விமர்சனம்
நடிப்பு - ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர், யோகி பாபு மற்றும் பலர்
இயக்கம் - சினிஷ்
இசை - யுவன்ஷங்கர் ராஜா
தயாரிப்பு - 70எம்எம் என்டர்டெயின்மென்ட்
தமிழ் சினிமாவில் பிரச்சனைகள் தலை விரித்து ஆடுகிறதோ இல்லையோ, பேய்கள் தலைவிரித்து ஆடுகிறது. இனியாவது, தமிழ் சினிமாவில், அந்த பேய்களுக்கு ஓய்வு கொடுங்கள், பாவம், அவை பிழைத்துக் கொள்ளட்டும்.
காப்பியடித்ததைக் கூட வெளியில் சொல்லாமல் சொந்த கதை என சொல்லும் இயக்குனர்களுக்கு மத்தியில் இந்தப் படத்தின் இயக்குனர் சினிஷ்-ஐப் பாராட்ட வேண்டும். படத்தின் டைட்டில் கார்டிலேயே சில ஆங்கிலப் படங்களுக்கு இன்ஸ்பிரேஷன் என நன்றி சொல்லிவிடுகிறார். ஆனால், அதைப் படிப்பதற்குள் போய் விடுகிறது.
ஒரு பாழடைந்த வீடு, அந்த வீட்டிற்குள் பேய், பேய் புகுந்த வீட்டில் கதவுகள், ஜன்னல்கள் தானாக மூடுவது, பொருட்கள் அதுவாகவே உடைவது, ஒயரிங் சரியாக செய்யப்படாமல் விளக்குள் அணைந்து, அணைந்து எரிவது, கட்டில், சேர் தானாக மேலே போவது, ஆட்களை அந்தரத்தில் தொங்க வைப்பது என இதுவரை நீங்கள் பார்த்து, பார்த்து வெறுத்துப் போன அனைத்து விஷயங்களும் இந்த பலூன் படத்தில் உண்டு.
பேயாகிப் போனவர் அடுத்த பிறவியில் மீண்டும் பிறந்து வந்து பழி வாங்குவதுதான் படத்தின் கதை. ஜெய், திரைப்பட இயக்குனர் ஆகும் லட்சியத்தில் இருப்பவர். அவருடைய தயாரிப்பாளர் கேட்டுக் கொண்டதால் பேய்க் கதை ஒன்றை எழுத, மனைவி அஞ்சலி, உதவி இயக்குனர்களான நண்பர்கள் யோகி பாபு, கார்த்திக் யோகி, அண்ணன் மகன் ஆகியோருடன் ஊட்டிக்குச் செல்கிறார். ஏற்கெனவே விசாரித்து வைத்திருந்த பேய் இருப்பதாகச் சொல்லப்படும் ஒரு வீட்டிற்கு அருகில் தங்கி, அந்த வீட்டைப் பற்றி விசாரித்து கதை எழுத முயற்சிக்கிறார். ஆனால், திடீரென அவருடைய அண்ணன் மகனுக்குள் பேய் புகுந்துவிடுகிறது. அந்தப் பேயை விரட்ட முயற்சிப்பவருக்கு பல உண்மைகள் தெரிய வருகிறது. அதன் பின் நடப்பவைதான் படத்தின் மீதிக் கதை.
நடிப்பைப் பிழிந்து தள்ள ஜெய்க்கு பெரிய வேலை இல்லை. பேயைப் பார்த்தால் கூட அதிர்ச்சியடை மாட்டேன் என்கிறார். அஞ்சலியைக் கொஞ்சுவதில் மட்டும் அவ்வளவு யதார்த்தமாய் நடித்திருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் மட்டும் கொஞ்சம் ஆவேசமாய் சண்டை போடுகிறார்.
அஞ்சலிக்கும் அதிக வேலையில்லை. அறிமுகக் காட்சியில் கொஞ்சம் அழுகை, பேய் புகுந்ததும் கொஞ்சம் மிரட்டல், மீதிக் காட்சிகளில் ஜெய்யுடன் நெருக்கம். சும்மா சொல்லக் கூடாது, அஞ்சலிக்கும், ஜெய்க்கும் இடையில் நல்ல கெமிஸ்ட்ரி தெரிகிறது.
இடைவேளை வரை படத்தின் கலகலப்புக்குச் சொந்தக்காரர் ஆக இருக்கிறார் யோகி பாபு. கவுன்ட்டர் மேல் கவுன்ட்டர் கொடுக்கும் யோகிக்கே கவுன்ட்டர் கொடுக்கிறார் ஜெய்யின் அண்ணன் மகனாக நடிக்கும் அந்தச் சிறுவன். ஜனனி ஐயர் பிளாஷ்பேக்கில் வந்து பலூன் விற்கும் ஜெய்யைக் காதலித்து அநியாயமாக இறந்து போகிறார்.
ஆங்கிலப் படங்களைக் காப்பியடித்ததைச் சொன்னாலும், அதில் சுட்ட காட்சிகளை வைத்து சாதிப் பிரச்சனையை சேர்த்ததில் இயக்குனர் எங்கேயோ போய்விட்டார். சாதி வெறி பிடித்த தலைவராக நாகிநீடு, அவருடைய அடியாளாக அறம் ராம்ஸ். இவர்கள்தான் படத்தின் வில்லன்கள்.
யுவன்ஷங்கர் ராஜா, டைட்டில் மியூசிக்கிலேயே படத்தின் மிரட்சியைக் காட்டி விடுகிறார். தொடர்ந்து பின்னணி இசையிலும், பாடல்களிலும் படத்தை இசையால் மீட்டிருக்கிறார். சரவணன் ராமசாமியின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு பிரேமும் நேர்த்தியாகப் படமாக்கப்பட்டிருக்கிறது.
இடைவேளை வரை கலகலப்பாக, ஜாலியாக நகர்கிறது படம். அதன் பின், பிளாஷ் பேக், காதல், பழி வாங்கல் என வேகத்தைக் குறைத்து விடுகிறது. இருந்தாலும் கிளைமாக்சில் டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட் வைத்து படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர்.
பலூன் - பழைய பலூன்
பலூன் தொடர்புடைய செய்திகள் ↓
பட குழுவினர்
பலூன்
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்