Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

இஞ்சி இடுப்பழகி

இஞ்சி இடுப்பழகி,Inji Iduppalaki
28 நவ, 2015 - 16:38 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » இஞ்சி இடுப்பழகி

தினமலர் விமர்சனம்



அனுஷ்கா., கதைக்கு தேவை என்பதால்... ரொம்பவே கஷ்டப்பட்டும், இஷ்டப்பட்டும் உடம்பை கண்டபடி குண்டடித்தும், குறைத்தும், பருத்தும் சிறுத்தும் நடித்து தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் ஆர்யாவுடன் இணைந்து நடித்து, பிரமாண்ட படநிறுவனமான பிவிபி சினிமா தயாரிப்பில் வெளி வந்திருக்கும் படம் தான் இஞ்சி இடுப்பழகி!


இஞ்சி இடுப்பழகி கதைப்படி, சின்ன வயது முதலே கொழுக் மொழுக் என செல்லமாக வளர்ந்து ஆளானவர் அனுஷ்கா. பெரிய மனுஷி ஆகி, மாப்பிள்ளை பார்க்கும் படலம் தொடங்கியதும், அனுஷ்காவின் குண்டு உடம்பை காரணம் காட்டியே வருகின்ற மாப்பிள்ளைகளும், கூடவே அவர்களது பெற்றோர்களும் கூட தலைதெறிக்க ஒடுகின்றனர்.


ஆனால், அப்படி ஓடிய மாப்பிள்ளைகளில் சுத்தமான டாய்லெட் டாக்கு மெண்ட்டரி பிலிம் எடுக்கும் டைரக்டர் ஆர்யா மட்டும் வித்தியாசமாக, விதிவிலக்காக, அனுஷ்காவுடன் தொடர் நட்பில் இருக்கிறார்.


ஆனாலும், அனுஷ்காவுக்கு உடம்பு குறைந்தபாடில்லை. அதனால், உடம்பை குறைப்பதற்காக... பிரகாஷ்ராஜ் நடத்தும் சைஸ் சீரோ எனும் ஜிம்மில் சேருகிறார். அங்கு உடம்பு இளைக்க தரப்படும் சில பேட் பர்னர்ஸ் எனும் கொழுப்பு குறைக்க பயன்படும் சில செயற்கை மருந்துகளால்., அழகி போட்டியில் பங்கேற்க துடிக்கும் அனுஷ்காவின் நெருங்கிய தோழி கிட்னி பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சீரியஸாக இருக்கிறார். அதில் துடித்துப் போகும் அனுஷ்கா, வில்லன் சைஸ் சீரோ பிரகாஷ் ராஜூக்கு எதிராக ஆர்யாவுடன் கைகோர்த்து போராட்டத்தில் குதிக்கிறார். அந்தப் போராட்டத்தில் அனுஷ்காவுக்கு வெற்றி கிடைத்ததா? தோழி உயிர் பிழைத்தாரா..? எனும் கதையுடன் அனுஷ்கா., சைஸ் செக்ஸி எனும் நிறுவனம் ஆரம்பித்து, இயற்கை முறையில் எப்படி இளைக்கிறார் ? என்பதையும், ஆர்யா - அனுஷ்காவின் காதலையும் சொல்லி இருக்கிறது இஞ்சி இடுப்பழகி படத்தின் மீதிக் கதை!


பெரிய, பிரமாண்டமான இஞ்சி (?) இடுப்பழகியாக அனுஷ்கா தனது, ஸ்வீட்டி அலைஸ் சௌந்தர்யா பாத்திரத்திற்கு பக்காவாக பலம் சேர்த்து நடித்திருக்கிறார். பல்லை பிடித்து மாடு தரம் பார்ப்பது மாதிரி தன்னை பெண் பார்க்கும் என் ஆர்ஐ மாப்பிள்ளை வீட்டினரிடம் அனுஷ்கா கொதிக்குமிடங்களில் எரிமலையாக வெடித்திருக்கிறார்... என்றால் ஆர்யாவுடன் ஆரம்பத்தில் பெண் பார்க்க வந்த போது அவர் மீது காதல் ஏற்படாமல் விரட்டி அடித்துவிட்டு பின் துரத்தி, துரத்தி... ஆர்யாவை காதலிக்கும் இடங்களில் பனிமலையாக உருக வைக்கிறார். இவை எல்லாவற்றுக்கும் மேல் பிராடு பிரகாஷ்ராஜ் நிறுவனத்திற்கு எதிராக அவர், அறவழியில் நடத்தும் போராட்டங்கள் வித்தியாசம், விறுவிறுப்பு.


