Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

இனிமே இப்படித்தான்

இனிமே இப்படித்தான்,Inime Ippadithan
22 ஜூன், 2015 - 15:13 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » இனிமே இப்படித்தான்

தினமலர் விமர்சனம்


கண்ணா லட்டு தின்ன ஆசையா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படங்களை தொடர்ந்து காமெடி நடிகர் சந்தானம் கதாநாயகராக நடித்திருக்கும் திரைப்படம் கூடவே இரண்டாவதாக தயாரித்திருக்கும் படமும் கூட!


கல்யாண வயதிலிருக்கும் சந்தானத்திற்கு மூன்று மாதத்திற்குள் திருமணம் முடிக்க வேண்டுமென ஜோதிடர் கூறியதால் பெற்றோர் பெண் பார்க்கும் முயற்சியில் இறங்குகின்றனர். சந்தானத்திற்கு அதுவரை காதலி கிடையாது என்றாலும், விடிவி கணேசன் உள்ளிட்ட நண்பர்கள் கூறியதால், குழப்பியதால் அரேஞ்ஜ் மேரேஜைவிட லவ் மேரேஜ் தான் பெட்டர்... என கருதுகிறார். அதன் தொடர்ச்சியாக, காதலியையும், காதலையும் தேடி களத்திலும் குதிக்கிறார். அல்ட்ரா மாடர்ன் ஆஷ்னா சவேரியை ஒரு பொன்மாலைப்பொழுதில் காணும் சந்தானம், கண்டவுடன் காதல் கொள்கிறார். (கன்னத்தில் அறை வாங்கியபடி...). ஆனால், ஆஷ்னா சவேரிக்கு சந்தானத்தின் மீது கண்டவுடன் காதல் வர மறுக்கிறது. அதை தொடர்ந்து லவ் டார்ச்சர் செய்யும் சந்தானத்தின் மீது ஒருகட்டத்தில் ஆஷ்னாவுக்கும் காதல் பிறக்கிறது. ஆனால், அது தெரியாமல் ஆஷ்னா தனக்கு கிடைக்கமாட்டார்... எனும் அவநம்பிக்கையில் பெற்றோர் சந்தானத்திற்கு பொருத்தமாக பார்த்து வைத்திருக்கும் அகிலா கிஷோருடன், நிச்சயதார்த்தம் செய்து முடிக்கப்படுகிறது.


இத்தருணத்தில், ஆஷ்னாவிற்கும் தன் மீது காதல் இருப்பது சந்தானத்திற்கு தெரிய வருகிறது...இருதலைகொள்ளி எறும்பாக தவிக்கும் சந்தானம், என்ன முடிவெடுக்கிறார்? யார் அவருக்கு இல்லத்தரசியாகிறார்....? எனும் வழக்கமான கதைக்கு காமெடி முலாம் பூசி, வழக்கம்போலவே கலகலப்பாக இனி்மே இப்படித்தான் படத்தை ஒருவழியாக முடித்திருக்கிறார்கள். க்ளைமாக்ஸில் காதலித்தவரும் கை கழுவிவிட கட்டிக்கொள்ள இருந்தவரும் கைநழுவி போய்விட., குண்டான மாமன் மகளை சந்தானம் கட்டிக்கொண்டு தள்ளிப்படுக்கும் நாட்களில்... ஒருநாள் அந்த குண்டு பெண், மாமா உனக்கு பிடித்த யாரையாவது நினைத்து கொண்டு என்னை கட்டிக்கோ... எனும் போது ரசிகனின் விழியோரம் எட்டிப்பார்க்கும் கண்ணீர் திவளைகள்., உன்னை பிடிக்கலேன்னு யாரு சொன்னா.! என குண்டு பெண்ணை சந்தானம் கட்டிக்கொண்டு இல்லறத்தில் ஈடுபட படம் சுபமாக முடியும் காட்சி ஆனந்த கண்ணீராக ஆர்ப்பரிப்பது காமெடி இனிமே இப்படித்தான் படத்திற்கு கிடைத்த கமர்ஷியல் பேமிலி சென்ட்டிமென்ட் வெற்றி எனலாம்!


