Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

ஆண்டவன் கட்டளை

ஆண்டவன் கட்டளை,Aandavan Kattalai
விஜய்சேதுபதியை வைத்து மணிகண்டன் இயக்கும் முதல்படம் இது.
29 செப், 2016 - 17:37 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » ஆண்டவன் கட்டளை

"கோபுரம் பிலிம்ஸ்" ஜி.என்.அன்பு செழியனின் தயாரிப்பில் விருதுகள் பல பெற்ற, "காக்க முட்டை" எம்.மணிகண்டன், இயக்கத்தில், விஜய் சேதுபதி - ரித்திகா சிங் ஜோடியுடன் பூஜா தேவாரியா, நாசர், யோகி பாபு, சிங்கம் புலி, ஏ-வெங்கடேஷ், எஸ்.எஸ்.ஸ்டேன்லி, ஆர்என்ஆர்.மனோகர்... உள்ளிட்ட ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்க, "பொது சேவைகளைப் பெற இடைத்தரகர்கள் தேவை இல்லை... அவர்களை நாடாதீர்கள்..." எனும் கருத்தாழமிக்க மெஸேஜுடன் காமெடியாகவும், கலர்புல்லாகவும் வெளிவந்திருக்கும் படம் தான் "ஆண்டவன் கட்டளை".


கதைப்படி, மதுரைப் பக்கம் கிராம பகுதியைச் சார்ந்த காந்தி எனும் விஜய் சேதுபதி, சொந்த அக்கா மாமா உள்ளிட்ட உறவிடமும், ஊரைச் சுற்றியும் கடன் வாங்கி வைத்துவிட்டு அந்த கடனை அடைக்க முடியாது, நண்பன், யோகி பாபுவுடன் சேர்ந்து லண்டன் போய் சம்பாதித்து திரும்பி வரமுடிவெடுக்கிறார். அதன்படி, சென்னை வந்ததும் லண்டனுக்கு போக, அதிகம் படிக்காத தன்னிடம் ஒர்க் பர்மிட் இல்லாததால் தான் டூரிஸ்ட் விசாவில் தான் போக முடியும் என்பதும், அங்கு போனதும், தனது பாஸ்போர்ட் விசாவை கிழித்துப் போட்டுவிட்டு தான் இலங்கை அகதியாக நடித்தால் தான் நாலு காசு பார்க்க முடியும்.... என்பதும் விஜய் சேதுபதிக்கு தெரிய வருகிறது. அதற்கும் சம்மதித்து லண்டன் போக முடிவெடுக்கிறார்கள் விஜய் சேதுபதியும், யோகி பாபுவும், ஏஜெண்டுகளின் அட்வைஸ்படி., தங்களுக்கு கல்யாணம் ஆகி விட்டதாக போலியாக தகவல்கள் கொடுத்து பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கிறார்கள் இருவரும். பாஸ்போர்ட்டும் கிடைக்கிறது.


ஆனால், தூதரக விசாரணையில் லண்டன் செல்ல விஜய் சேதுபதிக்கு மட்டும் விசா கிடைக்கவில்லை. யோகி பாபு, லண்டன் பறந்து போகிறார். விஜய் சேதுபதி, ஊர் நண்பரின் ஒத்தாசையுடன் நாசரின் டிராமா கம்பெனியில் வேலைக்கு சேருகிறார். அங்கு நாசரின் நம்பிக்கைக்கு பாத்திரமாகும் விஜய் சேதுபதிக்கு, அந்த டிராமா ட்ரூப்புடன் லண்டன் போகும் வாய்ப்பு மீண்டும் ஏற்படுகிறது. இந்த முறை, நாசரின் நம்பிக்கைக்கு பாத்திரமான விஜய் சேதுபதி, அவருக்கு தெரியாமல், தன் பாஸ் போர்ட்டில் உள்ள போலி மனைவியின் பெயரை அகற்ற வேண்டிய நிர்பந்தம். அதற்காக, கார்மேக குழலி எனும் பெயரை தன் மனைவி பெயராக பாஸ்போர்ட்டில் கொடுத்துள்ள விஜய் சேதுபதிக்கு, அப்படி ஒரு பெயரைக் கொண்ட பெண்ணைத் தேடி அலையும் சூழல். ஒரு கட்டத்தில் விஜய் சேதுபதிக்கு அப்படி ஒரு பெயருடன் தனியார் நியூஸ் சேனல் நிருபர் ரித்திகா சிங் கிடைக்கிறார். அதன்பின், என்னாகிறது? விஜய் சேதுபதி லண்டன் சென்றாரா? லண்டன் போய் இலங்கை அகதியான யோகிபாபு என்ன ஆனார்..? சேதுபதியின் பாஸ்போர்ட் மனைவியான ரித்திகா சிங் எப்படி அவரது பாசமுள்ள மனைவியாகிறார்..? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமான, விறுவிறுப்பான விடையையும், புரோக்கர்கள் மூலம் போலி ஆவணங்கள் பெற முயற்சிக்காதீர்கள்... எனும் மெஸேஜையும் அழகாக, அசத்தலாக, அம்சமாக, நேர்மையாக சொல்லியிருக்கிறது... "ஆண்டவன் கட்டளை" படத்தின் மீதிக்கதை.


