Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

முந்திரி வல்லிகள் தளிர்க்கும்போல் (மலையாளம்)

முந்திரி வல்லிகள் தளிர்க்கும்போல் (மலையாளம்),munthiri vallikal thalirkkumpol
  • முந்திரி வல்லிகள் தளிர்க்கும்போல் (மலையாளம்)
  • இயக்குனர்:
22 ஜன, 2017 - 09:33 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » முந்திரி வல்லிகள் தளிர்க்கும்போல் (மலையாளம்)

நடிகர்கள் ; மோகன்லால், மீனா, அனூப் மேனன், சிருந்தா ஆசப், கலாபவன் சாஜன், எய்மா ரோஸ்மின், அலான்சியர் ல

இசை ; ஜெயசந்திரன் & பிஜிபால்

கதை ; சிந்துராஜ

இயக்கம் ; ஜிபு ஜேக்கப்

இரண்டு வருடங்களுக்கு முன் 'வெள்ளிமூங்கா' என்கிற ஹிட் படத்தின் மூலம் மலையாள சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகிய ஜிபு ஜேக்கப் தனது இரண்டாவது படத்திலேயே சூப்பர்ஸ்டார் மோகன்லாலை வைத்து இயக்கியுள்ளதால் எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள படம்.. தவிர ஒப்பம், புலி முருகன் என்கிற மாஸ் ஹிட்டுகளை தொடர்ந்து வெளியாகும் மோகன்லால் படம் என்பதால் அந்த எதிர்பார்ப்பு டபுள் மடங்காகியுள்ளது.. ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றியுள்ளதா இந்தப்படம்..? பார்க்கலாம்.


கிராமத்து பஞ்சாயத்து செகரட்டரியான மோகன்லால் மனைவி மீனா பிளஸ்டூ படிக்கும் மகள் எய்மா, பையன் சனூப் என ஒரு சிறிய குடும்பத்தின் தலைவர்.. மருந்துக்கும் கூட சிரிக்காத சீரியஸ் பார்ட்டியான இவரும் மனைவி மீனாவும் கலகலப்பாக பேசியே பல வருடங்கள் ஆகின்றன.. தினசரி மொட்டை மாடியில் நண்பர்களுடன் இரவில் (அளவாக) சரக்கடித்து மகிழ்வது ஒன்றுதான் மோகன்லாலின் பொழுதுபோக்கு.


இந்தநிலையில் எப்போதும் ஏதாவது ஒரு பெண்ணுடன் போனில் கடலை போட்டுக்கொண்டு இருக்கும் அவரது நண்பர் அனூப் மேனன், அதே ரூட்டில் செல்ல மோகன்லாலை உசுப்பேற்றி விடுகிறார். அதற்கேற்றார்போல தனது அலுவலகத்திற்கு பியூட்டி பார்லர் அனுமதி விஷயமாக வந்த பெண்ணுடன் மோகன்லாலுக்கு நட்பு ஏற்பட, வீட்டிற்கு தெரியாமல் ஆங்காங்கே ஒளிந்து பேசி நட்பை வளர்க்க முயற்சிக்கிறார்.. ஆனால் அடுத்த நாளே அவரை கலவரப்படுத்தி, விட்டால் போதும் என அவரை நினைக்க வைக்கும் விதமாக அந்த நட்பு முடிந்துபோகிறது. இப்போது அனூப் மேனனிடம் அவரது பெண் தோழிகளில் யாராவது ஒருவருடன் தன்னை பேசவைக்க வேண்டும் என மோகன்லால் அடம்பிடிக்க, அனூப் மேனன் வேண்டுமென்றே மீனாவுக்கு போன் செய்து தருகிறார்..


யாரோ வேறு ஒரு பெண் என்கிற நினைப்பில் மோகன்லால் இரண்டு மூன்று வார்த்தைகள் ரொமான்டிக்காக பேச, கணவன் தான் பேசுகிறார் என்பதை மீனா கண்டுபிடித்து விட மோகன்லாலுக்கு வெட்கமாகி விடுகிறது.. ஆனால் அந்த தருணம் தான் கணவன் மனைவி இருவருக்கும் இடையில் இத்தனை நாட்களாக இருந்த இறுக்கத்தை உடைத்து, மீண்டும் ஒருவர் மேல் ஒருவர் காதல் கொள்ள வைக்கிறது. அதன்பின் மீண்டும் அழகான தாம்பத்யம் மலர்கிறது. சந்தோஷமாக செல்ல ஆரம்பிக்கும் இந்த சூழலில் பிளஸ்டூ படிக்கும் இவர்களது மகள் பணக்கார இளைஞன் ஒருவனுடன் காதலில் விழுந்துள்ள செய்தி இருவருக்கும் தெரியவருகிறது. இந்த சூழலை இருவரும் எப்படி எதிர்கொண்டார்கள். மோகன்லால் தனது மகள் விஷயத்தில் எப்படிப்பட்ட நடவடிக்கையை மேற்கொண்டார் என்பது தான் க்ளைமாக்ஸ்..

