வெங்கடேஷ் குமார்.ஜி-யின் எழுத்து, இயக்கம் மற்றும் தயாரிப்பில் புதுமுகங்கள் கார்த்திக் நாகராஜன் - ஜெனிபர் ஜோடி நடிக்க, சினிமாவிற்கு ஒளி வெள்ளம் பாய்ச்சும் தொழிலாளர்களின் வாழ்க்கை இருள் அவலம் பற்றி வெளி உலகிற்கு எடுத்துரைக்கும் படி வந்திருக்கிறது "லைட்மேன்" திரைப்படம்.
கதைப்படி, கிராமத்து இளம் கூத்து கலைஞர் குணா எனும் கார்த்திக் நாகராஜன், சினிமா நாயகர் ஆசையில் தன் காதல் மனைவி சித்ரா எனும் ஜெனிபரை கூட்டிக் கொண்டு கோடம்பாக்கம் வந்து ஏறாத படக்கம்பெனிகள் இல்லை... இறங்காத சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் இல்லை... எனும் அளவிற்கு ஏறி, இறங்கி நடிக்க வாய்ப்பு தேடுகிறார். எதுவும் கிடைக்காத சூழலில், வயிற்றுக்காகவும், இளம் மனைவியுடனான வாழ்க்கைக்காகவும் சினிமா லைட்மேனாக களம் இறங்குகிறார். படுகடுமையான அத்தொழிலில் போதிய வருமானமும் இல்லாது கடும் அசதியும் உடல் வலியும் ஏற்பட., குடிப்பழக்கத்திற்கு அடிமையாகும் குணா - கார்த்திக், அதிலிருந்து மீண்டாரா? அவர் லட்சியத்தை அடைந்தாரா..? எனும் கதையோடும், காட்சியமைப்புகளோடும் இவரைப் போன்று சினிமாவில் சாதிக்கும் லட்சியத்தோடு அடியெடுத்து வைத்து., லைட்மேன்களாக போதிய வருமானமின்றி அவதிப்படும் சில நிஜங்களையும் படம் பிடித்து காட்ட முயன்றிருக்கிறது லைட்மேன் படத்தின் மொத்தக்கதையும் ,களமும்!
கிராமத்து இளம் கூத்துக் கலைஞராகவும், சினிமா லைட்மேனாகவும் லட்சியம் நிறைவேறா இளைஞர் குணாவாக கார்த்திக் நாகராஜன் கச்சிதம்.
குணாவின் இளம் மனைவியாக அவரோடு சேர்ந்து மன அவதிப்படும் நாயகியாக சித்ராவாக ஜெனிபர் இயல்பாக இருப்பதும் நடித்திருப்பதும் ஆறுதல்.
மேற்படி, இருவரது நடிப்பிலும், இல்லாமையும், இயலாமையும், ஏழ்மையும், ஏமாற்றமும் அழகாக வெளிப்பட்டிருப்பது இப்பட கதைக்கும் காட்சியமைப்புகளுக்கும் சற்றே வலு சேர்க்கிறது. இவர்களைப் போன்றே, கதிராக வரும் வாசகன், தங்கராஜாவாக கோவிந்த ஸ்வாமிநாதன் உள்ளிட்டோரும் லைட்மேன்களின் கஷ்ட, நஷ்ட வாழ்க்கையை ஒரு மாதிரி உணர்ச்சிகரமாக சொல்லி காட்டிட முற்பட்டிருக்கின்றனர்.
கமலின் படத்தொகுப்பில் முன்பாதி கமர்ஷியலாகவும் பின்பாதி முழுக்க, முழுக்க டாக்குமெண்டரி ஸ்டைலிலும் எடிட் செய்யப்பட்டிருப்பது புரியாத புதிராக இருக்கிறது.
ராகுலின் ஒளிப்பதிவு சினிமாவுக்கு ஒளி வெள்ளம் பாய்ச்சும் லைட்மேன்களின் வாழ்க்கையில் ஒளியேற்றும் படி செயல்பட்டிருக்கிறது.
டோனி பிரிட்டோவின் இசை சொல்லிக் கொள்ளும் படி இல்லாதது பலவீனம்.
வெங்கடேஷ் குமார்.ஜி-யின் எழுத்து, இயக்கம் மற்றும் தயாரிப்பில்., "விட்டில் பூச்சின்னு ஒன்று இருக்கு அது விளக்கு வெளிச்சத்தை தேடி ஓடும்... கிட்டப் போனதும் சூடு தாங்காது செத்துடும்... அப்படித்தான் நானும் போல...", "குணா, நாம சினிமாவை நேசிக்கறோம் சினிமா நம்மளை நேசிக்கலையே..., சினிமா நம்மை நேசிக்கல்லாம் வேண்டாம். சினிமா நம்மளை திரும்பி பார்த்தாலே போதும்....", "பழசபேசுறது சந்தோஷமா இருக்கும் ஆனா நிஜம் தான் நிதர்சனம்..." உள்ளிட்ட வசனங்கள் வசீகரிக்கின்றன. என்றாலும், சினிமா வரலாற்றில் வெளிச்சம் பாய்ச்சும் லைட்மேன்கள் வாழ்க்கையை பிரதிபலிக்கும் முதல் திரைப்படமாக வெளிவந்திருக்கும் இத்திரைப்படம், அழகிய கமர்ஷியலாகவும் இல்லாது, கலைப்படைப்பாகவும் இல்லாது, நியூஸ் ரீல் டைப்பில் முழு நீள டாக்குமென்டரியாக முக்காலும் முழுசும் தெரிவது, வெகுஜன ரசிகர்களை எவ்வளவு தூரம் ஈர்க்கும் என்னும், யாராலும் யூகிக்க முடியாத கேள்விக்குறியையே எழுப்புகிறது!
மொத்தத்தில், "லைட்மேன் - ஹெவி டோஸ்!"