Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

எபி (மலையாளம்)

எபி (மலையாளம்),aby (malayalam)
  • எபி (மலையாளம்)
  • இயக்குனர்:
27 பிப், 2017 - 16:14 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » எபி (மலையாளம்)

நடிகர்கள் ; வினீத் சீனிவாசன், அஜூ வர்கீஸ், மரீனா மைக்கேல், சுராஜ் வெஞ்சாரமூடு, சுதீர் காரமணா, ஹரீஷ் பெராடி, மணீஷ் சௌத்ரி, திலீஷ் போத்தன்

இசை ; பிஜிபால் & அனில் ஜான்சன்

ஒளிப்பதிவு ; சுதீர் சுரேந்திரன்

டைரக்சன் ; ஸ்ரீகாந்த் முரளி


சிறுவயதிலிருந்தே வானத்தில் பறக்கவேண்டும் என்பதை லட்சியமாக கொண்ட இளைஞனின் கதை தான் இந்த 'எபி'.. நிஜத்தில் நிகழ்ந்த சம்பவத்தை தழுவி இந்தப்படம் எடுக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் ஒரு சிறிய கிராமத்தை சேர்ந்தவன் வாய் பேச முடியாத, கேட்கும் திறனும் அற்ற எபி.. சிறுவயதில் இருந்தே பறக்கவேண்டும் என ஆசைகொண்ட எபி, விவரம் தெரியாத வயதிலேயே அதற்காக மாடியில் இருந்து, மரத்தில் இருந்து, பாறையில் இருந்து என மூன்று நான்கு முறை குதிக்கவெல்லாம் செய்கிறான். அவனுக்கு ஆதரவாக இருந்த அம்மா இறந்துவிட, அம்மாவின் இறப்பு கொடுத்த அதிர்ச்சியில் அவனுக்கு பேச்சு வருகிறது.

இன்சூரன்ஸ் ஏஜென்ட்டான அப்பாவோ, மனைவி மறைவுக்கு பின் இவன் மீது வெறுப்பாகி இவனை சரிவர கவனிக்காமல் குடிகாரனாகிறார். ஆனால் அப்பாவின் நண்பர் ரவி எபியை தனது ஒர்க்ஷாப்பில் வேலைக்கு சேர்த்துக்கொள்வதுடன் அவனை ஓரளவு படிக்கவும் வைக்கிறார். மெக்கானிக் ஷாப்பில் உள்ள பொருட்களை வைத்து சொந்தமாக சிறிய பாரா கிளைடர் விமானம் தயாரிக்கவேண்டும் என்பது அவனது கனவு.. இஅவநுகும் இவனது கனவுக்கும் காதலும் ஆதரவுமாக இருக்கிறாள் பக்கத்து வீட்டு பள்ளி தோழியான அனுமோல். ஆனால் அனுமோலின் அப்பாவோ இந்த காதலை எதிர்க்கிறார்.


ஒருகட்டத்தில் தனது தந்தையே, தான் சிறியதாக உருவாக்கிய விமானத்தை சோதனை ஓட்டத்திற்கு முன்பே பெட்ரோல் ஊற்றி கொளுத்திவிட, விரக்தியும் ஆத்திரமுமாக ஊரைவிட்டு வெளியேறி நகரத்துக்கு செல்கிறான் எபி.. அங்கே ஏற்கனவே பாரா கிளைடர் விமானங்களை தயாரிக்கும் முயற்சியில் தோற்றுப்போன ஜி.கே என்பவரை சந்தித்து அவரது சிஷ்யனாகி இன்னும் நுணுக்கங்களை கற்றுக்கொள்கிறான்.. அவனது வரவால் மீண்டும் பழையபடி சுறுசுறுப்பாகிறார் ஜி.கே. ஆனாலும் ஒருகட்டத்தில் அவரும் எபியின் சுயமரியாதையை சீண்ட, அங்கிருந்து விலகி ஏழு வருடங்கள் கழிந்தநிலையில் அவன் சம்பாதித்த காசில் ஒரு குட்டி விமானம் செய்யும் அளவுக்கு தேவையான பொருட்களுடன் சொந்த ஊருக்கு திரும்புகிறான் எபி..


ஊரில் அவனை இன்னும் சிலர் கிறுக்கன் என்றே அழைத்தாலும் அனுமோலின் காதலும், தந்தையின் நண்பர் ரவியின் பரிவும் அப்படியே அவனுக்காக காத்திருக்கிறது. சர்ச் பாதர் உள்ளிட்ட சிலர் அவனுக்கு ஆதரவுக்கரம் நீட்டுகிறார்கள். ஆனாலும் சொந்தமாக விமானத்தை உருவாக்கும் முயற்சியில் அவனுக்கு ஊரார் வடிவிலும். காதலியின் தந்தையின் வடிவிலும், அரசாங்கம் வடிவிலும் விதவிதமாக பிரச்சனைகள் உருவாகின்றன.. இதையெல்லாம் கடந்து அவனால் தனது லட்சியத்தை அடைய முடிந்ததா என்பதுதான் க்ளைமாக்ஸ்..


