்ப்பணித்த ஒரு கம்யூனிஸ்ட் தோழரின் கதை தான் 'சகாவு'. கம்யூனிஸ்ட் கட்சியில் இளைஞர் அணியில் ஒரு சாதாரண உறுப்பினராக இருப்பவர் இளைஞர் நிவின்பாலி (கிருஷ்ண குமார்).. அவருக்கு கட்சியில் சில தகிடுதத்தங்கள் செய்து எப்படியாவது முக்கிய பொறுப்புக்கு வந்துவிட வேண்டும் என்பது ஆசை. ஒருநாள் மருத்துவமனையில் ஐ.சி.யூவில் இருக்கும் நோயாளி ஒருவருக்கு ரத்தம் கொடுக்க சொல்லி கட்சி அவரை அனுப்பி வைக்கிறது..
வேண்டா வெறுப்பாக அங்கே செல்லும் நிவின்பாலிக்கு, தான் ரத்தம் கொடுக்க வந்துள்ள நபர் மிகப்பெரிய மதிப்பிற்குரிய கம்யூனிஸ்ட் தலைவர் 'சகாவு' கிருஷ்ணன் (அவரும் நிவின்பாலி தான்) என்பது போகப்போக தெரிகிறது. அவர் இளைஞராக இருந்த காலம் தொட்டு தொழிலாளிகளின், சாதாரண மக்களின் பிரச்சனைகளை நேர்மையாக அணுகி தீர்வு கண்டதும் மக்கள் அவரை தங்கள் காட்பாதர் ஆக நினைப்பதும் தெரியவருகிறது.
அவரின் அருமை பெருமைகளை கேட்டறிந்த நிவின்பாலி கட்சியில் குறுக்கு வழியில் முன்னேற நினைத்த தனது செயலை நினைத்து வெட்கப்பட்டு மனம் மாறுகிறார். மேலும் இப்போது இசி.சி.யூவில் இருக்கும் சகாவு (நிவின்பாலி)யின் இந்த நிலைக்கு காரணம் அவருக்கு வயதானதால் ஏற்பட்ட உடல் உபாதையால் அல்ல என்றும், தேயிலை தோட்ட விவகாரம் ஒன்றில் தலையிட்டதால் அவரது எதிரிகளால் தாக்கப்பட்டு தான் இந்த நிலைக்கு ஆளானார் என்பதும் தெரியவருகிறது..
சகாவு கிருஷ்ணனின் போராட்டத்தை தொடர்ந்து தன் கையில் எடுத்து 'ஜூனியர் சகாவு' ஆக மாறுகிறார் கிருஷ்ணகுமார் (நிவின்பாலி). இதுதான் மொத்தப்படத்தின் கதை. முதன்முதலாக கிருஷ்ணன், கிருஷ்ணகுமார் என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் நிவின்பாலி.. இரண்டு வேடங்களுக்கும் நடிப்பு, உடல்மொழி, வசன உச்சரிப்பு என மிகுந்த வித்தியாசம் காட்டியுள்ளார். சீனியர் 'சகாவு'ஆக போராட்டங்களை முன்னின்று நடத்தும்போது அவர் கண்களிலேயே போராட்ட வெறியை காட்டியுள்ளார். ஜூனியர் கிருஷ்ணகுமாராக வரும் நிவின்பாலி, வெட்டி பந்தா, சலம்பல் என காமெடி ஏரியாவை கவனித்துக்கொள்கிறார்.
மூன்று கதாநாயகிகளில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதலிடத்தை பிடிக்கிறார். கம்யூனிஸ்ட் கட்சி தோழராக போராட்டத்தில் பங்கெடுப்பது, வயதான பெண்ணாக தன்னை மாற்றிக்கொண்டு அதற்கேற்ற நடிப்பை வழங்கி இருப்பது என மலையாள சினிமாவில் இன்னும் ஒருபடி தன்னை முன்னேற்றிக்கொண்டு இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
நிவின்பாலி-ஐஸ்வர்யா தம்பதியின் மகளாக வரும் இன்னொரு நாயகி அபர்ணா கோபிநாத், ஜூனியர் நிவின்பாலியின் தோழியாக வரும் காயத்ரி சுரேஷ் இருவரும் அவ்வப்போது மட்டுமே வந்தாலும் படம் முழுக்க வருகிறார்கள்.. நடிப்பிலும் யதார்த்தம் காட்டியுள்ளார்கள். சகாவு நிவின்பாலியின் தோழர்களாக வருபவர்கள் அனைவரும் கம்யூனிஸ்ட் இயக்கத்தை சேர்ந்தவர்களோ என ஆச்சர்யப்படும் விதமாக நடித்துள்ளார்கள்..
நிவின்பாலிக்கு வில்லனாக வரும் கெட்ட போலீஸ்காரரே நிவின்பாலியின் பிளாஸ்பேக்கை சொல்லும் விதமாக கதையை நகர்த்தியிருப்பது புதுசு.. ஜூனியர் நிவின்பாலியின் நண்பனாக அம்மாஞ்சியாக வரும் மகேஷ் கதாபாத்திரம் பேசும் வசனத்திற்கு ஒருமுறை கைதட்டல் அள்ளுகிறார்.
படத்தில் இரண்டுவிதமான காலகட்டங்களை அழகாக கையாண்டுள்ளது ஜார்ஜ் வில்லியம்ஸின் கேமரா.. பிரசாந்த் பிள்ளையின் இசையில் மதுமதியே' பாடல் மீண்டும் மீண்டும் கேட்கும் ரகம். இந்தப்படத்தின் இயக்குனர் சித்தார்த் சிவா ஏற்கனவே தனது படங்களுக்காக தேசியவிருது பெற்றவர். ஒரு நேர்மையான கம்யூனிஸ்ட் சகாவு ஒருவரின் வாழ்க்கை பதிவாக இந்தப்படத்தை உருவாக்கினாலும் அதை கலைப்படம் என்றில்லாமல் காமெடி, சண்டைக்காட்சி என கமர்ஷியலாக, அதேசமயம் எந்தவித மேல்பூச்சும் இல்லாமல் கவனமாக உருவாக்கியுள்ளார்..
தோழர்களை மட்டுமல்ல, ரசிகர்களையும் நிச்சயம் கவருவார் இந்த 'சகாவு'