தினமலர் விமர்சனம்
வைபவ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஓவியா, கருணாகரன், விடிவி கணேஷ், யோகி பாபு... உள்ளிட் ஒரு பெரும் நட்சத்திரப்பட்டாளம் நடிக்க, புதியவர் எஸ்.பாஸ்கர் இயக்கத்தில் பிரபல இயக்குனர் சுந்தர்.சி தனது அவ்னி மூவிஸ் பேனரில் தயாரித்து வழங்க, வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் ஹலோ நான் பேய் பேசுறேன்.
சின்ன, சின்ன திருட்டுகள் செய்து வாழ்ந்து, வயிற்றை கழுவும் ஹீரோ அமுதன் எனும் வைபவுக்கு, தன்னிடம் போனில் பேசி அநாதை ஆசிரமத்திற்கு உதவி கேட்கும் கவிதா எனும் ஐஸ்வர்யா ராஜேஷ் மீது காதல் வருகிறது. ஐஸ்வர்யா, வைபவின் அயோக்கியத்தனம் தெரியாமல் தான் வேலை பார்க்கும் ஒரு தனியார் நிறுவனத்திலேயே வைபவிற்கு வேலை வாங்கித் தருகிறார். வேலைக்கு சேர்ந்த முதல் நாளே ஒரு பழைய பைக் உள்ளிட்ட நாற்பதாயிரம் ரூபாய் மதிப்புடைய பொருட்களுடன் ஜூட் ஆகும் வைபவ்வால் ஐஸ்வர்யாவின் வேலைக்கு வம்பு வருகிறது. இதனால் வைபவை கண்டுபிடிக்க வரும் நாயகி ஐஸ், வைபவ் தான் திருடிய பொருட்களை அடகு வைக்கும் சேட்டு கடையிலேயே வேலைக்கு சேருகிறார். காரணம் ஐஸ்க்கும் வைபவ் மீது ஒரு வித இது. அதாங்க காதல்...
இருவர் காதலும் ஜெயிக்க வேண்டுமென்றால் ஐஸ்வர்யாவின் குப்பத்து சாவு குத்து ஆட்டம் - பாட்டம் சகோதரர்கள் விடிவி கணேஷும், சிங்கப்பூர் தீபனும் சம்மதிக்க வேண்டும். அவர்கள் தங்களை மாதிரி சாவு குத்தில் கைதேர்ந்தவனுக்கே தங்கள் தங்கையை கொடுப்போம் என சபதம் ஏற்றிருக்கின்றனர். அதற்காக காதலி ஐஸ் உதவியுடன் சாவு குத்தை கற்றுக் கொள்ளும் வைபவ், ஐஸ்ஸின் அண்ணன்கள் அசந்து போகும் அளவுக்கு ஒரே வாரத்தில், சகோதரர்கள் முன் செம குத்து குத்தி அவர்கள் மனம் கவருகிறார் அவர்களும் வைபவை., தங்கள் தங்கை மாப்பிள்ளையாக ஒப்புக் கொள்கின்றனர்.
இச்சமயத்தில், சாலையில் நடக்கும் ஒரு விபத்தில் பலியாகும் வட இந்திய இளம்பெண் ஸ்ரீதேவி எனும் ஓவியாவின் செல்போனை அந்த ஸ்பாட்டில் இருந்து ஆட்டைய போட்டுக் கொண்டு வருகிறார் வைபவ். அந்த போன் மூலம் அவரையும் அவரது காதலி ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் குடும்பத்தையும் ஒவியாவின் ஆவி படுத்தும் பாடும், அவரது காதல் நிராசையை தீர்த்து வைக்க சொல்லி செய்யும் சேட்டையும் தான் ஹலோ நான் பேய் பேசுறேன் படத்தின் திகில், காமெடி, திக், திக், திக் கதை மொத்தமும்!