படம் முழுவதுமே அந்த 'எபி' கதாபாத்திரத்தை மையப்படுத்தியே சுழல்வதால், அதன் சீரியஸ்னஸ் உணர்ந்து எபியாகவே மாறிப்போயிருக்கிறார் வினீத் சீனிவாசன்.. எப்போதும் பறவைபோல கைகளை விரித்துகொண்டு பறப்பதுபோல ஓடுவதாகட்டும், சுபாவத்தில் பிதாமகன் விக்ரம் போல விறைப்பும் முறைப்புமாக நடந்து கொள்வதாகட்டும், சின்னச்சின்ன விஷயங்களை கண்டுபிடித்துவிட்டு அதற்கான அங்கீகாரத்துக்கும் தூண்டுதலான பாராட்டுக்கும் ஏங்குவதாகட்டும், நடிப்பில் வினீத் சீனிவாசன் மிரட்டியிருக்கிறார்.. குறிப்பாக வாய்மொழியை குறைத்து உடல்மொழியிலேயே முழுப்படத்தையும் தனது தோளில் சுமந்திருக்கிறார்..


சின்ன வயது காதல் என்றாலும் அது பருவ கிளர்ச்சி காதல் அல்ல, வாழ்க்கை முழுதும் நீடிக்க கூடிய பக்குவமான காதல் என்பதை ஒவ்வொரு காட்சியிலும் அழுத்தமாக பதிவு செய்துள்ளார் அனுமோல் காதாபாத்திரத்தில் நடித்துள்ள மரீனா மைக்கேல். ஆஹா ஓஹோ அழகி இல்லாவிட்டாலும் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரமாகவே மாறிவிட்ட அழகி என்று சொல்லலாம்.

அனுமோலின் தந்தையாக வரும் தேசியவிருது நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு குணச்சித்திர நடிப்பு, காமெடி வற்றுடன் கலந்த மெலிதான வில்லத்தனத்தை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். அனுமோலை ஒன்சைடாக காதலித்து, அவரை திருமணம் செய்ய முடியாவிட்டாலும் அவருக்காக ஓடிவந்து உதவிகள் செய்யும் கதாபாத்திரத்தில் ஆரம்பம் முதல் இறுதிவரை கலகலக்க வைக்கிறார் அஜூ வர்கீஸ்.


மகனே உலகம் என ஆதரவு காட்டும் வினிதா கோஷி, மகனை கிறுக்கன் என புறந்தள்ளி, அதேசமயம் அவன் சம்பாத்தியத்தை மட்டும் சுரண்டி குடிக்கும் அப்பாவாக சுதீர் காரமணா, எபியின் முயற்சிகளுக்கு துணை நிற்கும் மெக்கானிக் ஷாப் ஹரீஷ் பெராடி என கிராமத்து கதாபாத்திரங்கள் அனைத்துமே எபியை சுற்றி வலுவாக பின்னப்பட்டு இருக்கின்றன. குரிப்பமாக படத்தின் மிக முக்கிய தூணாக சிறு வயது எபியாக வரும் சிறுவன் தனது கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்திருப்பதுதான் வியப்பை பலமடங்காக்குகிறது. க்ளைமாக்சில் கொஞ்ச நேரமே வந்தாலும் விறைப்பும் முறைப்புமான போலீஸ் அதிகாரியாக நம்மை கவர்கிறார் திலீஷ் போத்தன் (மகேஷிண்டே பிரதிகாரம் பட இயக்குனர்)...

விஞ்ஞானி ஜி.கேயாக வரும் மணீஷ் சௌத்ரி சம்பந்தப்பட்ட ஆரம்பகட்ட காட்சிகளை பார்க்கும்போது எதோ ஹாலிவுட் படம் பார்ப்பதுபோன்ற பிரம்மை ஏற்படவே செய்கிறது.. அவரும் ஹாலிவுட் தரத்திலான நடிப்பை வழங்கியிருக்கிறார். க்ளைமாக்ஸில் எபிக்கு ஏற்படும் சிக்கலின்போது அவனை கைதூக்கிவிட்டு துணை நிற்கும் காட்சிகளில் அப்ளாஸ் வாங்குகிறார் மனிதர்.


சுதீர் சுரேந்திரனின் ஒளிப்பதிவும் பிஜிபால் மற்றும் அனில் ஜான்சன் கூட்டணியின் இசையும் படத்தை மெருகேற்றியுள்ளன. தன்னம்பிக்கை ஊட்டும் கதையை கையில் எடுத்து அதற்கு அழகான திரைக்கதையால் தோரணம் கட்டி, லாஜிக் விஷயங்களில் முடிந்த அளவுக்கு நியாயம் செய்து படத்தை விறுவிறுப்பாக நகர்த்தி இருக்கிறார் இயக்குனர் ஸ்ரீகாந்த் முரளி..

எந்தக்குழந்தை ஆனாலும் அதன் சிறுவயது விளையாட்டுக்களை வெறுமனே வேடிக்கையாக ஒதுக்கி விடாமல், அவர்களது சிந்தனை சிறகுகளை முறித்து விடாமல், அவர்களை ஊக்கப்படுத்தினால் தாங்கள் நினைத்தை சாதிப்பார்கள் என்கிற அருமையான கருத்தையும் உள்ளே நுழைத்து இந்த எபியை உருவாக்கியுள்ள இயக்குனர் ஸ்ரீகாந்த் முரளியை கைதட்டி பாராட்டலாம்.



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in