Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

அம்மா கணக்கு

அம்மா கணக்கு,Amma Kanakku
அஸ்வினி ஐயர் திவாரி இயக்கும் படம் இதுவாகும்.
06 ஜூலை, 2016 - 17:33 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » அம்மா கணக்கு

தினமலர் விமர்சனம்


இந்தியில் உருவான நில் பட்டே சனட்டா படத்தை வுண்டர் பார் பிலிம்ஸ் - கலர் எல்லோ புரொடக்ஷன்ஸ் பேனரில் நடிகர் தனுஷ், ஆனந்த் எல்.ராய் தயாரிப்பில், இசைஞானி இளையராஜா இசையில், அஷ்வினி ஐயர் திவாரி இயக்கத்தில் அமலாபால், ரேவதி, சமுத்திரகனி, யுவஸ்ரீ... உள்ளிட்டோர் நடித்திருக்கும் கதாநாயகரோ, வில்லனோ... இல்லாத கலைப்படம் தான் "அம்மா கணக்கு".


தன் மகள் நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காக தாய், மகள் படிக்கும் பள்ளியிலேயே மாணவியாகும் புதுமையான கதை தான் இப்படத்தின் கரு. வீட்டு வேலையில் தொடங்கி, மீன் பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் சிறிய ஆலையில் வேலை, சலவை, வேலை... உள்ளிட்ட இன்னும் நான்கைந்து வேலைகள் செய்து கஷ்ட ஜீவனம் நடத்தி தன் ஒரே மகள் யுவஸ்ரீயை பெரிய படிப்பு படிக்க வைக்க எறும்பாய் உழைக்கிறார் இளம் விதவை தாயான அமலா பால்.


ஆனால், அம்மாவின் கஷ்டம் உணராத மகள் யுவஸ்ரீ, தான் பத்தாம் வகுப்பு தேறுவதே கஷ்டம். அதிலும் கணக்கு பாடம் ரொம்ப கஷ்டம்.. என ஒழுங்காய் படிக்க மறுக்கிறார். அவருக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்து வழிக்கு கொண்டு வரும் முயற்சியாக தன் டாக்டர் முதலாளியம்மா ரேவதியின் ஆலோசனைப்படி, தாய் அமலாபாலும், மகள் யுவஸ்ரீ படிக்கும் அதே அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு சேர்ந்து மகளது வகுப்பறையிலேயே பாடம் படிக்கிறார். அம்மாவும் தன்னுடன் படிப்பதை மகள் சிறிதும் விரும்பவில்லை. பள்ளிக்கூடத்திற்கு வருவதை நிறுத்தும்படி அம்மாவிடம் கூறுகிறார் மகள். ஆனால் அமலாபாலோ, தன்னை விட கணக்கு பாடத்தில் அரையாண்டுத் தேர்வில் அதிக மதிப்பெண் மகள் யுவஸ்ரீ வாங்கினால், தான் ஸ்கூலுக்கு வருவதை கைவிடுவதாக மகளிடம் உறுதி கூறுகிறார்.


அம்மா அமலாவை பள்ளிக்கு வரவிடாமல் தடுப்பதற்காக மகள் யுவஸ்ரீ விழுந்து, விழுந்து படிக்கிறார். அதன் பின் மகள் படிப்பில் படு சுட்டி ஆனாரா? அமலாபால் பள்ளிக்கூடம் போவதை கைவிட்டாரா..?, மகள் யுவஸ்ரீயின் படிப்பு மீதான வெறுப்பு போனதா? அமலாபாலின் கனவு நிறைவேறும் காலம் கனிந்ததா..? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாக விடையளிக்கிறது அம்மா கணக்கு படத்தின் மீதிக் கதை!


வீட்டு வேலைக்கார பெண்ணாக , இளம் விதவைத் தாயாக., மகள் மீது ஏகப்பட்ட கனவுகளை வைத்திருக்கும் தாயாக அமலா பால் நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறார். டிரைவர் மகன் டிரைவர்... இன்ஜினியர் பிள்ளை இன்ஜினியர்... அப்போ வேலைக்காரியின் மகள் வேலைக்காரியாகத் தான் ஆவேன்... என அடம் பிடிக்கும் மகளை அடிக்கவும் முடியாமல், அடக்கவும் முடியாமல் தவிக்கும் தாயாக தொடங்கி, தனக்கு எதிர்பாராமல் பரிட்சையமாகும் கலெக்டரைத் தேடிப் போய், ‛‛கலெக்டர் ஆக எந்த கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும்? அதற்கு எவ்வளவு செலவாகும்.? என கலெக்டரிடமே அப்பாவியாய் கேட்பது வரை.. சகலத்திலும் தேர்ந்தெடுத்த நடிகையாக ஜெயித்திருக்கிறார் அமலா. ஹேட்ஸ் ஆப், கீப் இட் அப் மிஸஸ் விஜய்!