வைபவ் - அமுதனாக அசத்தல் எனச் சொல்லும் அளவிற்கு சென்னை பாஷை பேசி நடித்து டம்ளர் குத்து, டபாரா குத்து.... என சகல சாவு குத்து ஆட்டத்தையும் போட்டு ரசிகன் வாவ் என வாய் பிளக்கும் அளவிற்கு பக்காவாக நடித்திருக்கிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷும் தன் பங்குக்கு பக்காவாக பக்குவமாக குத்து போட்டு ஜெயித்திருக்கிறார். ஜொலித்திருக்கிறார். நடிப்பிலும் அப்படியே! பாய்ந்து, பறந்து, பயமுறுத்தி மற்றொரு நாயகி ஒவியாவும் அடையாளமே தெரியாத பேயாக., அசத்தியிருக்கிறார். அசத்தி... அடிஆத்தி!
கருணாகரன், விடிவி கணேஷ், மதுமிதா, சிங்கம் புலி, யோகி பாபு, சிங்கப்பூர் தீபன், சேட்டாக வரும் இசையமைப்பாளர் சித்தார்த் விபின் உள்ளிட்டவர்களும் கச்சிதமாக பாத்திரமறிந்து பளிச்சிட்டுள்ளனர். அதிலும், யோகி பாபு விஜய் சேதுபதி பின்னணி பாடிய மஜ்ஜா மல்ஸா... பாட்டுக்கு செம வாய்ஸ் கொடுத்து ரசிகர்களை வசியம் செய்கிறார். படத்தில் இவரும் இவரது அலட்டல் பாத்திரமும் செம சாய்ஸ் இன்னும் கொஞ்ச நேரம் இவரது சீன்ஸ் வாராதா என ரசிகனை ஏங்க வைப்பது படத்திற்கு ப்ளஸ்!
ஸ்ரீகாந்த்.என்.பியின் படத்தொகுப்பில் பெரிய குறை இல்லை. பின் பாதியில் கொஞ்சம் அதிகநேரம் வரும் சிங்கம் புலியின் சின்களில் இன்னும் சற்றே கத்திரி போட்டிருக்கலாம் இப்படத் தொகுப்பாளர். சித்தார்த் விபின் இசையில்., மஜ்ஜா மல்ஸா..., கோழி குருடாய் இருந்தாலும்.... மற்றும் சாவுகுத்துப் பாடல்களும் பின்னணி இசையும் செம ! உருட்டல்! மிரட்டல்...!
என்.பானுமுருகனின் ஒளிப்பதிவு மிரட்டிட வேண்டிய இடத்தில் சி.ஜி.உதவியுடன் மிரட்டியும், ரசிகனின் ஆதரவு திரட்ட வேண்டிய இடத்தில், செமயாய் திரட்டியும் இருக்கிறது.
சுந்தர்.சியின் தயாரிப்பில் புதியவர் எஸ்.பாஸ்கரின் எழுத்து, இயக்கத்தில் சாவு குத்தில், டம்ளர் குத்து, டவரா குத்து... என ஏகப்பட்ட சாவு குத்து டான்ஸ் வகைகள் இருப்பதை சுவாரஸ்யமாக வரிசைபடுத்தியதற்காகவும், ஓவியாவை பேயாக உலவ விட்டு, விடிவி கணேஷ், யோகி பாபு உள்ளிட்டவர்களை விட்டு காமெடி களேபர படுத்தியதற்காகவுமே ஹலோ நான் பேய் பேசுறேன் படத்தை எல்லாத் தரப்பு ரசிகர்களும் பார்க்கலாம், ரசிக்கலாம்! ஆக மொத்தத்தில், இப்படத்தை ரசிகனை வசீகரிக்கும் விதத்தில் திகிலாகவும், காமெடியாகவும் காட்சிப்படுத்தியிருப்பதில் ஜெயித்திருக்கிறார் இயக்குனர் எஸ்.பாஸ்கர்.
மொத்தத்தில், ஹலோ நான் பேய் பேசுறேன் - ஹாசம் சுவாரஸ்யமாக பேசியிருக்கிறது!