Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

பிரேதம் (மலையாளம்)

பிரேதம் (மலையாளம்),Pretham
 • பிரேதம் (மலையாளம்)
ஜெயசூர்யா-ரஞ்சித் ஷங்கர் கூட்டணியில் மூன்றாவதாக உருவாகியிருக்கும் படம் ‘பிரேதம்’.
16 ஆக, 2016 - 13:26 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » பிரேதம் (மலையாளம்)

நடிகர்கள் ; ஜெயசூர்யா, அஜூ வர்கீஸ், விஜய்பாபு, தேவன், பியர்லி மானி, ஸ்ருதி ராமச்சந்திரன், சரண்யா மேனன்

இயக்கம் ; ரஞ்சித் ஷங்கர்

தயாரிப்பு ; ஜெயசூர்யா-ரஞ்சித் ஷங்கர்


'புண்யாலன் அகர்பத்தீஸ்', 'சு சு சுதி வால்மீகம்' ஆகிய படங்களை தொடர்ந்து ஜெயசூர்யா-ரஞ்சித் ஷங்கர் கூட்டணியில் மூன்றாவதாக உருவாகியிருக்கும் படம் தான் இந்த 'பிரேதம்'. ஹாரர் படங்களின் வரிசையில் வெளியாகி இருக்கும் இந்தப்படத்தின் திரைக்கதையை புதுமையான முறையில் கையாண்டு இருக்கிறார்கள்.


அஜூ வர்கீஸ் மற்றும் அவரது இரு நண்பர்கள் என மூவரும் சேர்ந்து கடற்கரை ஓரமாக அமைந்திருக்கும் கெஸ்ட் ஹவுஸ் ஒன்றை விலைக்கு வாங்கி, அதில் சில நாட்கள் தங்கி ஓய்வெடுக்கிறார்கள். ஆனால் அந்த பங்களாவில் அமானுஷ்ய சக்தி ஒன்று உலாவுவதை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் மூவரும் உணர்கின்றனர். தங்களுக்கு தெரிந்த பாதிரியார் ஒருவரிடம் இந்த விஷயத்தை சொல்ல, அவர் மனோதத்துவ நிபுணரான ஜெயசூர்யாவை அழைத்து வருகிறார்.


அந்த பங்களாவில் ஒரு பெண்ணின் ஆத்மா உலாவுவதை கண்டுபிடிக்கும் ஜெயசூர்யா, அந்த பெண் தற்கொலை செய்துகொண்டு இறந்து போனதற்கு அந்த பங்களாவும் ஒருவகையில் காரணம் என்பதையும் அறிகிறார். யாரையும் துன்புறுத்தி தொந்தரவு செய்ய விரும்பாத அந்த பெண்ணின் ஆத்மா, தனது தற்கொலைக்கு காரணமான நபரை தேடித்தான் அந்த பங்களாவிற்குள் அலைவதையும் தெரிந்து கொள்கிறார் ஜெயசூர்யா.


காவல்துறை உதவியுடன் பல கட்ட விசாரணைகளை மேற்கொள்ளும் ஜெயசூர்யா, முடிவில் அந்த பெண்ணின் இறப்புக்கு காரணமான நபரை, அந்த ஆத்மாவுக்கும் காவல்துறைக்கும் அடையாளம் காட்டும் இறுதி முயற்சியில் இறங்குகிறார். அவரது முயற்சிக்கு பலன் கிடைத்ததா..? அந்த பெண்ணின் சாவுக்கு காரணமான அந்த நபர் யார்..? அந்த பெண்ணின் ஆத்மா அந்த நபரை என்ன செய்தது என்பது இருபது நிமிட விறுவிறுப்பான க்ளைமாக்ஸ்..!


பொதுவாக பேய்ப்படங்கள் என்றால், ஏதோ ஒரு விரும்பத்தகாத காரணத்தால் மரணத்தை தழுவிய பெண், பேயாக வந்து தனது மரணத்துக்கு காரணமானவர்களை பழிதீர்ப்பதாகத்தான் கதை நகரும். ஆனால் இந்தப்படத்தில் அந்த சிஸ்டத்தையே டோட்டலாக மாற்றி இருக்கிறார் இயக்குனர் ரஞ்சித் ஷங்கர். தற்கொலை செய்து இறந்துபோன பெண், தனது சாவுக்கு மூலகாரணம் யார் என்பதை அறிவதற்காக மட்டுமே ஆத்மாவாக அலைவதும், அதை தெரிந்துகொண்டபின் அதன் சாத்வீகமான நடவடிக்கையும் நிச்சயம் பேய்ப்படங்களில் புதுசு தான்.


