நடிகர்கள் : பிருத்விராஜ், பிரியல் கோர், மியா ஜார்ஜ
டைரக்சன் ; சாச்சி
கதாசிரியராக இருந்து இயக்குனராக மாறியிருக்கும் சாச்சி இயக்கத்தில் வெளியாகியுள்ள முதல் படம்.
நேவி ஆபீசரான பிருத்விராஜ், கண்டிப்பான உயர் அதிகாரி கபீர் பேடியின் 15வயது மகளான பிரியல் கோரை காதலித்த குற்றத்திற்காக பணிநீக்கம் செய்யப்படுகிறார். கூடவே அவரது நண்பரான பிஜுமேனனுக்கும் அதே தண்டனை கிடைக்கிறது.. ஆனால் நேவி நீதிமன்ற விசாரணையின்போது, இன்னும் ஐந்து வருடம் ஆனாலும் பிருத்விராஜுக்காக காத்திருப்பேன்.. என் காதல் மாறாது என நீதிபதியிடம் ஆவேசமாக கூறுகிறார் மைனர் பெண்ணானா பிரியல் கோர்.
ஐந்து வருடங்கள் கழித்தும் அவர் அதே மாறா காதலுடன் இருக்கிறார்.. ஆனால் அவரது தந்தை இப்போதும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் அவரது சம்மதத்திற்காக வைராக்கியம் காட்டுகிறார் பிரியல் கோர். ஆனால் அவரது தந்தையோ மகளை மிரட்டி பிருத்விராஜுடன் தொடர்புகொள்ளும் வழிகளை துண்டித்து, குடும்பத்தையும் வேறு ஊருக்கு இடம் மாற்றுகிறார்.
இன்னும் சில வருடங்கள் காதலியை காணாமல் தவிக்கும் பிருத்விராஜ், லட்சத்தீவில் இருக்கும் நண்பன் பிஜுமேனனை சந்திக்க வருகிறார். வந்த இடத்தில் காதலியின் தம்பி சுதேவ் நாயரை சந்திக்கிறார் பிருத்விராஜ். தனது அக்காவின் மீதான பிருத்விராஜின் காதல் இப்போதும் உறுதியாக இருப்பதை பார்த்து அவரின் காதலுக்கு உதவிசெய்ய நினைக்கிறார் சுதேவ் நாயர்.
ஆனால் இவர்களின் திட்டத்தை முறியடிக்கும் விதமாக பிரியல் கோரின் தந்தை பிருத்விராஜுக்கு ஒரு சவால் விடுகிறார். அதாவது லட்சத்தீவில் இருந்து கொச்சின் செல்வதற்கான கப்பல் போக்குவரத்து நான்கு நாட்கள் நிறுத்தப்பட்ட நிலையில், கொச்சியில் தற்போது வந்திருக்கும் தனது மகளை பிருத்விராஜ் சந்தித்துவிட்டால், தனது மகளை திருமணம் செய்து தருவதாக கூறுகிறார்.
அதேசமயம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி அவரை லட்சத்தீவில் இருந்து கிளம்பு விடாமல் தடுக்கும் வேலையையும் மேற்கொள்கிறார். பத்து வருட காத்திருப்பிற்குப்பின் தனக்கு கிடைத்திருக்கும் சரியான வாய்ப்பு இதுதான் என முடிவுசெய்யும் பிருத்விராஜ், காதலுக்காக உயிரை பணயம் வைக்கும் காரியத்தில் இறங்குகிறார். இறுதியில் காதலியை அடைந்தாரா..? காதலுக்காக உயிர்விட்டாரா என்பது பரபரக்க வைக்கும் க்ளைமாக்ஸ்.