ஆர்யா டாக்குமெண்ட்டரி பட டைரக்டராக டாய்லெட்டும் ஆராய்ச்சியுமாக அனுஷ்கா தம்பி யாஹூ பரத்துடன் அலைவது டிராமாடிக்காக இருக்கிறது. மெகா சைஸ் அனுஷ்கா போதாதென்று சிம்ரன் எனும் ஸ்லிம் சோனல் சவ்ஹான்னுடனும் சைட் டிராக் ஓட்டுவது ஆறுதல். (ஆமாம், பின்னே ஆர்யான்னா சும்மாவா?!). ஆர்யாவுக்கும், அனுஷ்காவுக்கும் பெண் பார்க்கும் படலத்தில் ஏற்படாத காதல் பின்னர் ஏற்படுவது போன்று படமாக்கப்பட்டிருப்பது தமிழ் சினிமாவுக்கு புதுசாக இருக்கிறது!


சைஸ் சீரோ சத்ய ஆனந்த்தாக, பிரகாஷ் ராஜ் பிரமாதம். அரசியல்வாதிகளுக்கும், மீடியாக்காரங்களுக்கும் நிரந்தர எதிரி, விரோதின்னு யாரும் கிடையாது... கூப்பிடு நிஜம் நிரஞ்சனை என அவர் போகிற போக்கில் அடித்து விடும் பன்ச்சுகளில் தான் எத்தனை நிஜம்!


அனுஷ்காவின் வெள்ளாந்தி அம்மாவாக ஊர்வசி, மற்றொரு நாயகி ஸ்லிம் சிம்ரனாக சோனல் சவ்ஹான், அதிவ் சேஷ், ஆன்ட்ராய்ட் பாபா - பிரம்மானந்தம், மெளலி தாதா - கொல்லப்புடி மாருதி ராவ், பாபி -அலி, தனிகல்லபரணி, ராவ் ரமேஷ் உள்ளிட்ட ஒவ்வொருவரும் தாங்கள் ஏற்றிருக்கும் பாத்திரத்திற்கேற்ப பிரகாசித்துள்ளனர். அதில் அனுஷ்காவின் தம்பியாக வரும் யாஹூ பரத் ( விஜய் படத்தில் அசினின் உப்புமா பேமிலி தம்பியாக வருவாரே அவரேதான்... ) ஒவர் ஆக்டிங் பிரகாசம்! அடக்கி வாசிப்பது அவசியம்!


மரகதமணியின் இசை, நீரவ்ஷாவின் ஒளிப்பதிவு, பிரவின் புடியின் படத்தொகுப்பு... உள்ளிட்டவை இஞ்சி இடுப்பழகியை மேலும் ரசிக்க வைக்கின்றன என்றால் மிகையல்ல.


ஒல்லி தான் அழகு என நம்பிய என் பிரண்டு, சைஸ் சீரோ" வோட வாக்குறுதிகளுக்கு பலிகடா வாகிட்டா..... என்பதற்கு பதில் அனுஷ்கா, பலியாயிட்டா... என டயலாக் பேசுவது, பை-லாங்வேஜ் படமென்றாலும் படம் முழுக்க அனுஷ்கா- ஆர்யா (அனுஷ் மட்டும் என்னவாம்?) தவிர்த்து, மற்ற நட்சத்திரங்கள் எல்லோரும் தெலுங்கு முகமாகவே தெரிவது... உள்ளிட்டவை குறைகள். ஆனாலும், "எடை மிஷினுடன் சிறு வயது முதலே அப்பாவை இழந்த அனுஷ்காவுக்கு இருக்கும் பந்தத்தை, சொந்தத்தை அழகாக படமாக்கி இருப்பதில்... அந்த குறைகள் எல்லாம் ஒரளவு அடிபட்டு, ஒரு குண்டு பெண்ணின் மன உணர்வை மிக உணர்ச்சிகரமாக படம் பிடித்திருக்கிறார் இயக்குனர் கே.எஸ்.பிரகாஷ் ராவ் எனும் திருப்தி ஏற்படுவது தான் இப்படத்திற்கு கிடைத்த வெற்றி!"


மொத்தத்தில், "இஞ்சி இடுப்பழகி'யை குண்டு அனுஷ்காவிற்காக ரசிகர்கள், "கொஞ்சி மகிழ்வார்களா? பார்க்கலாம்!



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

இஞ்சி இடுப்பழகி தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in