அமலா பால் மீதும் அவர் குடும்பத்தின் மீதும் அதிக அக்கறை கொண்ட டாக்டர் முதலாளி அம்மாவாக ரேவதி, நீண்ட நாட்களுக்குப் பின் இப்படத்தில் நடித்திருக்கிறார். அமலாவை அழைத்துப் போய் பள்ளிக்கூடத்தில் சேர்த்து விடுவதும், அமலாவின் முகத்தைப் பார்த்தே அவரது கஷ்ட நஷ்டங்களுக்கு தீர்வு காண முயற்சிப்பதுமாக அமலாபாலின் மனம் மட்டுமின்றி ரசிகனின் மனமும் கவருகிறார்.


அமலாவின் மகளுக்கு முதலில் டிஸ்லெக்ஸியா இருக்கலாம் மென்று டிஸ்லெக் டெஸ்ட் பண்ணலாமென்றும் பிறகு அதற்கு சான்ஸ் இல்ல... மேத்ஸ்பெண்களுக்கு ஒரு பழைய எதிரி..." என்றும் தன் டாக்டர் கேரக்டருக்கு பக்காவாக வலு சேர்த்திருக்கிறார் ரேவதி. ஆனால், கடைசி வரை அவர் இயற்கை வைத்தியரா? யுனானி, சித்த, ஆயுர்வேத மருத்துவரா? அலோபதிக் டாக்டரா? எனக் காட்டப்படாதது எது மாதிரி சஸ்பென்ஸ் என்பது புரியாத புதிர்.


வேலைக்காரியின் மகள் வேலைக்காரியாகத்தான் ஆவேன்.... என, சதா சர்வ நேரமும் தாயுடன் விதண்டா வாதம் செய்யும் மகளாக யுவஸ்ரீ அப்பாத்திரத்திற்கு கனகச்சிதம்.


பள்ளித் தலைமை ஆசிரியராக வரும் சமுத்திரகனி, ஒரு கணக்கு ஆசிரியராக கச்சிதம் என்றாலும் சற்றே ஓவர் ஆக்டிங்கில் அவர் பாத்திரத்தோடு ரசிகனை ஒன்றவிடாமல் செய்வது பலவீனம். மற்றபடி, மாளவிக்கா, விஷால் தேவ், விக்கி... உள்ளிட்டவர்களும் பாத்திரமறிந்து பளிச்சிட்டுள்ளனர்.


இளையராஜாவின் இசையில், "உனக்கும் எனக்கும்... , கடவுள் படைப்பு.. ", "கனவுகள்...", "இந்த வாழ்க்கை..." உள்ளிட்ட பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கேற்ற பலம்.


கவேமிக் யு.அரியின் ஒளிப்பதிவு, குறை இல்லா ஒவியப்பதிவு, எம்.ராஜா முஹம்மதுவின் படத்தொகுப்பு, பலே தொகுப்பு. நிதிஷ் திவாரியின் கதையில் உள்ள யதார்த்தம், பிரமாதம் .


அஷ்வினி ஐயர் திவாரியின் எழுத்து, இயக்கத்தில் "மனுஷனுக்கு ஒண்ணு நல்ல தலையெழுத்து இருக்கணும் அல்லது கஷ்டப்பட்டு உழைக்கணும்... எனும் பன்ச்சில் தொடங்கி, அபியை எழுப்பனுமா... எனும் பக்கத்து வீட்டு பெண்மணியிடம், அவசரமாக வேலைக்கு கிளம்பும் அமலாபால், "இல்லக்காஅவ முழிச்சிகிட்டா.... இனி, யாரும் எழுப்ப தேவை இல்ல.." என்பது வரை ஹாஸ்யமாகவும், சுவாரஸ்யமாகவும் படமாக்கப்பட்டிருக்கும் காட்சிகள், "அம்மா கணக்கு - தப்பாகாது..." என்பதற்கு கட்டியம் கூறுகின்றன.