ஆனாலும் வழக்கமான காமெடி, வள வழ டயலாக் ஓரியண்டட் காமெடி காட்சிகள் என ஒருகட்டத்திற்கு மேல் இனிமே இபப்டித்தான் படம், கண்ணை கட்டுவது சற்றே போரடிக்கிறது. மற்றபடி, சீனியாக, கதாநாயகராக சந்தானம் தன் காமெடி போர்ஷனை சரியாக செய்திருக்கிறார்., ஆனால், ஒரு கதாநாயகருக்கு அது மட்டும் பத்தாதே! டான்ஸ், பைட் உள்ளிட்வைகளில் அடுத்தடுத்த படங்களில் இன்னும் கவனம் செலுத்தினால் தான் சந்தானம் கதாநாயகராக நிலைக்கமுடியும், அவ்வாறு இல்லாமல் இனிமே இப்படித்தான் என வசன காமெடிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்தால், இனிமேல் கதாநாயகராக சந்தானம் ஜெயிப்பது, நிலைப்பது சற்றே கடினம்


ஆஷ்னா சவேரி,அழகு பதுமையாக, கவர்ச்சி கன்னியாக, கலர்புல்லாக கலக்கி இருக்கிறார். மற்றொரு நாயகி அகிலா கிஷோரும் குடும்பப்பாங்கு லுக்கில் குத்துவிளக்கு ஏற்றியிருக்கிறார்.


ஆடுகளம் நரேன், பிரகதி, தம்பி ராமைய்யா, விடிவி கணேஷ், பெப்சி விஜயன், ஸ்ரீரஞ்சனி உள்ளிட்ட ஒவ்வொருவரும் பாத்திரமறிந்து பளிச்சிட முற்பட்டிருக்கின்றனர்.


சந்தானம் தன்னை இளமையாக காட்டிக்கொள்ள சற்று அழகு குறைவான, வயது மிகுந்த விடிவி கணேஷ் உள்ளிட்ட இன்னும் சில நபர்களை நண்பர்களாக வைத்துக்கொண்டு சுற்றுவதும், (அழகான இளம் வயதுடைய தன்னை இத்தனை நாளும் ஹீரோக்கள் நண்பனாக வைத்து கொண்டு கடுப்பேற்றியதற்கு இப்படி சொல்லாமல் சொல்லி பதிலடி தருகிறாரோ சந்தானம்!) சீனுக்கு சீன், பேச்சுக்கு பேச்சு காமெடி என்ற பெயரில் கவுண்டர் கொடுப்பது ஆரம்பத்தில் கைதட்டி ரசிக்கும்படி இருந்தாலும் கதைக்குள் வராமல் கடுப்பேற்றுவது ஒருகட்டத்தில் ரசிகர்களை சோர்வடைய செய்கிறது.


கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவு ஓகே. சந்தோஷ் குமார் தயாநிதியின் இசை மற்றும், மறுமுறை கேட்க தூண்டும் வகையில் இல்லாத, எடுபடாத பாடல்கள் படத்திற்கு பெரும்பலவீனம்.


முருகன் அண்ட் பிரேம் ஆனந்த் எனும் இரட்டையர்களான முருகானந்தத்தின் எழுத்து, இயக்கத்தில் சந்தானத்திற்காகவே பண்ணிய கதையாக இனிமே இப்படித்தான் படம் மொத்தமும் தெரிவதாலும், கே.பாக்யராஜின் பாமா ருக்மணி பட சாயலிலேயே இனிமே இப்படித்தான் படமும் முடிவதாலும், ரசிகர்கள் எந்தளவுக்கு ஏற்றுக்கொள்வார்கள் என்பது புரியாத புதிர். ஆனால் பாக்யராஜ் படங்களை பெரிதாக பார்த்திராத இந்தகாலத்து இளம் ரசிகர்களுக்கு சந்தானத்தின் இனிமே இப்படித்தான் நிச்சயம் பிடிக்கலாம்!


இனிமே இப்படித்தான் டைட்டில் கார்டில் இனி்மே இப்படித்தான் பட தலைப்பையே சீரியல் பல்புகளை ஒளிக்கச் செய்து ஜொலிக்க வைத்திருக்கிறார்கள் படமும் நல்ல புதிய பார்முலா கதையுடனும், காட்சியமைப்புகளுடனும் இன்னும் கொஞ்சம் ஜொலித்திருந்ததென்றால் இனிமே இப்படித்தான், இன்னும் நன்றாக இருந்திருக்கும். அவ்வாறு இல்லாமல் அடுத்தடுத்த படங்களிலும் சந்தானம் இனி்மே இப்படித்தான் என பேசிக்கொண்டே இருந்தார் என்றால், ரசிகன் எப்படியோ.?! எனும் கேள்வி எழுந்தாலும் சந்தானத்தின், இனிமே இப்படித்தான் - நிச்சயம் கமர்ஷியல் காமெடித்தான்! - கலெக்ஷன் அதிரடியா...?! பொறுத்திருந்து பார்ப்போம்!!




