ஆர்.கே.வின் மக்கள் பாசறை தயாரித்து வழங்க, பிரபல மலையாள இயக்குனர் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில், ஆர்.கே, நீத்து சந்திரா, இனியா, கோமல் சர்மா, சுஜாவாரூன்னி, நாசர், சுமன், பவன், ஆர்.கே.செல்வமணி, ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், மதன் பாப்.... உள்ளிட்ட ஒரு பெரும் நட்சத்திர பட்டாளம் நடிக்க, பெரும்பகுதி ஓடும் இரயிலேயே படமாகி வெளிவந்திருக்கும் படமே "வைகை எக்ஸ்பிரஸ்".
சென்னையில் டூ மதுரை செல்லும் "வைகை எக்ஸ்பிரஸ்" சிறப்பு இரவு ரெயிலின் ஏ /சி கூபேயில் பயணிக்கும் மூன்று இளம் பெண்கள் மர்மமான முறையில் இறந்து கிடப்பது திண்டுக்கல் - கொடைரோடு அருகே சகபயணிகளுக்கு தெரிய வருகிறது. உடனே ரயிலை நிறுத்தி போலீஸுக்கு தகவல் தெரிவிக்கின்றனர். அந்த மூன்று பெண்களில் ஒருவர், பெரும் ஜமீன் பரம்பரையை சார்ந்த துப்பாக்கி சுடும் வீராங்கனையான நீத்து சந்திரா, மற்றொருவர் டிவி நிருபர் கோமல் சர்மா, மேலும் ஒருவர் தென்னக இரயில்வே சேர்மனும், எம்.பியுமான சுமனது சமீபமாக மறைந்த மனைவியின் இளம் சகோதரி.
அந்த மூன்று பேரில், இரண்டு பேர் ஸ்பாட்டிலேயே இறந்து போக, நீத்துசந்திரா மட்டும் மூளைச்சாவு அடைந்து பெருங்காயத்துடன் உயிர்போகும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். இந்த கொலைகளை பற்றி துப்பு துலக்க முதலில் களம் இறங்குகிறது சாதாரண இரயில்வே போலீஸ் நாசர் தலைமையிலான டீம். ஒரு கட்டத்திற்கு மேல் அக்கொலை விசாரணை நகர மறுத்ததால், அதன்பிறகு அதுபற்றி விசாரிக்க ராக் எனும் ரெயில்வே சிறப்பு போலீஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஆர்.கே.வை களம் இறக்குகிறார் சதர்ன் இரயில்வே சேர்மனும் சிட்டிங் எம்.பி.யுமான சுமன். ஆர்.கே உடனடியாக அதேபெட்டியில் கொலை நடந்த அன்று பயணம் செய்த, கொடூர தீவிரவாதியான ஆர்.கே.செல்வமணி மீது சந்தேகப்பட்டு அவரை நெருங்கி, கைது செய்கிறார். ஆனால், அவர் அடித்து உதைத்துக் கேட்டும், இந்த கொலைகளை தான் செய்யவில்லை... என்றதும் அந்த ஏ/சி கூபேயில் உடன் பயணித்த மற்றவர்கள் மீது தனது சந்தேக கண்ணோட்டத்தை பதிக்கிறார் ஆர்.கே. இந்த கொலைகள் மற்றும் கொலை முயற்சிக்கான காரணத்தை பல்வேறு கோணங்களில் விசாரிக்கும் ஆர்.கே.வுக்கு அந்த கொலைகளுக்கான பின்னணியும், அதன் பின்னணியில் இருக்கும் அதிர்ச்சிகரமான தகவல்களும் கிடைக்கிறது. இறுதியில், அந்த இளம் பெண்களை கொன்ற குற்றவாளி யார்? ஒரே குற்றவாளியா ...? வெவ்வேறு குற்றவாளிகளா....? மூன்று கொலைகளையுமே செய்தது ? ஆண்கள் மட்டும்தானா ? அல்லது பெண்களுக்கும் பங்குண்டா...? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாகவும் , விறுவிறுப்பாகவும் வேகமாகவும் , விவேகமாகவும் விடை சொல்கிறது. திகில் திருப்பங்களுடன் கூடிய "வைகை எக்ஸ்பிரஸ்" படத்தின் மீதிக்கதை.
