நடிகர்கள் ; மோகன்லால், ஆஷா சரத், அல்லு சிரிஷ், அருணோதேய் சிங், சுதீர் காரமணா டைரக்சன் ; மேஜர் ரவி
மலையாள சினிமாவில் மேஜர் மகாதேவன் கதாபாத்திரத்தை வைத்து மோகன்லால் ஹீரோவாக நடிக்க தொடர்ந்து படங்களை இயக்கி வருகிறார் மேஜர் ரவி.. அந்தவரிசையில் ஏற்கனவே மூன்று படங்களை இயக்கிவிட்ட மேஜர் ரவிக்கு இது நான்காவது படம் (பாகம்). ஆனால் இந்தப்படத்தில் மேஜர் மகாதேவனின் தந்தை மேஜர் சகாதேவனை பற்றியும் 1971ல் நடைபெற்ற இந்திய-பாகிஸ்தான் போரை மையப்படுத்தியும் கதை பின்னியுள்ளார்.
மகதேவனாகட்டும் அல்லது சகாதேவனாகட்டும் மேஜர் கதாபாத்திரத்தில் ஏற்கனவே பல முறை தன்னை நிரூபித்து விட்டார் மோகன்லால்.. இதில் சகாதேவன் கேரக்டரில் 70 வயதான கெட்டப்பில் வந்து சர்ப்ரைசும் கொடுக்கிறார்.. கணவனை ராணுவத்துக்கு அனுப்பிவிட்டு தவிப்பை அடக்கி காத்திருக்கும் மனைவியாக ஆஷா சரத், இளம் வயதிலேயே ராணுவத்தில் சாதிக்க துடிக்கும் டேங்க் கமாண்டாவோவாக அல்லு சிரிஷ், தமிழ்நாட்டை சேர்ந்த ராணுவ வீரராக நேர்த்தியான நடிப்பை வழங்கியிருக்கும் சுதீர் காரமணா பாகிஸ்தான் அதிகாரியாக அருணோதேய் சிங் என படத்தின் நட்சத்திர தேர்வில் சோடையில்லை.
ஆனால் மேஜர் ரவி-மோகன்லால் கூட்டணியில் உருவான முந்தைய ராணுவ படங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது அந்த எதிர்பார்ப்பில் இந்தப்படம் பாதியை கூட நிறைவேற்றவில்லை என்பதே உண்மை.. படத்தின் ஆரம்பத்தில் ஜார்ஜியா நாட்டில் தீவிரவாதிகளை ஒடுக்கும் தாக்குதலில் இந்திய-பாகிஸ்தான் வீரர்கள் இணைந்து பணியாற்றுவது போலவும் அதில் மேஜர் மகாதேவன் ஒரு பாகிஸ்தான் வீரரை காப்பாற்றுவது போலவும் விறுவிறுப்பாகத்தான் துவங்குகிறார்கள்.. ஆனால், அந்த வீரரின் தந்தை ஒரு காலத்தில் (1971) மேஜர் சகாதேவனால் சுட்டுக்கொல்லப்பட்டவர் என்கிற உண்மையை எந்த டிவிஸ்ட்டும் இல்லாமல் உடைக்கும்போதே கதை சுணங்கி நின்று விடுகிறது..
அதன்பின் மேஜர் சகாதேவனின் காட்சிகள் பிளாஸ்பேக்கில் விரிந்தாலும் அது ஒருகட்டத்தில் முடிந்து, நடப்பில் உள்ள கதைக்கு மீண்டும் திரும்புவார்கள் என பார்த்தால் மேஜர் சகாதேவன் கதையையே முழுப்படமாக கொண்டு சென்று முடித்திருப்பது மிகப்பெரிய ஏமாற்றம் தான்.. யூனிபார்ம் அணிந்தபின்னர் மேஜர் சகாதேவன் ஆனால் என்ன..? மேஜர் மகாதேவன் ஆனால் என்ன.. நடிப்பது மோகன்லால் தானே என்று நம்மால் மனதை சமாதானப்படுத்தி படத்துடன் ஒன்ற முடியாதது படத்தின் மிகப்பெரிய மைனஸ்.. இரு நாடுகள் எதிரிகளாக இருந்தாலும் இரண்டு நாட்டு வீரகளுக்கும் மனிதாபிமானம் நட்பு ஆகியவை உண்டு என்பதை மீண்டும் வலியுறுத்தியதற்காக இயக்குனர் மேசர ரவியை பாராட்டலாம்.
தொடர் வெற்றிகளை குவித்து வந்த மோகன்லாலுக்கு இந்தப்படம் ஒரு திருஷ்டி பொட்டு வைத்திருக்கிறது என்றே சொல்லவேண்டும்.