த்ரில்லர், அட்வென்ச்சர் என்றெல்லாம் படம் வெளியாவதற்கு முன் ஏகத்துக்கும் பிலிம் காட்டியவர்கள், உள்ளே சென்று அமர்ந்தால் சொன்னதற்கு நேர்மாறாக அக்மார்க் காதல் படத்தை காட்டி அசர வைக்கிறார்கள். ''என்னு நிண்டே மொய்தீன்' படத்தின் அப்டேடட் வெர்ஷன் என்றுகூட இந்தப்படத்தை கூறலாம். அந்த அளவுக்கு காதலின் வைராக்கியத்தை இதிலும் காட்டியிருகிறார்கள். காதலால் கசிந்துருகும் வேலையை கச்சிதமாக செய்துள்ளார் பிருத்விராஜ். நேவி அதிகாரியாக இருந்துகொண்டு அவர் செய்யும் குறும்புகள் ரசிக்க வைக்கின்றன. படம் முழுதும் கூடவே நண்பனாக வரும் பிஜுமேனன், ஒவ்வொரு காட்சியிலும் நகைச்சுவை ஏரியாவை பேலன்ஸ் செய்துகொண்டு, தன்னை மீண்டும் ஒரு பக்கபலமான குணச்சித்திர நடிகராக நிரூபித்துள்ளார்.
கதையின் நாயகியான வடக்கத்திய பெண்ணாக வரும் பிரியல் கோர் பாந்தமான அழகில் அசரவைக்கிறார். ஆரம்பத்தில் அவரை 15 வயது பெண் என சொல்லும்போது பிருத்விராஜ் மட்டுமல்ல நம்மாலும் நம்பத்தான் முடியவில்லை.. கண்டிப்பு காட்டும் தந்தையாக இந்திநடிகர் கபீர்பேடி கச்சிதம். லட்சத்தீவில் டாக்டராக பணிபுரியும் மியா, காதலுக்காக நூதனமான முறையில் தனது பதவியை பயன்படுத்தி உதவி செய்து சபாஷ் பெறுகிறார்.
லட்சத்தீவில் நகர முக்கியஸ்தர் ஆட்டுக்கோயாவாக வரும் சுரேஷ்கிருஷ்ணா, பிருத்விராஜின் காதலை சேர்த்து வைக்க துடிக்கும் அதே வேளையில், தனது தங்கை சம்ஸ்க்ருதியின் காதலுக்கு முட்டுக்கட்டை போடுவது நகைமுரண்.. நடிப்புக்காக தேசியவிருது பெறுவார் என தெரிவதற்கு முன்னாலேயே கொடுக்கப்பட்டிருந்தாலும் கூட, வரும் கொஞ்ச காட்சிகளில் கூட முத்திரை பதித்து விடுகிறார் சுதேவ் நாயர். மொகப்பதீன் பாடலில் வழக்கம்போல மெலடியில் உருக வைக்கிறார் வித்யாசாகர் சுஜித் வாசுதேவின் ஒளிப்பதிவில் விதவிதமான கோணங்களில் படம் முழுவதும் லட்சத்தீவை சுற்றிப்பார்க்கும் வாய்ப்பு நமக்கு கிடைத்திருப்பதும், அதைப்பற்றிய சில நுணுக்கமான விஷயங்களை அறிந்துகொள்ள முடிவதும் சுவாரஸ்யம்.
ஆனாலும்கூட, இந்தப்படத்தை லட்சத்தீவில் ஏன் எடுக்கவேண்டும் என்பதற்கு க்ளைமாக்ஸில் வைக்கப்பட்ட, கடலை கடக்கவேண்டும் என்கிற சவால் மட்டுமே காரணமாக இருப்பது பலவீனம் தான். அதேசமயம் டைவிங் பயிற்சியாளராக லட்சத்தீவுக்கு வரும் பிருத்விராஜ், ஏற்கனவே அதில் தான் படைத்த சாதனையை பின்பலமாக வைத்து க்ளைமாக்ஸில் தனது காதலியை சந்திக்கும் ரிஸ்க்கை எடுத்திருந்தால் காதலின் வலிமை இன்னும் அழுத்தமாக மனதில் பதிந்திருக்கும். தேவைக்கு அதிகமான லட்சத்தீவு சம்பந்தப்பட்ட காட்சிகளின் நீளத்தை கொஞ்சம் குறைத்து இருந்தால் படத்தின் விறுவிறுப்பு இன்னும் கூடியிருக்கும் என்பது உண்மை..
மொய்தீன் ஹிட்டடித்துள்ள அதே நேரத்தில் அதேபாணியில் வெளியாகி இருக்கும் படம் என்பது மட்டுமே இந்தப்படத்திற்கு மைனஸாக இருக்கமுடியும்..