இயக்குனர் சித்திக்கும் மம்முட்டியும் சேர்ந்தால் அந்தப்படம் மெகா ஹிட் தான் என்பதை இதுவரை நிரூபித்து வந்துள்ளார்கள்.. இந்தப்படமும் அந்த வரிசையில் சேர்ந்துள்ளதா என்பதை பார்க்கலாம்..
சிறுவயதில் வறுமையில் சிக்கியதால் வெளிநாடு சென்று சம்பாதித்து இப்போது கோடீஸ்வரராக இருப்பவர் மம்முட்டி. அவரது மனைவி இறந்துவிட மகனுடன் தந்தையுடனும் வசிக்கிறார். கணவர் இறந்துவிடவே, ஒரு பெண் குழந்தையுடன் தனித்து வாழும் நயன்தாரா சொந்தமாக கேக் தயாரித்து விற்று வாழ்க்கை நடத்துபவர்..
மம்முட்டியின் மகன் சனூப்பும், நயன்தாராவின் மகள் அனிகாவும் பள்ளியில் திக் பிரண்ட்ஸ்.. இருவரும் சேர்ந்து தங்களது தாய்க்கும் தந்தைக்கும் திருமணம் செய்துவைக்க முடிவு செய்கிறார்கள்.. மகனின் தாய்ப்பாச ஏக்கத்தை தீர்ப்பதற்காக மம்முட்டி சம்மதித்தாலும், நயன்தாராவுக்கு இந்த கல்யாணத்திலும் விருப்பம் இல்லை. மம்முட்டியையும் அவ்வளவாக பிடிக்கவில்லை.
மம்முட்டியின் தந்தை, நயன்தாராவிடம் பேசி ஒருவழியாக அவரை சம்மதிக்க வைக்கும் நேரத்தில், இறந்துபோனதாக நினைத்த நயன்தாராவின் கணவர் சக்கரவர்த்தி உயிருடன் வந்து நிற்கிறார். இதனால் ஏற்பட்ட குழப்பத்தில் திருமணத்தை நிறுத்துகிறார் நயன்தாரா. ஆனால் கணவன் வந்துவிட்டதால் சந்தோஷத்திற்கு பதிலாக பயப்படுகிறார் நயன்தாரா.. பயப்படும் அளவுக்கு சக்கரவர்த்தியின் பின்னணி என்ன..? நயன்தாரா இறுதியில் என்ன முடிவெடுத்தார் என்பது தான் க்ளைமாக்ஸ்..
முதலில் அடி... அப்புறம் தான் பேச்சு என்கிற பாலிஸி கொண்ட அதிரடி 'ராஸ்கல்' தான் மம்முட்டி. அலட்டல் இல்லாமல் கட்டப்பஞ்சாயத்து பண்ணுவதும்,. மகனின் ஆசைக்காக நயன்தாராவை மணம் முடிக்க சம்மதிப்பதும் என பெரும்பாலும் விறைப்பு காட்டுகிறார். ஆனாலும் கடைவீதி என்றுகூட பார்க்காமல், வேட்டியை விலக்கி அண்டர்வேர் பாக்கெட்டில் இருந்து பணம் எடுப்பது, பையனின் பங்ஷனுக்கு நேரமாகிவிட்டதால் காஸ்ட்லி காரைவிட்டுவிட்டு ஆம்புலன்சில் போவது என கலாட்டாக்களுக்கும் பஞ்சமில்லை. கூடவே ஹரிஸ்ரீ அசோகன், கலாபவன் ஷாஜன் என அவரது அடிப்பொடிகளும் சேர்ந்துகொள்ள படம் கலகலப்பாக நகர்கிறது.
நயன்தாரா இனி வாழ்க்கையில் ஜாலியான பெண்ணாக நடிக்கவே மாட்டாரா என்கிற மாதிரி வழக்கம்போல சீரியஸ் பார்ட்டிதான்.. மம்முட்டியுடன் பிணக்கம் மறைந்து இணக்கம் ஏற்படும் காட்சிகளில் மட்டும் வழக்கமான நயன்தாராவை காணமுடிகிறது..
படத்தின் முக்கிய ஜீவன் அந்த இரண்டு குட்டீஸ்கள் தான். பெண்பிள்ளை மாதிரி பயந்து ஒதுங்கும் சிறுவன் சனூப்பும், ஆண்பிள்ளை மாதிரி வீரமான சிறுமியான அனிகாவும் சரியான தேர்வு. இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து பெரிய மனிதர்கள் ரேஞ்சுக்கு திட்டம் போடும்போது நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார்கள்.
நிதானம் காட்டும் வில்லனாக ஜே.டி.சக்கரவர்த்தி நீண்ட நாள் கழித்து என்ட்ரியாகி இருக்கிறார். வழக்கமாக சித்திக்கின் படங்கள் உணர்வுப்பூர்வமாகவும், அதே நேரம் பல திருப்பங்களுடனும் இருக்கும். இதில் அந்த மாயஜாலங்கள் மிஸ்ஸிங். இன்னும் கொஞ்ச நேரம் இந்தப்படம் நீளாதா என எப்போதும் ரசிகர்களை நினைக்க வைக்கும் சித்திக், இந்தமுறை அப்படிப்பட்ட உணர்வை முழுமையாக கொடுக்கவில்லை என்பதே உண்மை.