தினமலர் விமர்சனம்
ஸ்ரீகாந்த்-லட்சுமிராய் ஜோடி பேயாக, வி.சி .வடிவுடையான் இயக்கத்தில் நடித்து வெளி வந்திருக்கும் வழக்கமான பேய்படம்!
தலைவாசல் விஜய் - ரேகா தம்பதியின் ஆண்வாரிசு ஸ்ரீகாந்த். வெளியூரில் வசிக்கும் ஸ்ரீக்கும், அவரது காதலி லட்சுமிராய்க்கும் திருமண ஏற்பாடு நடக்கிறது. அதற்காக ஊருக்கு வருகின்றனர் ஸ்ரீயும், அவரது காதலி லட்சுமிராயும். வந்த இடத்தில், அவரது அப்பா தலைவாசல் விஜய் வாங்கிய கடனுக்காகவும், அதன் கணக்கில் அடங்கா வட்டிக்காகவும், ஸ்ரீ, லட்சுமி, விஜய், ரேகா உள்ளிட்ட ஒட்டுமொத்த குடும்பத்தையும், சவுகார்பேட்டை கோத்ரா சேட் சுமனும் அவரது செவத்த ஆண் வாரிசுகளும், கூண்டோடு கைலாசம் அனுப்புகிறது. அதனால் ஸ்ரீ யும், ராயும் பேயாக வந்து சுமன் அண்ட் சன் ஸை பழிக்கு பழிவாங்கும் கதை தான் சவுகார்பேட்டை மொத்த படமும்!
ஸ்ரீகாந்த், வெற்றியாகவும், சக்தியாகவும் இருவேறு கெட்-அப்களில் தன் அழகான மூஞ்சை அகோரமாக்கிக்கொண்டு பயமுறுத்துகிறார்.
மாயாவாக வரும் லட்சுமிராயும் அப்படியே என்றாலும், அவ்வப்போது அழகான தோற்றத்தில் வந்து ஆறுதலளிக்கிறார்.
சுமன், சரவணன், சிங்கம் புலி, பவர் ஸ்டார், டி.பி.கஜேந்திரன், சி.ரெங்கநாதன், ஆர்த்தி உள்ளிட்டோர் கடிக்கின்றனர். அதிலும், வில்லன் சுமன், வெள்ளை விக் வைத்த விவேக் மாதிரி இருக்கிறார். வேறு யாருடைய டப்பிங்குரலிலோ கடிக்கிறார். சுமனின் வாரிசுகளில் ஒரு வராக வரும் லிங்கேஷ் கவனிக்க வைக்கிறார். வடிவுக்கரசி மிரட்டும் லுக்கில் வந்து மிரட்டி செல்கிறார்.
ஜான் பீட்டரின் அதிரடி இசையில் கவிஞர் சொற்கோவின் பயம் பயம்.... பேயினாலே பயம் பாடலும் அதன் சொல்லாடல்களும்... இத்தனை களேபரங்களுக்கு மத்தியிலும் மனதில் ரீங்காரமிடுவது ஆச்சர்யம்.
சீனிவாச ரெட்டியின் ஒளிப்பதிவு சி.ஜி , ஸ்பெஷல் எபெக்ட்ஸ் உபயத்தில் பளிச்சிட்டிருக்கிறது. எலிசாவின் படத்தொகுப்பு மோசமான தொகுப்பு .
மொத்த படத்தில், அழகிய பாடல்களும் இரண்டு ஸ்ரீகாந்துக்குமான ப்ளாஷ்பேக்கும் மட்டுமேஆறுதல். ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும், வி.சி வடிவுடையான் எழுத்து, இயக்கத்தில் அவ்வப்போது படத்தில் வரும் பேய் பயமுறுத்தலைக்காட்டிலும், படம் முழுக்க பரவிக் கிடக்கும் இயற்கை உபாதை வசனங்களும், காட்சிகளும் ரசிகனை மிரள வைப்பது பலவீனம்!
ஆகவே, சவசவ என இழுவையாய் இழுக்கும், இருக்கும் "சவுகார்பேட்டை - சாதாரண பேய் சேட்டை.... விட்டிருக்கிறார்கள் கோட்டை!
---------------------------------------------------------------
குமுதம் சினி விமர்சனம்
இருட்டில் எடுக்காமல் நல்ல உச்சி வெயில் வெளிச்சத்தில் ஒரு பேய்ப்படத்தை எடுத்திருக்கிறார்கள்!
தான் காமம் கொண்ட பெண், செத்துப் போய் பேயாக மாறினாலும் அந்தப் பேயுடன் உறவு கொள்ளத் துடிக்கும் ஒருவனது கதைதான் 'சவுகார்பேட்டை'. இடையில் பங்களா, கடன்கார சவுகார்பேட் சேட், கொலை, பேய் என்று கொஞ்சம் ஜிகினா சுற்றியிருக்கிறார்கள். (இயக்கம் வடிவுடையான்)
ஸ்ரீகாந்துக்கு இரட்டை வேடம். பேயாக வரும் ஹீரோவை விட, இடைவேளைக்குப் பிறகு மந்திரவாதியாக வந்து 'அடடடடடடடடா' என்று இழுத்து முழக்கி இச்சைக்கு முயலும் வில்லன் பாத்திரத்தில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். மனிதர் நன்றாக இருக்கிறார். நடிக்கவும் வருகிறது. ஆனால் பெரிய ஹிட் எதுவும் ஏன் தர முடியவில்லை?
கவர்ச்சிக்குக் கதாநாயகி, அந்த ஊடல், கிளுகிளு!
சரவணன், பவர் ஸ்டார், சிங்கம்புலி என்று மூவரும் அவ்வப்போது சிரிக்கவும், அவ்வப்போது எரிச்சல் படவும் வைக்கிறார்கள்.
வடிவுக்கரசி அய்யோ பாவம்!
க்ளைமாக்ஸில் மந்திரவாதிக்கு ஆதரவாக சுடுகாட்டுப் பேயெல்லாம் எழுந்து வந்து சண்டை போடுவது வேடிக்கை.
பாடல்கள் எல்லாம் பேய்க்கத்தல்!
கடையில் இருக்கும் வடையெல்லாம் முடியாக இருக்க, காரணம் வடை மாஸ்டர் ஒரு கையில்லாததால் அக்குளில் வைத்து வடை சுடும் காமெடி உவ்வாக்!
வித்தியாசமான கதையை எப்படி சொதப்பலாம் என்பதை இந்தப் படத்தின் திரைக்கதை க்ளாஸ் எடுக்கிறது.
சவுகார்பேட்டை : காமெடிப் பேய்!
குமுதம் ரேட்டிங்: ஓகே