சற்றே இழுவையான தாய் - மகள் விதண்டாவாத காட்சிகள், கலெக்டருக்கு படிக்க, கலெக்டரிடம் தான் தேடிப் போய் விசாரிக்க வேண்டுமா? தன் டாக்டர் முதலாலியம்மா ரேவதியிடம் அமலாபால் விசாரித்திருக்கலாமே?! என்பது உள்ளிட்ட சினிமாடிக் சீன்கள், தாய் மீதான மகளின் சந்தேகம்... உள்ளிட்டவைகளை ஒரம் ஒதுக்கிவிட்டு, பார்த்தோமென்றால் "கோச்சிங் கிளாஸில், ஸ்கூலில் , 70% மேல மார்க் எடுத்தா தான் டிஸ்கவுண்ட் தருவோம்..." எனும் டியூட்டரிடம், "சரியா படிக்காத பசங்களுக்குத்தானே கோச்சிங் தேவை..?" எனக் கேட்கும் சாந்தி கோபால் - அமலாபால் பாத்திரத்தின் வாயிலாக கோச்சிங் கிளாஸ் விஷயத்தில் கூட சரியில்லை நம் கல்வி முறை.... என குட்டு வைத்திருக்கும் பெண் இயக்குனர் அஷ்வினி ஐயர் திவாரிக்கும் இப்படத்திற்கும் ஒரு ராயல் சல்யூட் வைக்கலாம்!


ஆக மொத்தத்தில், "அம்மா கணக்கு - தப்புக்கணக்கு அல்ல... என்பதும், நிறைய விருதுகள் நிச்சயம்... என்பதும் நிதர்சனம்!"


--------------------------------------------------------------




குமுதம் விமர்சனம்


படிப்பில், கோட்டைவிடும் மகளை, நன்றாகப் படிக்க வைக்க, அம்மாவும் அதே பள்ளியில் அதே வகுப்பில் சேர்ந்து படித்தால் எப்படி இருக்கும்?அதைத்தான் 'அம்மா கணக்கு' என்று போட்டுப் பார்த்திருக்கிறார்கள். கணக்கு சரி, விடையும் சரி, ஆனால், ரீமேக் வாசனை நெருடல்.


அமலாபால் டாக்டர் ரேவதி வீட்டில் மகளுக்காக வேலைக்காரியாக செயல்படுவதும், கணவன் இல்லாமல் சேரியில் 14 வயது மகளுக்குத் தாயாக கடமையாற்றுவதும், மகளுக்கு படிப்பு சொல்லித்தர, தானும் மகள் படிக்கும் வகுப்பில் சேர்ந்து படிப்பதும், தன் நடத்தையை மகளே சந்தேகப்படும்போது அமலாபால் நடிப்புக்குத் தீனி போடுகிறார். என்றாலும் அந்த இளமை கொஞ்சமும் ஒட்டாத தன்மை.


அபிநயாவாக வரும் யுவஸ்ரீ 'டாக்டர் மகள் டாக்டர். இன்ஜினியர் மகள் இன்ஜினியர். வேலைக்காரி மகள் வேலைக்காரிதானே' என்ற சின்னவயது கோபமும் அலட்சியமும் டாப்.


டாக்டராக வரும் ரேவதியும் வாத்தியாராக வரும் சமுத்திர கனியும் பாந்தமான நடிப்பு.

சேரி, மீன்கடை என்று கலை இயக்குநர் உழைத்திருக்கிறார். அனாவசிய திணிப்புகள் எதுவும் இல்லாத பின்னணி இசை. ராஜா ராஜாதான்.


கதாசிரியரின் கற்பனைக்கு ஒரு பாராட்டு. ஆனால் இந்தியாவில் மகள் வகுப்பில் தாய் சாத்தியமே இல்லை. கல்வியின் தரத்தை கணிதம் பற்றி அறியாமையை சொல்லி விளக்குவது சபாஷ். அதுவும் பெண் இயக்குநர் அஸ்வினி ஐயர். திரைக்கதையில் அழுத்தம் காட்டியிரந்தால் 'அம்மா கணக்கு' தப்பாயிரக்காது.


அம்மா கணக்கு: மகள்களுக்குப் பாடம்!


குமுதம் ரேட்டிங் - ஓகே



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
அம்மா கணக்கு தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in