நடிகர்கள் : மம்முட்டி, நயன்தாரா, ஷீலு ஆப்ரஹாம், அஜூ வர்கீஸ், எஸ்.என்.சுவாமி
டைரக்சன் : ஏ.கே.சாஜன்
மலையாளத்தில் பிரபல கதாசிரியரான ஏ.கே.சாஜன் இயக்கியுள்ள ஆறாவது படம். கடந்த வருடம் வெற்றி பெற்ற 'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்திற்குப்பின் மம்முட்டி-நயன்தாரா இருவரும் இணைந்திருக்கும் படம் என மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியுள்ள படம் தான் இந்த 'புதிய நியமம்'.
நகரத்தில் பிரபல குடும்ப வழக்கு லாயர் லூயிஸ் போத்தனான மம்முட்டி. அவரது காதல் மனைவி வாசுகி ஐயர். கலப்பு திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு அழகான பெண்குழந்தை. நிம்மதியாக போய்க்கொண்டு இருக்கும் இவர்களது வாழ்க்கையில், எதிர்பாராத விதமாக போதைக்கு அடிமையான மூன்று மனித மிருகங்கள் மூலம் நயன்தாரா கடுமையாக பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்.
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகும் நயன்தாரா கணவனிடம் கூட இதை தெரியப்படுத்தாமல் மிகவும் குறுகிப்போகிறார். ஒருகட்டத்தில் சிட்டி போலீஸ் கமிஷனராக உள்ள ஷீலு ஆப்ரஹாம் மீது ஏற்பட்ட நம்பிக்கையால் நடந்தவற்றை அவரிடம் கொட்டி தீர்க்கிறார் நயன்தாரா. ஒருமுறைகூட நேரிலேயே சந்தித்திராத கமிஷனரின் ஆலோசனைப்படி, சட்டத்தின் முன் அவர்களை நிறுத்தாமல், புதிய நியமப்படி அவர்கள் மூவரையும் தண்டிக்கும் வேலையில் இறங்குகிறார் நயன்தாரா..
அவரால் அந்த மூவருக்கும் தண்டனை கொடுக்க முடிந்ததா..? உண்மையில் இதில் போலீஸ் கமிஷனரின் தலையீடு இருந்ததா..? அப்படியானால் கணவனான மம்முட்டியின் பங்குதான் என்ன..? என்பதை இரண்டு மணி நேர விறுவிறு த்ரில்லர் படமாக, தகிக்கும் க்ளைமாக்ஸுடன் கூடவே அதிர்ச்சி தரும் ட்விஸ்ட்டுடன் சொல்லி, நம்மை திக் பிரம்மை பிடிக்க வைத்து வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
மலையாளத்தில் பேய் படங்கள், ஆக்சன் படங்களை விட பேமிலி த்ரில்லர் வகைப்படங்கள் தான் ரசிகர்களை இருக்கை நுனிக்கு கொண்டுவரும் வேலையை அதிகம் செய்கின்றன.. வெற்றியையும் உறுதி செய்கின்றன. இந்த 'புதிய நியமம்' படமும் அதை இம்மி பிசகாமல் செய்துள்ளது.
அன்பான தனது வாழ்க்கை சில நாசகாரர்களால் சிதைந்து போக இருப்பதை எண்ணி மனம் வெம்பி, நடைப்பிணமாகவே முதல் பாதி முழுதும் நடமாடும் நயன்தாராவின் கதாபாத்திரம் நிச்சயம் ரசிகர்களுக்கு புதிது தான். அவரது துக்கத்தை, கோபத்தை, ஆதங்கத்தை என அனைத்தையும் அப்படியே தனது பார்வையாலும் உடல் மொழியாலும் ரசிகர்களுக்கு கடத்துவதை சரியாக செய்திருக்கிறார் நயன்தாரா. ஆவறது சொந்தக்குரலையே பயன்படுத்தி இருப்பது ப்ளஸ்.
நயன்தாராவுடன் ஒப்பிடும்போது லாயராக வரும் மம்முட்டியின் கதாபாத்திரத்திற்கான நேரமும் வாய்ப்பும் குறைவு தான். சில விவாகரத்து வழக்குகளை சுமுகமாக தீர்த்து வைக்கிறார்.. குழந்தையை பள்ளியில் கொண்டுபோய் விடுகிறார். டிவி விவாதங்களில் கலந்துகொள்கிறார்.. மனைவியின் கோபதாபங்களுக்கு ஈடுகொடுத்து அமைதியாக செல்கிறார். சொல்லப்போனால் அண்டர்பிளே செய்திருக்கிறார். இந்த கேரக்டரில் எதற்காக மம்முட்டி.. ஒரு சாதாரண நடிகர் கூட போதுமே என நம்மை நினைக்கவைத்து கிளைமாக்ஸில் அந்த பத்து நிமிடம் நம் தலையில் வெயிட்டாக ஒன்று வைத்து நம் நினைப்பை மாற்றுகிறாரே அந்த கட்டம்.. சான்ஸே இல்லை. மொத்தத்தில் முன்பு தனது குடும்பத்தை காப்பாற்ற துடித்த 'த்ரிஷ்யம்' ஜார்ஜ்குட்டியின் இன்னொரு அப்டேடட் வெர்ஷன் தான் இந்த 'புதிய நியமம்' லூயிஸ் போத்தன்.
போலீஸ் கமிஷனராக அவரும் ஷீலு ஆப்ரஹாம் கம்பீரம்.. நயன்தாராவுக்கும் அவருக்குமான இணைப்பையே கதையின் மைய திருப்பமாக மாற்றியிருப்பது சபாஷ் சொல்ல வைக்கிறது. வயதான பெரியவராக வரும் எஸ்.என்.சுவாமி தான் க்ளைமாக்ஸ் டிவிஸ்ட்டின் சூத்தரதாரியாக வந்து நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார். மனித மிருகங்களாக வரும் மூவரில் நம்ம ஊர் சென்ட்ராயனும் ஒருவர் என்பது அதிர்ச்சி தருகிறது. நகைச்சுவை நடிகர் அஜூ வர்கீஸ் மட்டும் வீணடிக்கப்பட்டு இருக்கிறார்.
இயக்குனர் ஏ.கே.சாஜன் தான் அனுபவமிக்க கதாசிரியர் என்பதை காட்சிக்கு காட்சி நிரூபித்துக்கொண்டே இருக்கிறார். கூடவே இன்னொரு கதாசிரியான சீனியரான எஸ்.என்.சாமியும் சேர்ந்துகொண்டதால் வெற்றியை எளிதாக உறுதி செய்துள்ளார்கள்.
த்ரிஷ்யம் படத்திற்கு பிறகு அம்சமான ஒரு பேமிலி திரில்லர்.. அனைவரும் மிஸ் பண்ணாமல் பார்க்கவேண்டிய, பார்த்தே ஆகவேண்டிய படம் தான் இந்த புதிய நியமம்.