கல்கி விமர்சனம்




இனிமே இப்படித்தான்!


பொதுவாக சந்தானத்தின் காமெடி என்றாலே எதிராளியை மட்டம் தட்டுவது போலத்தான் காட்சிகள் இருக்கும். இந்தப் படத்திலும் அவை உண்டு என்றாலும் அதற்கும் மேலே வயிறு குலுங்கச் சிரிக்கும் அளவுக்கு நகைச்சுவை சுனாமியே இருக்கிறது.

சந்தானம் சீனு என்ற பாத்திரத்தில் நடித்திருக்கிறார், சீனுக்கு சீன், சீனுவின் அதிரடி காமெடி எவர் ரெடி சரவெடி!

பாடல் காட்சிகளில்கூட சிரிப்பை சாதுர்யமாகப் புகுத்தியிருப்பதைப் பாராட்டத்தான் வேண்டும். சந்தானம் நடனத்திலும் பட்டையைக் கிளப்புகிறார். நடன இயக்குநர் ரொம்ப மெனக்கெட்டிருப்பது தெரிகிறது! சண்டைதான் இன்னமும் சந்தானத்துக்கு செட் ஆகவில்லை!

முருங்கைக் கீரையைப் பறிக்க சுவர் எட்டிக் குதித்தவரைத் துப்பாக்கியால் சுடும் மிலிட்டரி கேரக்டர் உண்மைச் சம்பவம் ஒன்றை நினைவூட்டுகிறது. தம்பி ராமையாவின் நடிப்பு சந்தானத்துக்கு ஈடு கொடுக்கும்படி இருக்கிறது. அதென்னவோ தெரியவில்லை. வி.டி.வி. கணேஷைப் பார்த்தாலே ரசிகர்கள் குதூகலம் அடைந்து விடுகிறார்கள்.

ஒருநிமிடம் அந்தப் பக்கம் இந்தப் பக்கம் திரும்பினாலும் அதிரடி சிரிப்புகளில் எதையாவது மிஸ் பண்ண வேண்டிய இருக்கும். சாதாரண காட்சிகள், சீரியஸ் காட்சிகள் என்ற பேதம் இல்லாமல் சிரிப்பு, சிரிப்பு, சிரிப்புதான்!

சந்தோஷ் தயாநிதியின் இசை நன்கு உள்ளது. கதாநாயகிகள் ஆஷ்னா சவேரி மற்றும் அகிலா கிஷோர் கச்சிதமாக நடித்திருக்கிறார்கள்.

அசரீரி மூலம் கதை சொல்வது, டாஸ்மாக் காட்சிகள் வைப்பது என்ற பார்த்துத் தேய்ந்த காட்சிகள் இந்தப் படத்திலும் இருப்பது கொடுமை. சந்தோஷம் என்றாலும் மது, வருத்தம் என்றாலும் மது என்று இளைஞர்களுக்குத் தவறான பாதை காட்டுவதைத் தவிர்த்திருக்கலாம். இரண்டு கதாநாயகிகளும் சந்திக்கப் போகிறார்கள் என்பதை முன்னதாகவே யூகிக்க முடிகிறது என்றாலும் அதைச் சுவாரசியம் கெடாமல் சொல்லியிருக்கிறார்கள்.

இவ்வளவு நகைச்சுவை மிளிரும் படத்தை திருஷ்டிப் பரிகாரமாக வரும் ஒரு சில இரட்டை அர்த்த வசனங்களைத் தவிர்த்திருக்கலாம். வழுக்கை விழுந்தவர்கள், உடல் பருமன் உள்ளவர்களைக் கிண்டல் செய்வது, மாற்றுத் திறனாளிகளை கேலி செய்வதற்குச் சமம் என்பதை எப்போதுதான் உணர்வார்களோ?

மற்றபடி சமீப காலத்தில் இதைப் போன்ற முழு நீள நகைச்சுவைப் படம் வந்ததே இல்லை என்பதை உறுதியாகக் கூறலாம். சபாஷ் இயக்குநர்(கள்) முருகானந்தம் மற்றும் தயாரிப்பாளர் சந்தானம்!




இனிமே இப்படித்தான்: ஆல்வேஸ் சிரிப்புத்தான்!



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in