வழக்கமான ஹாரர் படங்களுக்கே உரிய பாணியில் கெஸ்ட் ஹவுஸ், மூன்று நபர்கள், ஜாலி கொண்டாட்டம் என வழக்கமான இருபது நிமிடங்கள் கடந்தாலும், ஒரு பெண்ணின் ஆத்மா அந்த பங்களாவில் இருப்பதாய் அஜூ வர்கீஸ் மற்றும் நண்பர்கள் உணர்வதில் இருந்து படம் சூடு பிடிக்க துவங்குகிறது. குறிப்பாக அந்த மூவரையும் பெண்ணின் ஆத்மா எந்தவிதமாகவும் துன்புறுத்தாதது இதுவரை வந்த ஹாரர் படங்களில் புதுசு..


மொட்டத்தலை, தாடி என வித்தியாசமான கெட்டப்பில் மனோதத்துவ நிபுணர் ஜான் டான்பாஸ்கோவாக ஜெயசூர்யா கதைக்குள் நுழைந்ததும் படம் வேகம் எடுக்கிறது. கல்லூரி வளாகத்தில் வைத்து, இறந்துபோன பெண்ணின் தற்கொலைக்கு காரணமாக சந்தேக பட்டியலில் இருந்தவர்களை உட்காரவைத்து அவர் கிடுக்கிப்பிடி விசாரணை செய்வது சபாஷ் என்றால், அந்த விசாரணை முழுவதையும் அரூபமாக நின்று கொண்டு அந்த பெண்ணின் ஆத்மாவும் பார்த்துக்கொண்டு இருப்பது நமக்கு மயிர்க்கால்களில் சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது.


ஒரு இளம்பெண்ணின் தற்கொலைக்கு காரணம் இன்னொரு இளம்பெண் என்பது சாதாரணமான ஒன்றாக இருந்தாலும், சம்பந்தப்பட்ட பெண் தன் தந்தையின் மீதான அன்பை மற்றொருவருடன் பங்குபோட விரும்பாமல் தான் தீய நடவடிக்கையில் இறங்கினார் என்பது தெரிய வரும்போது, அந்த யதார்த்தம் அந்த தந்தையை மட்டுமல்ல, படம் பார்க்கும் நம்மையும் அதிரவைக்கிறது. விசாரணையில் இறுதியாக உண்மையை ஒப்புக்கொள்ளும் கல்லூரி மாணவி, தான் யாருடைய சாவுக்கு காரணமாக இருந்தோமோ, அந்த பெண்ணின் ஆத்மாவை, ஜெயசூர்யாவின் உடலை தீண்டுவதன் மூலமாக கண்கூடாக பார்த்து அதிரும் காட்சி நம்மையும் அதிர வைக்கிறது.


பொசசிவ்நெஸ் கொண்ட கல்லூரி பெண்ணாக நடித்துள்ள சரண்யா மேனன், எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டாலும் மனம் தளராமல் கல்லூரி படிப்பை தொடர்ந்து, சக மாணவியின் துரோகத்தால் உயிரை விட்டு ஆத்மாவாக அலையும் ஸ்ருதி ராமச்சந்திரன், கெஸ்ட் ஹவுஸில் தங்கியிருக்கும் இளைஞர்கள் மூவரிடமும் செம ஜாலி கலாட்டா பண்ணும் பியர்லி மானி என மூன்று நாயகிகளும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்கள்.


ஜெயசூர்யாவின் விசாரணைக்கு உதவும் நேர்மையான போலீஸ் அதிகாரியாக வரும் விஜய்பாபு (தெறி படத்தை கேரளாவில் ரிலீஸ் செய்தவர்), குற்றச்சாட்டுக்கு ஆளான கல்லூரி மாணவியின் தந்தையாக வரும் கல்லூரி பிரின்சிபல் தேவன், காமெடி நடிகர் அஜு வர்கீஸ் கூட்டணி உட்பட அனைவரும் தாங்கள் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப பொருத்தமான தேர்வு என்பதை நிரூபித்திருக்கிறார்கள்..


குறிப்பாக 'மணிச்சித்திரதாழ்' @ 'சந்திரமுகி' பாணியிலான கடைசி 20 நிமிட க்ளைமாக்ஸ் படத்தின் ஹைலைட்.. இதற்குமுன் உணர்வுப்பூர்வமான குடும்பச்சித்திரங்களாக இயக்கிவந்த இயக்குனர் ரஞ்சித் ஷங்கர், இந்தமுறை ஹாரர் மூடுக்கு மாறியிருந்தாலும் அதையும் உணர்ச்சிப்பூர்வமாகவே படமாக்கியதில் வெற்றிக்கோட்டை தொட்டிருக்கிறார்.


மொத்தத்தில் ஜெயசூர்யா-ரஞ்சித் ஷங்கர் கூட்டணி ஹாட்ரிக் வெற்றியை ருசித்திருக்கிறது என்று தாராளமாக சொல்லலாம்.வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

 • டாப் 5 படங்கள்

 • Advertisement
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in