"பார்வை ஒன்றே போதுமே" உள்ளிட்ட லவ் சப்ஜெக்ட் சினிமாக்களில் கலக்கிய இயக்குனர் முரளி கிருஷ்ணா, புதுமுகம் ரஃபியுடன், மீனாட்சி, மீரா நந்தன் உள்ளிட்ட பிரபல நாயகியர் நடிக்க, கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எல்லாம் எழுதி இசையமைத்து, இயக்கி வெளிவந்திருக்கும் சைக்கோ த்ரில்லர் படம் தான் "நேர்முகம்".
கதைப்படி, சின்ன வயதில் தாயை இழந்து சித்தி கொடுமைக்கு ஆளானவரான பிரபல மனோதத்துவ மருத்துவர் ஆதித்யா மேனன். தான் அனுபவித்த சித்திக்கொடுமையால் பெண்களை அடியோடு வெறுப்பவர். அவரிடம் சிகிச்சைக்கு வந்து அவரது ஸ்பெஷல் கிளீனிக்கில் சிக்கிக் கொள்ளும் இளம் ஜோடிகளை பல நாள் அடைத்து வைத்து அடித்து, உதைத்து பலவிதமாய் பயமுறுத்தி, பிரித்து அனுப்பும் மனோபாவம் உடைய ஆதித்யா மேனனிடமும், அவரது ஆட்களிடமும் மனசிகிச்சைக்காக வந்து, வகையாக வந்து சிக்கிக் கொள்கின்றனர் அறிமுக நாயகன் ரஃபியும், அவரது காதலியான நாயகி மீனாட்சியும் (கருப்புசாமி குத்தகைதாரர் படஅறிமுகமே தான்...").
ரஃபி - மீனாட்சி ஜோடி அந்த ஸ்பெஷல் கிளீனிக்கிற்கு வந்த பின், அங்கு அடைத்து வைக்கப்பட்டிருக்கும் வேறு பல ஜோடிகளில் சிலர் மர்மமான முறையில் கொல்லப்பட்டு திகிலை கிளப்புகின்றனர். அக்கொலைகளை எல்லாம் இளம் காதல் ஜோடிகளை அடைத்து வைத்து பிரிக்க நினைக்கும் ஆதித்யா மேனனும், அவரது ஆட்களும் தான் செய்கிறார்களா? என்றால் அது தான் இல்லை. அப்புறம் யார் செய்கிறார்கள்..? என்பதை காணாமல் போன ஜோடிகளைத் தேடும் பாண்டியராஜன் தலைமையிலான காமெடி போலீஸ் டீம் கண்டுபிடித்து, ஆதித்யா மேனனையும் அந்தக் கொலையாளியையும் சட்டத்தின் முன் நிறுத்துகிறதா.? இல்லையா.? என்பது தான் "நேர்முகம்" படத்தின் கரு, கதை, களம், காட்சிப்படுத்தல், ரசிகனைப்படுத்தல் எல்லாம்.
அறிமுக நாயகன் ரஃபி., நடிப்பதை விட, சீரியஸாய் டயலாக் பேசுவது தியேட்டரில் சிரிப்பலையை ஏற்படுத்துகிறது. ரஃபி ஒன்றுக்கு இரண்டு நாயகிகளை லவ்வுகிறார், டூயட் பாடுகிறார், சண்டை போடுகிறார், தனக்குத்தானே பேசுகிறார், போகிறார், வருகிறார்... நடித்திருக்கிறாரா ? என்றால் அது தான் இல்லை.
மீனாட்சி, மீரா நந்தன் என இரு நாயகியர் .இருவரில்., பிளாஷ்பேக்கில் வரும் பின்னவர் பிய்த்து பெடலெடுத்திருக்கிறார், நடிப்பில்.... முன்னவர் கிளாமரில் அதையே செய்ய முயன்று தோற்றிருக்கிறார் ஆமாம், மீனாட்சிக்கு என்னாச்சு..?
வில்லனாக சைக்கோ மனோதத்துவ நிபுணராக ஆதித்யா மேனன் நல்ல நடிகர் என்றாலும், இதில் ஏனோ தானோ என்று ஏதோ நடித்திருக்கிறார். ஏனோ தெரியவில்லை, பாவம்.
காமெடி போலீஸாக வரும் ஆர்.பாண்டியராஜன், நெல்லை சிவா, சிசர்மனாகர் அண்ட் கோவினர் காமெடிக்கு பதில் கடித்திருக்கின்றனர்.
ஜெகதீஷ் வி.விஷ்வத்தின் ஒளிப்பதிவில் ஒளி இருப்பதாய் பெரிதாய் தெரியவில்லை.
"பார்வை ஒன்றேபோதுமே" உள்ளிட்ட எவர்கிரீன் லவ் சப்ஜெக்ட்டுகளை முன்பு இயக்கிய, முரளி கிருஷ்ணாவின் எழுத்து, இசை, இயக்கத்தில் "போறவளே போறவளே சொல்லிப் புட்டு போடி...", "கண்ணுக்கு நீ தான் அழகு...", "கண்களில் மின்னலை நான் கண்டேனே..." உள்ளிட்ட பாடல்கள், இசை சுமார் ரகம் என்றாலும் கூட அவரது அர்த்தம் பொதிந்த பாடல் வரிகளுடன் கூடிய ராகம்., சுபராகம். மற்றபடி, முரளி கிருஷ்ணாவின் இயக்கத்தில் படத்தில் வரும் அந்த கொலைகளை எல்லாம் வில்லன் ஆதித்ய மேனன் செய்யவில்லை. ஹீரோவான வினய் - ரஃபி தான் செய்ததாக வரும் ட்விஸ்ட் எல்லாவற்றிலும் இன்றைய ட்ரண்டுக்கு ஏற்றபடி க்ரைம் த்ரில்லர் கதையில் கலக்கியிருக்கிறார். ஆனால், காட்சிப்படுத்தல் மற்றும் இயக்கத்தில் எதையோ நினைத்து, எதையோ இடித்திருக்கிறார், பிடித்திருக்கிறார் என்பது பெரும் பலவீனம்.
ஆகவே "நேர்முகம் - கோணல் மாணல்!"