ஆர்.கே. மிகவும் துணிச்சலான ராக் எனும் இரயில்வே சிறப்பு பிரிவு போலீஸ் அதிகாரி சர்புதின் ரகுமான் ஆக ஒடும் இரயிலில் நடக்கும் இளம் பெண்கள் கொலைகேஸில் கச்சிதமாக துப்பறியும் கேரக்டரில் மிகவும் பொருந்தி நடித்திருக்கிறார்.
இளம் பெண்களின் கொலைக்கான காரணங்களுக்குரிய மர்ம முடிச்சுகளை அழகாக அவிழ்க்கும்போதும், குற்றவாளிகளை சமயோஜிதமாக நெருங்கும்
சமயத்திலும் படம் பார்க்கும் ரசிகனுக்குள் ., அடுத்து என்ன ? என்ன ..? எனும் திக் திக் திக் தேடலை ஏற்படுத்தி, ஜெயித்திருக்கிறார். மேலும், தீவிரவாதி ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட ,எதிரிகளை அடித்து துவம்சம் செய்யும் ஆக்ஷன் காட்சிகளிலும் அசத்தியிருக்கிறார். ஆனால் ., கோட் , சூட் .... என அன்யூனிபார்ம் போலீஸ் அதிகாரியாக ஜய்ஜாண்டிக்காக அசத்தும் இவர் ., டயலாக் டெலிவரியில் ., அதிலும் குறிப்பாக ஆங்கில வார்த்தைகளை பிரயோகிக்கும் போது மட்டிலும் பட்டிகாட்டானாக பல் இளிப்பது ., படத்தில் இடம் பெறும் அந்த காட்சியின் சீரியஸ்னஸ்ஸை லெஸ் செய்து ரசிகனை லாப் செய்ய வைத்து விடுவது கொடுமை. இந்த விஷயத்தில் ஆர்.கே அடுத்தடுத்த படங்களிலாவது கவனமாக இருந்தால் இன்னும் ஜொலிக்கலாம்.
.
இரட்டை வேடங்களில்., வரும் நீத்து சந்திரா, தனது இயல்பான நடிப்பால் இரண்டு கேரக்டரிலும் வெவ்வேறு வகையில் மிளிர்ந்துள்ளார். அவரை சுற்றி அவராலேயே ஏற்படுத்தப்பட்டுள்ள மர்மங்கள் விலகும் கிளைமாக்ஸ் காட்சி , எதிர்பாராத ட்விஸ்ட் என்பது இப்படத்திற்கு வலு சேர்க்கிறது.
டிவி நிருபராக வரும் கோமல் சர்மாவும் கோணல் மாணல் அழகில் ரசிகனை குதூகளப்படுத்துகிறார். நடிகையாக வரும் இனியா அவரது லொட லொட அக்காவாக வரும் காமெடி அர்ச்சனா, ஆர்.கே.வுடன் பழனி மலைக்கு மாலை போட்ட ஆ சாமியாக படம் முழுக்க வலம் வரும் போலீஸ்அதிகாரி நாசர் சீரியஸ் படத்தில் பெரும் கலகலப்பூட்டுகிறார்.