குடும்பத்தலைவன் என்கிற சராசரி உணர்வுகளை படம் முழுவதும் பிரதிபலிக்கும் அந்த கேரக்டரில் மோகன்லால் நூறு சதவீதம் சரியாக பொருந்துகிறார் தான். ஆனாலும் சமீபத்தில் 'புலி முருகன்' என்கிற படத்தில் ரசிகர்களுக்கு பிரியாணி விருந்து வைத்த மோகன்லால், இதில் வெறும் தயிர் சாதம் மட்டுமே கொடுத்து ஏமாற்றம் தந்துள்ளார்.. படத்தின் கதை அப்பை என்பதும் ஒரு காரணம், எனவே அவரை சொல்லி குற்றமில்லை.


சராசரி ஆசாபாசங்கள் கொண்ட குடும்பத்தலைவியாக மீனா. அவருக்கும் மோகன்லாலுக்கும் இடையே மீண்டும் துளிர்க்கும் காதலால் ஆளே மாறி நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார். மோகன்லாலின் கல்லூரி தோழியாக ஆஷா சரத்தும் படத்தில் ஐந்து நிமிடம் மட்டும் சர்ப்ரைஸ் விசிட் அடித்துள்ளார்.


மோகன்லாலின் நண்பராக வரும் அனூப் மேனன் தனது சின்னச்சின்ன விஷயங்களால் வரும் காட்சிகளில் எல்லாம் சிரிக்க வைக்கிறார். பெண்கள் பெயரை ஆண்கலைன் பெயராக பதிந்து வைத்து அவர்களுடன் போனில் சரசமாடும் அவரது நடவடிக்கைக்கு அவரது மனைவியான சிருந்தா ஆசப் மணிகட்டுவது லாஜிக் இல்லாவிட்டாலும் நல்ல ஐடியா.


நண்பர்கள் டீமாக வரும் கலாபவன் சாச, அலான்சியர் லே, பஞ்சாயத்து தலைவராக வந்து அடிக்கடி நெஞ்சுவலி நாடகம் ஆடி எசகேப் ஆகும் சுராஜ் வெஞ்சாரமூடு, மோகன்லாலின் மீது மையல் கொண்டு வழியும் பஞ்சயாத்து ஆபீஸ் கிளார்க் என கதையின் துணை பாத்திரங்கள் எல்லாமே நல்ல நடிப்பை வழங்கியுள்ளார்கள்.. 'புலி முருகன்' படத்தில் ஐந்து நிமிடம் வந்தாலும் 'காய் இக்கா'வாக மிரட்டிய சுதீர் காரமணா இதில் படம் முழுவதும் அவ்வபோது வந்தாலும் கவனம் ஈர்க்க தவறுகிறார்.


மோகன்லாலின் மகனாக வரும் சனூப் மற்றும் மகளாக நடித்திருக்கும் எய்மா இருவரும் துறுதுறு ரகம்.. குறிப்பாக பானக்கார இளைஞனுடன் காதலில் விழும் எய்மா மோகன்லாலுக்கு மட்டுமின்றி நமக்கும் பதட்டத்தை ஏற்படுத்துகிறார்.


பிஜிபால் மற்றும் ஜெயச்சந்திரனின் இசையில் பாடல்கள் மீண்டும் கேட்கும் விதமாக இருக்கிறது என்பது ஆறுதல். வெள்ளிமூங்கா படத்தில் விறுவிறுப்பான அரசியல் கதைக்களத்தில் படம் முழுவதும் ரசிகர்களை சிரிக்க வைத்த இயக்குனர் ஜிபு ஜேக்கப் இந்தப்படத்தில் ஏனோ அந்த உற்சாகத்தை காட்ட தவறிவிட்டார். எந்த கேரக்டரை கொடுத்தாலும் மோகன்லால் அதில் பொருந்திப்போகிறார் என்றாலும் கூட, ஒரு சாதாரண நிலையில் உள்ள ஹீரோ நடித்தாலே போதுமானது என்கிற கதைக்கு மோகன்லால் எதற்கு என்றே இடைவேளையில் ரசிகர்கள் பேசிக்கொள்வதையும் கேட்க முடிந்தது.


திருமணமாகி குழந்தை குட்டி என்றாகிப்போவதால் தம்பதிகள் தங்களுக்குள்ளான காதலையும் அன்யோன்யத்தையும் ஒருபோதும் விட்டுவிடலாகாது என்பதையும் அதைக்கண்டு வளரும் குழந்தைகள் தங்களது டீனேஜ் வயதிலேயே தடம் மாறிவிடாமல் வாழ்க்கையை படிக்க ஒரு பாடமாக அமையும் என்பதையும் ஒரு புதிய கோணத்தில் சொன்னதற்காக இயக்குனரை பாராட்டலாம். மற்றபடி மோகன்லால் ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றத்தையே தந்துள்ளது இந்தப்படம்



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in