தினமலர் விமர்சனம்
லௌக்யம் படம் தந்த வெற்றியோடு பிரபல ஹீரோ கோபிசந்த், தனது புதிய ஸ்டைலிஷ் லுக்குடன் நடித்திருக்கும் படம் ஜில்.
இந்த படத்தின் கதை மும்பை சிறையில் இருந்து வில்லன் சோட்டா நாயக் (கபீர்) தப்பிக்கும் காட்சியோடு தொடங்குகிறது. அவர் வெளியே வந்து ஆரம்ப காலத்தில் அவருக்கு கூட்டாளியாக இருந்து பின்னர் எதிரியாக மாறிய ரங்கநாத்தை (பிரம்மாஜி) தேடி வருகிறார். இந்நிலையில் தீயணைப்பு வீரரான ஜெய் (கோபி சந்த்) ஒரு சமயத்தில் சாவித்திரியை (ராஷி கண்ணா) கண்டதும் காதலில் விழுகிறார். பின்னர் ஒரு ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் பிரம்மாஜியை காப்பாற்றுகிறார். எனினும் அவர் இறந்து போகிறார். அவர் இறப்பதற்கு முன்பாக ஜெயின் காதில் ஏதோ ரகசியத்தை சொல்லி விட்டு குட் டே என்று கூறி விட்டு இறந்து போகிறார். இந்த நேரத்தில் வில்லன் அங்கு வருகிறார். ஜெயிடம் பிரம்மாஜி என்ன ரகசியத்தை சொன்னார் என்பதை வில்லன் தெரிந்து கொள்ள விரும்புகிறார். அதற்காக ஜெய்க்கு வேண்டப்பட்டவர்களை எல்லாம் வில்லன் தாக்குகிறார். ஜெயின் காதலியையும் வில்லன் கடத்தி செல்கிறார்.
வில்லன் எந்த ரகசியத்தை அறிய விரும்புகிறார்?அவர் ஹீரோ மற்றும் ஜெய்க்கு வேண்டப்பட்டவர்களை எல்லாம் ஏன் தாக்குகிறார்? பிரம்மாஜியை ஏன் வில்லன் தேடுகிறார்? பிரம்மாஜி ஏன் குட் டே என்று கூறினார்? ஜெய் தனது காதலியை எப்படி காப்பாற்றுகிறார்? இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் தான் படத்தின் மீதியாகும்.
இந்த படத்திற்கு ஹீரோ கோபி சந்த் தான் உயிரோட்டமாக இருக்கிறார். அவர் தனது ஸ்டைலிஷ் லுக்கில் அசத்தவே செய்கிறார். கதாநாயகியான ராஷி கண்ணா தனது அழகால் அனைவரையும் வெகுவாக கவருகிறார். காதல் ஜோடி இருவரின் கெமிஸ்ட்ரி நன்றாகவே உள்ளது. வில்லன் கபீரின் நடிப்பு மிரட்டுகின்றது.
பிரபாஸ் சீனு, ஊர்வசி மற்றும் போசனி கிருஷ்ணா முரளி போன்றவர்களின் நகைச்சுவை காட்சிகள் நிறைவாகவே உள்ளது. இது தவிர சலபதி ராவ், பரத், ஸ்ரீநிவாஸ் அவசரளா ஆகியோரின் கதாபாத்திரங்களும் சிறப்பாகவே உள்ளது.
சக்தி சரவணின் கேமரா மூலம் காட்சிகளை மனதில் நிற்க வைக்கிறார். கிப்ரனின் இசை ரசிக்கும் படியாக உள்ளது.
அறிமுக இயக்குனர் ராதா கிருஷ்ணன் நல்ல முயற்சியில் வெற்றி பெற்று உள்ளார் என்றே சொல்ல வேண்டும்.
மொத்தத்தில் ஜில், வெயிலுக்கு ஏற்ற இதமான ஆக்க்ஷன் படம்