"நாம நல்லா படிச்சிருந்தா டாக்டரா தான் ஆக முடியும் படிக்கலைன்னா அரசியல குதிச்சு மெடிக்கல் காலேஜே ஆரம்பித்து கல்வி தந்தையாவே ஆயிடலாம்டா..." என நண்பன் யோகி பாபுவிடம் நம்மூர் யதார்த்தை பேசுவதில் தொடங்கி, காந்தின்ற பெயரால தான் உன்ன லண்டன்காரன் செலக்ட் பண்ணலை.... எனும் யோகி பாபுவிடம்., "வெள்ளக்காரன் இருந்தவரைக்கும் காந்தி சேப்டியாக உயிரோடதான் இருந்தாரு..."., என்று பன்ச்" பேசி, கொதிக்கும் விஜய் சேதுபதி, ஆகட்டும், "நான் வேலைக்கு விசுவாசமா இருக்கிறதா? வேலை வாங்கி கொடுத்தவனுக்கு விசுவாசமா இருக்கிறதா..?" எனத் தவிக்கும் விஜய் சேதுபதியாகட்டும், "இனிமே நான் உங்களை ஏமாத்த மாட்டேன், உங்க கிட்ட பொய் சொல்ல மாட்டேன், உங்க அம்மா கிட்ட எல்லா உண்மையையும் வந்து சொல்றேன்... நாம கல்யாணம் பண்ணிக்கலாமா..." என ரித்திகா சிங்கிடம் வழியும் விஜய் சேதுபதியாகட்டும், க்ளைமாக்ஸில் மனைவி ரித்திகா சிங்கை பிரிய மனமின்றி ஏர்போர்ட்டில் திரும்பி திரும்பி பார்த்து பை, பை சொல்லும் விஜய் சேதுபதி ஆகட்டும்.... ஒவ்வொரு காட்சியிலும் ஒய்யாரமாய் நடித்து யதார்த்தமாய் காந்தி பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் விஜய் சேதுபதி. வாவ்!


நட்சத்திரங்களில் தொடங்கி, அரசியல்வாதிகள் வரை அகப்படுபவர்களின் அக்கப்போர் விஷயங்களை எல்லாம் எடுத்து பரபரப்பாய் போட்டு தாக்கும் தனியார் நியூஸ் சேனல் பெண் நிருபர் கார்மேக குழலியாக "இறுதிச்சுற்று" ரித்திகா சிங், விஜய் சேதுபதிக்கு உதவபோய் வம்பில் மாட்டிக் கொண்டு பின் அவர் காதல் மனைவியாகும் காட்சிகள் ஹாஸ்யம்.


அம்மணியும், சேதுபதியும் ஒரு வழியாய் க்ளைமாக்ஸில், சேர்ந்து வாழ முடிவு செய்த பின் கோர்ட்டில் விஜய் சேதுபதியை பார்த்து கண் அடிக்கும் காட்சி ஒன்று போதும... நிஜத்தில் குத்துச்சண்டை வீராங்கணையான அம்மணி, நடிப்பிலும் நல் ஏவுகணை என்பதற்கு.


நாயகர், நாயகி மாதிரியே நாசரின் டிராமா ட்ரூப்பில் இடம்பெறும் பூஜா தேவாரியா, சேதுபதியின் நண்பர் யோகி பாபு, வீட்டு புரோக்கர் சிங்கம் புலி, நாடக ஆசிரியர் _ நாசர், சேதுபதியின் அக்கா மாமா ஏ-வெங்கடேஷ், ஏஜெண்ட் எஸ்.எஸ்.ஸ்டேன்லி அமைச்சர் ஆர்என்ஆர்.மனோகர், சீனியர் வக்கீல் ஜார்ஜ், பெண் வக்கில் வினோதினி உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச் சிட்டிருக்கின்றனர். அதிலும், அவ்வளவு பெரிய உதடையும், கோக்கு மாக்கான முகத்தையும் வைத்துக் கொண்டு நாடக ஆசிரியர் நாசரைப் பார்த்து பாண்டியாக வரும் யோகிபாபு, எவ்வளவு பெரிய மூக்கு? எனக் கேட்பதும், உன் லுக்குக்கு கிடைக்கலை.... நம்ம பர்ஸ்னாலிட்டி பார்த்து லண்டன் விசா கிடைச்சாச்சு என்பதும்... இன்னும் பிற நக்கல் நையாண்டிகளில் ஈடுபடுவதும் தியேட்டரில் அடிக்கடி சிரிப்பை பட்டாசை கொளுத்திப் போடுகிறது. கீப் இட் அப் யோகி பாபு.