இரயில்வே சேர்மன் கம் கொலைபாதக எம்.பியாக வரும் சுமன், ஆர்.கே.விற்கு கூடுதல் பொறுப்புகள் கொடுக்கப்பட்டு வருவதால் கடுப்பாகும் கடத்தல்கார ரயில்வே போலீசாக வரும் ஜான்விஜய், சீட்டு கட்டும் கையுமாக டி.டி.ஆராக வரும் எம்.எஸ்.பாஸ்கர், டாக்டர்களாக வரும் பவன் , சுஜா வாருணி, தீவிரவாதியாக வரும் ஆர்.கே.செல்வமணி, நடிகையின் அக்கா புருஷன் மதன் பாப், காதல் தோல்வி வாலிபனின் தந்தையாக வரும் சிங்கமுத்து... என படத்தில் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள், எண்ணற்ற நட்சத்திரங்கள் வந்தாலும், அவர்கள் அனைவருக்கும் நடிக்கவும் வாய்ப்பு கொடுத்திருப்பது, படத்திற்கு கூடுதல் வலு சேர்க்கும்படி இருக்கிறது.
"ஒரு சட்டசபையையே சட்ட பாக்கெட்டுக்குள் வைத்து விட்டு... சுத்தியவங்க... எல்லாம் கூட சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது....", "அக்கியூஸ்ட்டுங்க திருந்தினாக் கூட அரசியல்வாதிங்க விட மாட்டிங்களே..." என்பது உள்ளிட்ட வசன வரிகளும் படத்திற்கு பக்கா பலமாய் அமைந்துள்ளது.
சஞ்சீவ் குமாரின் ஒளிப்பதிவும், இரயிலின் வேகத்திற்கு ஈடு கொடுத்து விவேகமாகவும் , வித்தியாச மாகவும் வேலை செய்திருக்கிறது. வாவ்!
அதேபோன்று இசையாளர் தமனின் பின்னணி இசையில் நாமும் அந்த இரயிலில் பயணிக்கும் பிரம்மையை ஏற்படுத்துவது படத்திற்கு விறுவிறுப்பு கூட்டு கிறது.
ஓடும் ரெயிலில் நடக்கும் ஒருகொலை முயற்சி, மற்றும் இரண்டு இளம் பெண் கொலைகள்... மற்றும் அதை தொடர்ந்து நடைபெறும் பரபரப்பான விசாரணை, விசாரணை வளையத்தில் சிக்கும் பிரபலங்கள்... என்று இப்படத் தொடக்கத்திலேயே புயல் வேகத்தில் கிளம்பும் வேகம், "வைகை எக்ஸ்பிரஸ்" எனும் பெயருக்கு ஏற்ப காட்சிக்கு காட்சி கூடி கடைசி வரை குறையாமலேயே இயக்குனர் ஷாஜி கைலாஷின் இயக்கத்தில் சென்றுள்ளது பாராட்டுதலுக்குரியது. அதேநேரம் வைகை எக்ஸ்பிரஸ் என்பது சென்னை - மதுரை இடையே நிஜத்தில் தினமும் ஓடும் பகல்நேர இரயில் வண்டி, அதே பெயரில் இரவில் சிறப்பு இரயில் இப்படக் கதைப்படி இயக்கப்படுவதும், அதுவே இப்பட டைட்டில் என்பதும் லாஜிக்காக ரொம்பவே இடிக்கிறது. சென்னை - மதுரை இடையே நிறைய சிறப்பு இரயில்கள் இயக்கப்படலாம். ஆனால், அதற்கு தினமும் ரெகுலராக இயக்கப்படும் "வைகை எக்ஸ்பிரஸ்" எனும் பெயர் சூட்டப்படாது... என்பதே நம் வாதம் . ஆனாலும் , மொத்தப்பட மும் ஆரம்பித்ததும், முடிவதும் தெரியத அளவிற்கு விறுவிறுப்பான, எதிர்பாராத திருப்பங்கள் நிரம்பிய திரில்லிங்கான அனுபவத்தை
கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஷாஜி கைலாஷ்.
ஆகமொத்தத்தில், வேகம், விவேகம் முழுக்க, முழுக்க நிரம்பிய ஆர்.கே.வின் "வைகை எக்ஸ்பிரஸ்' - வசூல் எக்ஸ்பிரஸ் ஆக வாரி குவித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!"