சின்னத்திரை - இர்பான் பெரிய திரையில் பெரிய ஸ்டாராக வரவேண்டுமென்று மூன்றாவதாகாவோ, நான்காவதாகவோ... முயற்சித்திருக்கும் படம் தான் ஆகம். ஆனால் அம்முயற்சி அடுத்தடுத்து அரைவேக்காட்டு தனமாகவே அமைவது இர்பானின் போதாத காலமா? அல்லது ரசிகனின் பொல்லாத நேரமா..? என்பது புரியாத புதிர்!
இந்திய இளைஞர்களின் சக்தி இந்தியாவுக்கே பயன்பட வேண்டும் என்னும் கொள்கையுடைய சாய் எனும் இர்பான், அதற்காக ஒரு நிறுவனம் நடத்தி இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட இளைஞர்களின் பாரின் கனவை பஸ்பமாக்கி அவர்களை இந்தியாவிற்காக உழைக்க வைக்கிறார். இதில் இந்திய இளைஞர்ககளை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்து செமதுட்டு பார்க்கும் வில்லன் அகிலேஷ் ஆச்சார்யா என்னும் ரியாஸ் கான் பெரிதும் பாதிக்கப்படுகிறார்.
அதனால்., அமெரிக்காவில் வேலை பார்க்கத் துடிக்கும் பார்த்தா எனும் ஆர்.ஜே பாலாஜி மோகனை, இர்பானுக்குத் தெரியாமல் அமெரிக்கா அனுப்பி வைத்துவிட்டு., இர்பானை இளைஞர்களிடம் சிக்க வைக்கிறார். இந்நிலையில் இர்பானுக்கும் - ரியாஸ் கானுக்குமிடையில் போன தலைமுறை பகை ஒன்றும் இருப்பது தெரிய வருகிறது. தேசப்பற்று சம்பந்தப்பட்ட அது என்ன? என்பதையும், அதிலும், இதிலும் இர்பான் ஜெயித்தாரா.? ரியாஸ்கான் ஜெயித்தாரா..? என்பதையும் இர்பான் - தீக் ஷிதாவின் காதலுடன் கலந்து கட்டி, வித்தியாசமாக சொல்கிறோம்... பேர்வழி... என நினைத்து ரசிகனை விரட்டி விரட்டி அடித்திருக்கின்றனர் ஆகம் படக் குழுவினர்!
சாய் ஆக இர்பான், கட்ஸாக இருக்கிறார். கட்டிப்புரண்டு வில்லன் ஆட்களுடன் மோதுகிறார். ஆனாலும் அர்ச்சனா - தீக் ஷிதாவுடனான இவரது காதல் மட்டுமே ரசிக்க முடிகிறது. மற்றதெல்லாம் குருவி தலையில் பனங்காய் வைத்த கதையாய் தெரிகிறது பாவம்!
அர்ச்சனா எனும் தீக் ஷிதா, அழுகு. ஆனால், அவரை வெளிப்படுத்த அதிகம் சந்தர்ப்பமில்லை!
ஆச்சார்யா - ஓய்.ஜி.மகேந்திரன், அகிலேஷ் ஆச்சார்யா - ரியாஸ் கான், போன்டா நண்பர் - அர்ஜூன், நாயகரின் அண்ணன் பார்த்தாவாக பாலாஜி மோகன், அம்மா ஸ்ரீரஞ்சனி, அப்பா- ரவிராஜா, அண்ணனின் காதலிமாயா - ஜெயஸ்ரீ, ஜெயப்பிரகாஷ், ரியாஸின் ஒயிட் செகரட்டரி - ஆலியோனா உள்ளிட்ட எல்லோரும் ஏதோ டிராமாவில் நடிப்பது மாதிரியே நடித்திருப்பது பலவீனம்.
அப்புச்சிகிராமம் விஷால் சந்திரசேகரின் இசையில், "சின்னத் தங்கம் என் சொல்ல கேளு.... உள்ளிட்ட பாடல்கள் சுபராகம். விழித்திரு ஆர்.வி.சரவணின் ஒளிப்பதிவு, ஓஹோ பதிவு இல்லை என்றாலும் ஒ.கே. பதி வென்பது ஆறுதல். மனோஜ்கியானின் படத்தொகுப்பு இன்னும் பட்டைத் தீட்டப்பட்டிருக்கலாம். ஜீனேஷின் திரைக்கதை வசனத்தில் தேசப்பற்று தேனாறாய் பாய்கிறது!
இப்படத்திற்கு எண்ணம், ஆராய்ச்சி, கதை, இயக்கம் செய்திருப்பதாய் டைட்டில் கார்டு போடும் டாக்டர் வி.விஜய் ஆனந்த் ஸ்ரீராம், இன்னும் அழகாய் ஆராய்ந்து இப்படத்தை இயக்கி இருந்தார்... என்றால் ஆகம் - ம்கூம் என்று சொல்லும் அளவில் இருந்திருக்காது!
அவ்வாறு, ஆராயவில்லை என்பதால்... ஆகம் -ம்கூம்.