தினமலர் விமர்சனம்
மோகன்லால், கெளதமி, ஊர்வசி, நாசர்... என பிரபல தென் இந்திய முன்னணி நட்சத்திரங்களும், அழகிய இளம் நடிகர்களும் இணைந்து நடித்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மூன்று மொழிகளிலும் ஒரே நாளில் வாராஹி சலன சித்திரம் படத்தயாரிப்பு நிறுவனம் வழங்க சந்திரசேகர் ஏலட்டி எழுத்து, இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் தான் "நமது".
தன் வாழ்க்கைக்காகவும், பதவிக்காகவும் கூடா நட்புடன் கூடி, உடன் பணிபுரிபவரை கடத்தி பரிதவிக்கும் தனியார் பல்பொருள் அங்காடி காரியதரிசி, என்றோ, தான் மாணவியாய் இருந்த போது தான் செய்த சிறு சிறு உதவிக்கு பிராயசித்தம் செய்ய நினைக்கும் பேராசிரியரை பிடித்துக் கொண்டு, சிங்கப்பூர் சென்று முன்னேற துடித்தாலும் குடும்பத்தை விட்டு பிரிய மனமில்லாமல் தவிக்கும் நடுத்தர வயது குடும்பத் தலைவி, காதலுக்காக தன் விருப்பம், படிப்பு, லட்சியம், உயிர்... எல்லாம் துறக்க தயாராகும் கல்லூரி மாணவன், குடிசை வாழ் குழந்தையை தான் படிக்கும் பள்ளியில் சேர்த்து, எல்லோரும் எல்லாமும் பெற்று இன்புற்றிருக்க வேண்டும்... என கருதும் சிறுமி உள்ளிட்ட நால்வரின் நற்குணமும், மணமும் அவர்களுக்கு இடையேயான பந்தமும், சொந்தமும் தான் நமது மொத்த படமும்.
தன் வாழ்க்கைக்காகவும், பதவிக்காகவும் கூடா நட்புடன் கூடி, உடன் பணிபுரிபவரை கடத்தி பரிதவிக்கும் தனியார் பல் பொருள் அங்காடியின் காரியதரிசி சாய்ராமாக மோகன்லால், தன் மலையாளக் கரையோர தமிழில் அழகாக பேசி நடித்து பெரிதாக ஸ்கோர் செய்திருக்கிறார். வாவ்!
புரமோஷன் வேண்டி ஒரு ஆத்திர அவசரத்தில் சக ஊழியரை ஆள் வைத்து கடத்தும் அவர், அதன் பின் கடத்தப்பட்டவனின் குடும்பத்தையும் குழந்தையையும் நினைத்து தவிக்கும் தவிப்பில் மோகன்லாலைத் தவிர வேறு யாரையும் அந்த இடத்தில் நினைத்து பார்க்க முடியாது .
தன் ஆள் மூலம் பிரஷ் காய் கனியை நசுங்க, பிதுங்க விட்டு., அதை தன் சூப்பர் மார்கெட்டில் இருந்து, கம்மி விலைக்கு அடித்து செல்லும் லாவகத்தில் தொடங்கி, கல்லூரி காலத்தில் மகாத்மா காந்திக்கும் தனக்கும் பெரிய வித்தியாசமில்லை... என்று தற்பெருமை அடித்தும் கொண்டதையும் தற்போது, தனக்கு போட்டியாக வருபவனை தட்டி தூக்க முயன்ற தான் எங்கே ? தன்னை கொன்றவனையே மன்னித்த காந்தி எங்கே ..? என புலம்புவது வரை ... சகல காட்சிகளிலும் சக்கைப்போடு போட்டிருக்கிறார் லால்லேட்டன்! வாவ், வெல்டன் சேட்டன்!
குடும்பத்திற்காகவே உழைத்து ஓடாய் தேயும் காயத்திரியாக பல காட்சிகளில் கெளதமி மிரட்டல். தன் படிப்பு, மதிப்பு எல்லாவற்றையும் மறந்து, பக்கத்து வீட்டு மனுஷி ஊர்வசியுடன் டிஸ்கவுண்ட் சேல்ஸ் ஏரியாக்களுக்கு அலைந்து இவரும், இருவரும் லாஸ் ஆகும் காட்சிகள் ஹாஸ்யம் என்றால், குடும்பத்தினர் யாரும் தான் சிங்கப்பூர் செல்வது குறித்து பிரிவை நினைத்து அலட்டிக் கொள்ளாதது குறித்து அங்காலயிக்கும் இடங்கள் செம மாஸ்! கீப் இட் அப் கெளதமி!