யோகி பாபுக்கு சமமாக வீட்டு புரோக்கராக வரும் சிங்கம் புலியும் செம அசத்தல். "மதுரையில இனி, தீ பிடிச்சா இனி, அமத்துறதுக்கு ஆளே, ஆணேகிடையாது போல... எல்லா பயலும் இங்கல்ல டேரா போட்டாப் புல இருக்கு..." என்ற நக்கலில் ஆகட்டும், "மெட்ராஸுல பாட்டியே கிடையாது... எல்லாம் ஆன்ட்டி தான்..." எனும் நையாண்டியிலாகட்டும், சகலத்திலும் சிங்கம் புலி நீண்ட இடைவெளிக்குப் பின் இந்தப் படத்தில் தான் மெய்யாலுமே சிரிக்க வைத்திருக்கிறார். இவர்கள் எல்லோரையும் காட்டிலும், அந்த ஊமை பாஷை பேசும் இலங்கை அகதியும், சொபஸ்டிக்காய் தில்லு முள்ளு செய்து அதிகாரி களைப் பார்த்ததும் எஸ்கேப் பித்தலாட்ட பாஸ்போர்ட் குமாராக வரும் எஸ்.எஸ்.ஸ்டேன்லி இருவரும் செம்ம நடிப்பு.


கே.யின் இசையில் "யாரோ பெத்த புள்ள ஏக்கம் கண்ணுக்குள்ளே..." உள்ளிட்ட இரண்டு பாடல்களும் கதையோட ஒட்டிய சுபராகம். என்.சண்முக சுந்தரத்தின் கதைக்கேற்ற காட்சி பதிவுகள் கலர்புல் ஒளிப்பதிவு அல்ல, ஓவியப்பதிவு என்றால் மிகையல்ல. அனுசரணின் படத்தொகுப்பு, குறையில்லா நிறையான பலே தொகுப்பு, எஸ்.எஸ் மூர்த்தியின் கலை இயக்கம் கச்சிதம். டி.அருள் செழியனின் கதையும் அதற்கு அவரோடு இணைந்த இப்பட எடிட்டர் அனுசரண், இயக்குனர் எம்.மணிகண்டனின் திரைக்கதையும் பிரமாதம்.


"ஆண்டவன் கட்டளை" எனும் டைட்டிலும், விஜய் சேதுபதி மற்றும் ரித்திகா சிங்கின் யதார்த்த நடிப்பும் படத்திற்கு பக்கா பலம்.


எம் மணிகண்டனின் இயக்கத்தில், இலங்கை தமிழர் இங்கு ஊமையக நடிக்க உணர்வு பூர்வமாக சொல்லப்படும் காரணம், சென்னையில பேச்சிலர்ஸ் வாடகை வீட்டுக்காக படும் பாடு, வீட்டு ஓனர்களின் கெடுபிடி அட்டகாசம், பிரதர் "மெட்ராஸ்ல ஒரு வீடு இருந்தா என்ன வேண்ணா பண்ணலாம் போலிருக்கு.." எனும் சென்னை வாடகைதாரர்களின் வேதனை பற்றி பேசும் இடம். மேலும், "கண்டதுக்கெல்லாம் அடிக்க லண்டன் போலீஸ், என்ன? நம்ம ஊரு போலீஸா...?" விலா நோக வைக்கும் கேள்விகள்... இத்யாதி, இத்யாதி... காமெடிகள், சமூகத்திற்கு தேவையான கருத்துக்கள்... உள்ளிட்டவைகளால் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்திருக்கிறது "ஆண்டவன் கட்டளை".


ஆகமொத்தத்தில், அனைத்து விதத்திலும் ஜனரஞ்சகமாக ஏறக்குறைய இரண்டரை மணி நேரம் ரசிகர்களை திரையரங்கு இருக்கையோடு கட்டிப் போட்டுவிடும் "ஆண்டவன் கட்டளை - அனைவரும் காணவேண்டிய அசத்தல் கட்டளை!"
----------------------------------------------


குமுதம் சினி விமர்சனம்
காக்காமுட்டை, குற்றமே தண்டனை ஆகிய வெற்றிப்படங்களைத் தந்த எம்.மணிகண்டன் இயக்கம். படத்துக்கு படம் ஹாட்ரிக் அடித்துவிடும் விஜய் சேதுபதியின் நடிப்பு. முதல் படத்திலேயே தேசிய விருதை அள்ளிய ரித்திகாசிங் இந்த கூட்டணியில் இப்போது 'ஆண்டவன் கட்டளை'. இன்றைய சூழலில் அவசியமான படம்.

