தினமலர் விமர்சனம்
ஆதார் எனும் பெயரில் ஆரம்பமாகி புத்தனின் சிரிப்பு எனும் பெயரில் வெளிவந்திருக்கும் திரைப்படம். அங்காடித்தெரு மகேஷ், சமுத்திரகனி, சுரேஷ் சக்காரியா என மூன்று நாயகர்கள். விவசாயத்தில் நம்நாட்டை முன்னுக்கு கொண்டுவர வேண்டும் எனும் லட்சியத்துடன் செயல்படும் விவசாய பட்டதாரி கதிர் எனும் மகேஷ். ஆனால் அதற்கு வங்கி கடன் கிடைக்க மறுப்பதால் வெகுண்டெழுகிறார் மகேஷ். மகேஷூக்கு அவரது குடும்பம் மட்டுமல்ல காதலியும் பக்கபலமாக இருக்கிறார்கள். மகேஷ் மாதிரியே மகேஷின் நண்பர் அருண் எனும் சுரேஷ் சர்க்காரியாவும் ஒரு பட்டதாரி, ஆனால் இஞ்ஜினியரிங் பட்டதாரி. சுரேஷூம், மகேஷூம் கிராமத்தில் வங்கி கடனுக்கு போராடுவது மாதிரி சென்னையில் குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் நவீன மெஷினை கண்டுபிடித்து அதற்கு அங்கீகாரம் கிடைக்காமல் போராடுகிறார். சாலையில் பொம்மை விற்கிறார். படிப்புக்கு சம்பந்தம் இல்லாமல் அவருக்கும் அவரது காதலி படுபயங்கர பக்கபலமாக இருக்கிறார்.
இந்த இருவர் மாதிரியே இவர்களது ஊர்க்காரரும், நாயகி நேத்ரா எனும் மித்ரா குரியனின் சகோதரருமான டில்லி சி.பி.ஐ. ஆபிசர் வெற்றிமாறன் எனும் சமுத்திரகனியும் டெல்லியில், ஊழல் லஞ்சலாவண்யத்தை எதிர்த்து போராடுகிறார். அதிகாரத்தில் இருக்கும் அமைச்சர்களை எதிர்த்து அவரால் எதுவும் செய்யமுடியாது போக, தன் பதவியை துறந்து ஊர்திரும்பும் சமுத்திரகனி மேற்படி நாயகர்கள் இருவருடனும் எதிர்பாராத ஒரு சந்தர்ப்பத்தில் இணைந்து செய்யும் செயற்கரிய காரியம்தான் "புத்தனின் சிரிப்பு" படத்தின் க்ளைமாக்ஸ்!.
கதிராக மகேஷ் விவசாயத்தில் வெல்வேன் ...என போராடுவது ஓ.கே. ஆனால், அடிக்கடி ஆங்கிலத்தில் நிறைய விஷயங்களை, காதலி்க்கு உச்சரிப்பு, அனுசரிப்பு, உபசரிப்பு இல்லாமல் தேமே என சொல்வது ரசிகனை வெறுப்படைய செய்கிறது.
சமுத்திரகனி சி.பி.ஐ. ஆபிஸர் வெற்றிமாறனாக, காமிராவை முறைத்துக்கொண்டே திரிவது சலிப்பை ஏற்படுத்தினாலும் க்ளைமாக்ஸில், ஆக்ஷனில் அசத்தி இருக்கிறார் மனிதர்!. அருணாக, இப்படத்தயாரிப்பாளர் சுரேஷ் சக்காரியா ஓ.கே. எனும் அளவில் நடித்திருக்கிறார். நாயகியர் நேத்ரா எனும் மித்ரா குரியன், அருணின் காதலியாக வரும் அறிமுக அம்மணி... உள்ளிட்டோர் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்!.
அஜி அலிமிராசாவின் இசை, யோகேஷின் ஒளிப்பதிவு, விக்டர் டேவிட்சனின் எழுத்து, இயக்கம் எல்லாம் இருக்கிறது. இருந்தும் பயங்கரவாதிகள் உருவாக அரசாங்கம் தான் காரணம் என குற்றம் சாட்டும் புத்தனின் சிரிப்பு இழுவையான காட்சிகளால் சற்றே போரடிக்கும் சிரிப்பாக இருக்கிறது! ஆனாலும், புத்தனின் சிரிப்பு - சத்தான சிரிப்பு!!.