யூஸ் பண்ணிய சேலையை விற்கும் பேராசை பேர் வழியாக, கெளதமியின் பக்கத்து வீட்டு தோழி மகாலட்சுமியாக ஊர்வசி, வழக்கமான லொட லொடாவை குறைத்துக் கச்சிதமாக நடித்திருக்கிறார்.
நாசர் தனியார் பள்ளி பிரின்சியாக குழந்தைகள் தவறு செய்தால் அதற்கு ஆசிரியர்கள் தான் காரணம் என மாணவர்களை அரவணைக்கும் நல்லாசிரியராக "நல்ல விஷயங்களை செய்தால் ரைட்டான வழியல் செய்யணும் இப்படி குறுக்கு வழியில் அல்ல..." என்று பள்ளி குழந்தைகளுக்கும் , ஆசிரியர்களுக்கும் பக்கா புத்திமதிகள் கூறி இப்படத்தில் வாழ்ந்திருக்கிறார்.
"எனக்குத் தெரிந்த கல்வியை மற்றவர்களுக்கு சொல்லி கொடுத்து ஷேர் பண்ணினா என் நாலட்ஜ் அதிகமாகும் அதனால தான் டியூஷன் .. நோ பியூஸ்", என காதல் வரும் வரை நல் மாணவன் அபிராமாக விளங்கும் விஷ்வாந்த் , அவரது ஜோடி ஹனிஷா ஆம்ரோஷ் , பள்ளிச்சிறுமி மஹிதா வாக வரும் ரைனா ராவ் , பேராசியராக வரும் கொல்லப் புடி மாருதி ராவ் , சந்திரமோகன் உள்ளிட்ட சகலரும் பேஷ், பேஷ்... சபாஷ் சொல்லும் அளவிற்கு சம்பந்தபட்ட பாத்திரமாகவே வாழ்ந்திருப்பது படத்திற்கு பெரும் பலம்!
ஆனா நாம இப்போ காந்தி காலத்துல இல்லையே சார்... என்பது போன்ற யதார்த்த வசன வரிகளில் மோகன்லாலின் நடிப்பையும் தாண்டி, வசனகர்த்தா மதன் கார்க்கி தெரிகிறார். நச் - டச் டயலாக்குகள் படம் முழுக்க பரவிக் கிடப்பது படத்திற்கு மேலும் பலம்.
நமதன்றோ..., முத்துமணி... , ஆசை... , "கண்ணீரிலே....", திக் திக் ... உள்ளிட்ட ஐந்து பாடல்களும் மதன் கார்க்கியின் வைர வரிகளில் மகேஷ் சங்கரின் இசையில் வசீகரிக்கின்றன.
ராகுல் ஸ்ரீவத்சவ்வின் ஒளிப்பதிவு, ஓவியப்பதிவு.
சந்திரசேகர் ஏலட்டியின் எழுத்து, இயக்கத்தில், பள்ளிச் சிறுமி, ஏழை சிறுவனைத் தேடித் தரச் சொல்லி எதிர்படும் போலீஸிடம் பத்து ரூபாய் லஞ்சம் கொடுப்பது, மினிஸ்டரின் மகனைத்தேடி நைட்பாருக்கு போய் வம்பு வளர்ப்பது உள்ளிட்ட ஒரு சில சினிமாடிக் இழுவை டிராமா சீன்கள் இருந்தாலும்., ஏழைச் சிறுவன் வீர் சங்கர் தொடங்கி, மோகன்லால் வரை எல்லோரையும் இயல்பாக நடிக்கவிட்டு ரசிகனின் விழியோரம் கண்ணீர் துளிகளையும் நெஞ்சோரம் ஈரத்தையும் எட்டிப் பார்க்க செய்திருப்பதில் எக்கச்சக்கமாய் வெற்றி பெற்றிருக்கிறது "நமது" திரைப்படம் .
ஆகவே, "நமது - நிச்சயம் நமக்கானது! நல் சமூகத்திற்கானது!"