தினமலர் விமர்சனம்
வெற்றி பெற்ற டார்லிங் படத்தின் பெயரில் அதே போன்று பேய் கதை எனும் சம்பந்தம் தவிர வேறு சம்பந்தமே இல்லாமல் வெளிவந்திருக்கும் படமே டார்லிங் - 2 .
ஆறு இளம் வயது நண்பர்கள், அதில் இருவர் சகோதரர்கள், அவர்களில் ஒருத்தரின் மதம் மாறிய காதலுக்கு பெற்றோர் ஒத்துக்கொள்ளாததால், அந்த சகோதரர் தற்கொலை செய்து கொள்கிறார். இந்த சம்பவம் நடந்து ஒரு வருடம் கழித்து இவர்கள் வழக்கம் போல வால்பாறை டூருக்கு போகும் போது, இறந்து போன நண்பர்., அங்கு ஆவியாக வருகிறார். வந்தவர், அவர்களில் ஒருத்தரின் உடம்புக்குள் புகுந்து கொண்டு அவர்களை படாதபாடுபடுத்துகிறார். அவரிடமிருந்து ஐந்து நண்பர்களும் தப்பி பிழைத்தனரா.? இல்லையா..? என்பதுடன், ஏன்?, எதற்கு..? அவர்களை படுத்துகிறார் என்பதுதான் டார்லிங்-2 படத்தின் கதையும் களமும்!
நண்பர்களில் அரவிந்த்தாக 'மெட்ராஸ்' கலையரசன், ராம் - கிருஷ்ணனாக வரும் ரமீஸ், ரபியாக வரும் காளி வெங்கட், பாலாஜி- ஜானி' ஹரி, வால்பாறை வரதன் - முனிஸ்காந்த், அர்ஜூனன் - சங்கர் உள்ளிட்ட நண்பர்களும், நடிகர்களும் இயக்குனர் சொன்னதை செவ்வனே செய்திருக்கின்றனர். ஆனால், அவர்கள் பேய் வருவதற்கு முன்பு தங்களுக்குள் தமக்குத் தாமே... இது, இங்கே தானே இருந்தது... இது, இப்படித்தானே இருந்தது.... என்று பேசிக் கொள்வது, ரசிகனை கொல்வது கொடுமை!
நாயகி ஆயிஷாவாக மாயா, பேயாகவும், பெண்ணாகவும், பயமுறுத்தவில்லை....பாசம் காட்டி நடித்திருக்கிறார். இவரும், வால்பாறை வரதன் ஜெயம்ன்னு, நாற்பது பக்கம் நோட்டில் எழுதினா பயம் போயிடும்... எனும் வரதன் - முனிஸ்காந்தும் இப்படத்திற்கு பெரும் பலம்!
நேசா கரிசா நிபமா, சொல்லட்டுமா ஒன்று சொல்லட்டுமா...", காற்றில் வருவேன் ..."., வா உளறவா ... உள்ளிட்ட பாடல்கள் ரதனின் இசையில் ரசனை! ஆனால் பின்னணி இசை பேயை விட அதிகம் பயமுறுத்துவது கொடுமை!
விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு ஓவிய பதிவு என்றாலும், பேய் பயமுறுத்தல் காட்சிகளில் பின்னணியில் ஓவர் ஆட்டம் போட்டிருப்பது உறுத்தலாக ஓவராக தெரிகிறது! மதனின் கத்தரி இன்னும் ஷார்ப்பாக வேலை செய்திருக்கலாம்.
கல்யாணம் பண்ணிட்டா பேய் பயம் போவாது பழகிடும்..., "மச்சான் நினைச்சதை எல்லாம் ஒருத்தன் பண்ணிட்டு சந்தோஷமா இருக்கிறானா... அவன் பைத்தியம் அல்லது பேச்சுலரா இருக்கணும்...." என்பது, கதைப்படி, இஸ்லாமிய மதத்தைச் சார்ந்த கதாநாயகியை பார்த்து ராம் ., பொட்டும் பூவும் வச்சா இன்னும் அழகா இருப்பாய்... இதை நான் ராமா சொல்லலை ரசிகனா சொல்றேன்... எனும் டயலாக்குகள் எல்லாம் ராதாகிருஷ்ணனின் எழுத்தில் ஹாஸ்யம்!
ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும், ஆவிகள் இருந்தும் சதிஷ் சந்திரசேகரனின் எழுத்து, இயக்கத்தில் ஏனோ, டாலடிக்க வேண்டிய பேய் கதையான ''டார்லிங்-2'' டல்லடிக்கிறது!
மொத்தத்தில், ''டார்லிங்-2 - போரிங் டூ'' - ரசிகர்கள்! சாரி!