ஊரைச்சுற்றிக் கடன். அதை அடைப்பதற்கு நண்பன் யோகிபாபுவுடன் வெளிநாடு செல்ல முயற்சிக்கிறார் விஜய் சேதுபதி. சென்னைக்கு வந்து ஒரு போலி ஏஜெண்ட் மூலம் பாஸ்போர்ட், விசா எடுக்கிறார்கள். பாஸ்போர்ட்டில் மனைவி பெயர் போட்டால் ஈஸியாக விசா கிடைக்கும் என்று சொல்லப்பட, கார்மேகக்குழலி என்ற பெயரை மனைவியாக சேர்க்கிறார். வம்பு இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது.

யோகிக்கு பாஸ்போர்ட் கிடைக்க, விஜய் சேதுபதி விசா கிடைக்காமல் அல்லாடுகிறார். தற்காலிகமாக, நாசரின் நாடகக் கம்பெனியில் வேலைக்குச் சேர, நாடகக்குழுக்கு லண்டன் போகும் வாய்ப்பு, இவர்களுடன் சேதுபதியும் போக வேண்டிய கட்டாயம், அதற்கா பாஸ்போர்ட்டில் உள்ள கார்மேகக்குழலி என்ற பெயரை நீக்க முயற்சிக்கிறார்.

டி.வி. செய்தியாளர் ரித்திகாசிங்கின் பெயரும் கார்மேகக்குழலி. அது எதேச்சையாக மாட்ட, அவரிடம் உதவி கேட்கிறார். அவர் உதவினாரா? விஜய் சேதுபதி லண்டன் போனாரா? நண்பன் என்ன ஆனார்? என்று எங்கேயும் நெருடல் இல்லாமல் ஒன்றுக்கு ஒன்று முடிச்சுப்போட்டு எதார்த்தமாக திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர்.

விஜய் சேதுபதி நடிப்பில் ஹாட்ரிக் அடிக்கிறார். மதுரைக்காரனாக வரும்போதும் சென்னையில் வாடகை வீடு தேடி அலையும்போதும், பாஸ்போர்ட்டுக்காக அலையும்போதும், நாசரிடம் பணிவைக் காட்டும்போதும், ரித்திகாசிங்கிடம் விருப்பத்தை வெளிப்படுத்தும்போதும். அவரது நடிப்பு மொழியில் புதுப்புது பரிமாணங்கள். அதுவம் வாய்பேச முடியாதவராக கோர்ட்டில் தன் குமுறலைக் கொட்டும்போது கைதட்டல் பெறுகிறார். இன்றைய இளைஞர்களின் மனவார்ப்பாக அவர் வாழ்ந்து காட்டியிருக்கிறார்.

யோகிபாபு கலகலக்க வைக்கிறார். லண்டன் விசா கிடைத்ததும், 'லண்டன் சிட்டிசன் மேலயே கை வைக்கிற'மாதிரியான வசனங்களால் திரை அரங்கமே கலகலப்பில் அதிர்கிறது.

விஜய் சேதுபதியுடன் போட்டி போட்டு நடித்திருக்கிறார் ரித்திகா சிங் டி.வி ரிப்போர்ட்டராக அவரது தோற்றம். அவரது தைரியம், சேதுபதியிடம் கோர்ட்டில், வக்கீலிடம் அவர் காட்டும் முகபாவம், ஏ கிளாஸ், அதுவம் கிளைமாக்ஸில் வெட்கப்படும் இடம் செம ஸ்மார்ட்.

பூஜா தேவாரியா மனதில் நிற்கிறார். அவரைப் போலவே நாசரும், இலங்கைத் தமிழராக வந்தவரும் விசாரணை அதிகாரியும் நம் மனதை விட்டு அகலா பாத்திரங்கள்.

கே-யின் இசை, இயக்குநரின் வசனம், ஒளிப்பதிவு என்று அத்தனையும் படத்தின் ப்ளஸ்.

பாஸ்போர்ட்டில் எவ்வளவு முறைகேடுகள் நடக்கின்றன? குறுக்குவழியில் போனால் எவ்வளவு பிரச்னைகள்? என்பதை உணர்த்தியதோடு, சென்னையில் வீட்டு வாடகைப் பிரச்னையைத் தொட்டு, விவாகரத்து பற்றி இன்றைய சூழலில் வாழும் தம்பதிகளுக்கு அறிவுரையும் கூறிய விதத்திற்காக இயக்குநர் மணிகண்டனுக்கு ஒரு சல்யூட்.


ஆண்டவன் கட்டளை - சமூகத்தின் அக்கறை.வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
ஆண்டவன் கட்டளை தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in